சாந்தனு , ஸ்ருஷ்டி டாங்கே , ஸ்கந்தா அசோக், அப்புக்குட்டி , லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடிப்பில் ஷமயாலயா கிரியேஷன்ஸ் சார்பில் பொள்ளாச்சி வி.விசு மற்றும் அவரது சகோதரர் பொள்ளாச்சி கோல்டு வி. குமார் இருவரும் தயாரித்து இருக்கும் படம் முப்பரிமாணம்.
படத்துக்கு இசை ஜி வி பிரகாஷ். ஒளிப்பதிவு கவிஞர் அறிவுமதியின் மகன் ராசா மதி . .
கபாலி படத்தோடு இணைத்து திரையரங்குகளில் இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. படத்தில் வரும் ஹேப்பி நியூ இயர என்ற பாடலை ஏ ஆர் ரகுமான் வெளியிட்டார் .
படத்தின் பாடல்கள் , முன்னோட்டம் இவை தவிர படம் பற்றி அனைத்து நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பேசும் காட்சித் தொகுப்பை திரையிட்டார்கள் .
முன்னோட்டம் சிறப்பாக இருந்தது . பாடல்கள் நல்ல லொக்கேஷன்களில் நல்ல படமாக்கலுடன் நன்றாக இருந்தது .
இதுவரை அமையாத வித்தியாசமான தோற்றத்தில் படத்தில் இருக்கிறார் சாந்தனு. ஸ்ருஷ்டியும் அப்படியே.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் விசு ” இது எங்களுக்கு முதல் படம் . அதிரூபன் கதை சொன்னபோது எங்களுக்கு மிகவும் பிடித்தது .
ஏ ஆர் ரகுமான் சார் ஒரு பாடலை வெளியிட்டதும் , ரஜினி சார் பாடல்களை வெளியிட்டுக் கொடுத்ததும் எங்களுக்கு மிகப் பெரிய பெருமை . படம் மிக சிறப்பாக வந்துள்ளது ” என்றார்
நடிகர் ஸ்கந்தா பேசும்போது
படத்தில் நடித்து இருக்கும் கலைஞர் டிவியின் மேலாளர் பெரைரா பேசுகையில் , ” பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த அதி ரூபன் கோல்டு மெடல் பெற்ற திறமைசாலி .
எங்கள் தொலைகாட்சி மேலாளரும் பிலிம் இன்ஸ்டிடியூட்டின் முன்னால் முதல்வருமான அமிர்தம் , ‘அதிரூபன் முன்னரே படம் பண்ணி இருக்க வேண்டியவர் .
அவ்வளவு திறமைசாலி’ என்று பாராட்டினார் . அதற்கேற்ப படத்தை அதிரூபன் சிறப்பாக உருவாக்கி உள்ளார் ” என்றார் .
நடிகர் அப்பு பேசுங்கால் ” இந்தப் படத்தின் கதை , திரைக்கதை மிக சிறப்பாக இருக்கிறது . எங்கள் எல்லோருக்கும் நல்ல கேரக்டர் .
அதி ரூபன் சிறப்பாக இயக்கி இருக்கிறார் .
இப்படி ஒரு நல்ல படத்தை இயக்கிய தயாரிப்பளருக்கு நன்றி ” என்றார்
“பொதுவாக நான் விழாக்களில் அதிகம் பேச மாட்டேன் . ஆனால் இந்த விழாவில் பேச விரும்புகிறேன் ” என்று ஆரம்பித்த ஸ்ருஷ்டி டாங்கே ” டைரக்டர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் .
ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரிடாமாவது பேசினால் கூட அங்க என்ன பேச்சு என்பார் . சூட்டிங் சமயத்தில் யாரிடமும் போன் பேசக் கூடாது . ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தா அந்த மூடலையே இருக்கணும்பார் . நான் அழுதுட்டேன்
பதிமூணு நாள் முடிஞ்ச நிலையில் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து டைரக்டர்கிட்ட போய் , நான் இந்தப் படத்துல இருந்து விலகிக்கறேன் . ஆளை விடுங்கன்னு சொன்னேன் .
அவர் அமைதியா இன்னும் ரெண்டு நாள் நடி. எடுத்தவரை ரஷ் காட்டுறேன் . பிடிச்சா தொடர்ந்து நடின்னு சொன்னார் .
