ராம் பாபு புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘நான் ஈ’ சுதீப், நித்யா மேனன் , நாசர் , பிரகாஷ் ராஜ், சரத் லோகிஸ்தவா , சாய் ரவி ஆகியோர் நடிப்பில்
சிவகுமார் என்பவரின் கதைக்கு கே எஸ் ரவிக்குமார் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் முடிஞ்சா இவன புடி .
ரசிகர்களை இந்தப் படத்தால் புடிக்க முடியுமா:? பார்க்கலாம் .
ஒரு அயோக்கிய பண முதலைக்கு (முகேஷ் திவாரி) சொந்தமான 120 கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை அதி நவீன முறையில் அதிரடியாகக் கொள்ளை அடிக்கிறான் ஒருவன்( கிச்சா சுதீப் ).
அடுத்த காட்சியில் அவனே மிக எளிய தோற்றத்தில் சிறிய அளவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தும் நேர்மையான இளைஞனாக தோன்றுகிறான் .
பணம் இழந்தவருக்கு வேண்டிய ஒரு போலீஸ் அதிகாரி (சாய் ரவி) அவனைக் கொண்டு போய் கொடூரமாக அடித்துச் சித்திரவதை செய்ய ,
‘கொள்ளையடிப்பவன் நான் இல்லை . அவன் என் அண்ணன் சிவம் . என் பெயர் சத்யம் ” என்கிறான் .
அவனது பரிதாப நிலையைப் பார்த்து கமிஷனரே (நாசர்) அவனுக்காக வருததப்பட்டு, , சித்திரவதை செய்த அதிகாரியை கண்டிக்கிறார் .
அவனுக்கும் அவனிடம் நிலம் வாங்க வரும் ஒரு பெண்ணுக்கும் (நித்யா மேனன் ) காதல் வருகிறது .
சத்தியத்துக்கு இவ்வளவு பிரச்னைகளை உண்டாக்கும் சிவத்தை நேரில் பார்த்தால் சும்மா விடக் கூடாது என்று அவள் காத்திருக்கிறாள்.
இந்நிலையில் இன்னொரு பண முதலையின் (சரத் லோகிஸ்தவா) கறுப்புப் பணம் 150 கோடி ரூபாயை கொள்ளை அடிக்கிறான் ‘சிவம்’.
இரண்டு பண முதலைகளின் அடியாட்கள் மற்றும் போலீசின் தேடல், சத்யம் வாழ்வில் அவனது காதலில் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது .
‘சிவம்’ கொள்ளை அடிக்க என்ன காரணம் ? அவனை பிடிக்க முடிந்ததா ? என்பதே இந்தப் படம் .
கே எஸ் ரவிக்குமாரே இயக்கிய வில்லன் படத்தை நிறைய நினைவூட்டும் கதை திரைக்கதை .
ஆரம்பத்தில் வரும் பணம் கொள்ளையடிக்கும் காட்சி முதற்கொண்டு படத்தை படு கமர்ஷியலாக எடுத்து இருக்கிறார் .
சுதீப் அட்டகாசமாக நடித்து இருக்கிறார் . மற்ற கன்னட நடிகர்களை விட தமிழை நன்றாக பேசுகிறார் .
நித்யா மேனன் மிகச் சிறந்த நடிப்பு . வீட்டு மனை வாங்கும் இடத்தில் ” நீங்க ரொம்ப அழகு ” என்று சுதீப் சொல்லும்போது , நித்யா மேனன் கொடுக்கும் ரியாக்ஷன்…… கிளாஸ்ஸ்ஸ்ஸ் !
பிரகாஷ் ராஜ் உருவாக்கும் ‘அந்த’ பாத்திரப் படைப்பு அருமை .
ராஜ ரத்னத்தின் ஒளிப்பதிவு படத்தின் கமர்ஷியல் தன்மைக்கு பெரிதும் உதவி செய்து இருக்கிறது .
இமான் இசையில் ‘போதவில்லையே…..’ பாடல் இனிமையிலும் இனிமை
சண்டைக் காட்சிகளில் பட்டையைக் கிளப்புகிறார் சண்டை இயக்குனர் கனல் கண்ணன் .
தன் அப்பாவை பிசினசில் நண்பர்கள் ஏமாற்றினார்கள் என்பதற்காக நாயகன் கொள்ளையடிப்பதை நியாயப் படுத்துவதை ஏற்க முடியவில்லை
படத்தில் வரும் எல்லா விசயங்களும் மிக சுலபமாக யூகிக்க முடிவதாகவே இருப்பதால் காலைக் காட்சி பார்த்த ‘அரைத்த மாவு’ படத்தை மதியமே பார்க்க வேண்டிய நிலைக்கு ஆளானது போல,
ஒரு சலிப்பு படம் துவங்கிய பத்தாவது நிமிடத்தில் இருந்து கடைசிவரை வருவதை தவிர்க்க முடியவில்லை
முடிஞ்சா இவன புடி … பழைய கை; புதிய பிடி