ரஷ் பார்த்தப்போ அசந்துட்டேன் . அப்புறம் முழுசா நடிச்சுக் கொடுத்தேன் ” என்றார்
வெகு இயல்பாக பேசிய சாந்தனு ” காட்சியை எடுக்கும்போது நினைச்சது வரணும் என்பதில் இயக்குனர் அதி ரூபன் உறுதியாக இருப்பார்.
ஷூட்டிங் ஆரம்பிக்கணும்னா ரெண்டு மூணு நாள் முன்னாடியே அந்த பகுதிக்கு போயிடுவோம் . அந்த சூழலுக்கு ஏற்ப நடை உடை பாவனை பாடி லேங்க்வேஜ் எல்லாம் மாற்றுவார் .
எழுபது கிலோ எடையுள்ள ஒரு ஸ்டன்ட் நடிகரை தூக்கிக் கொண்டு போய் நான் சுவற்றில் மோதுகிற ஒரு காட்சியில் நடிக்கும்போது எனக்கு காலில் பலத்த அடி பட்டது .
ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடிக்கும்போது எனக்கு நல்ல சோகமான மூடு வரவேண்டும் என்பதற்காக ஒரு மலை உச்சியில் பின்பக்கம் அதளபாதாளம் உள்ள ஓர் இடத்தில் உட்கார வைத்து ,
ஹெட் போனில் , சேது படத்தில் வரும் எங்கே செல்லும் இந்தப்பாதை பாடலை மீண்டும் மீண்டும் இரண்டு மணி நேரம் கேட்க வைத்தார் .
இது எல்லாம் படத்தின் இரண்டாம் பகுதி காட்சிகளுக்கு மட்டும்தான் . முதல் பாதியில் ஷூட்டிங் அவ்வளவு ஜாலியாக இருந்தது .
படத்தில் வரும் ஹேப்பி நியூ இயர் பாடலில் நடித்துக் கொடுத்த முப்பதுக்கும் மேற்பட்ட பிரபல நடிக நடிகையருக்கும் நன்றி . படத்தில் அது ஸ்கந்தா ஆடுவது போல வரும் .
ஆனால் புரமொஷனுக்காக நான் ஆடுவது போலவும் எடுத்தார்கள் . எனவே அவர்கள் எல்லோரும் முகம் சுளிக்காமல் இரண்டு முறை நடித்துக் கொடுத்தது நெகிழ்ச்சியான விஷயம் .
பாடலை ஏ ஆர் ரகுமான் சார் வெளியிட்டதும் பாடல்களை ரஜினி சார் வெளியிட்டதும் மிகுந்த மகிழ்ச்சியான விஷயம் . டிரைலரை ரஜினி சாரை பார்க்க வைததபோது
“சூப்பர் சூப்பர் … இன்னொரு தடவை போடுங்க” என்று கேட்டுப் பார்த்து மனதார பாராட்டினார் சூப்பர் ஸ்டார் . சிலிர்த்துப் போனோம் .
இது என் கேர்யரில் ஒரு புதிய நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்பது இப்போதே புரிகிறது .
இது போன்ற எளிமையான தயாரிப்பளர்களை எங்கும் பார்க்க முடியாது . ஷூட்டிங் ஸ்பாட்டில் வேடிக்கை பார்க்க வரும்ம் கும்பலை ஒதுக்கும் கஷ்டமான வேலையை ,
எந்த கவுரவமும் பார்க்காமல் அவர் நடந்து கொண்டதை பார்த்து அசந்து போய் நின்றேன் . அதே நேரம் படத்துக்காக கேட்டதை எல்லாம் தயங்காமல் கொடுத்தார்கள் .
அப்படிப்பட்ட தயாரிப்பலர்களுக்கு மறக்க முடியாத நன்றி ” என்றார் .
மிகுந்த நெகிழ்ச்சியோடு நிறைவுரை ஆற்றிய இயக்குனர் அதிரூபன் “முதலில் என் குடும்பத்துக்கு நன்றி . அவர்கள் இல்லை என்றால் நான் இல்லை.
படத்தின் கதையை மட்டுமல்லாது என் படமாக்கலையும் புரிந்து கொண்டு நான் கேட்டதை எல்லாம் செய்து கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.
இது போன்ற தயாரிப்பாளர்கள் இல்லாவிட்டால் நல்ல படங்கள் வெற்றிப் படங்களாக வர முடியாது . அவர்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் .
அடுத்து சாந்தனு . படத்தில் மிகுந்த சிரத்தையும் உழைப்பையும் கொடுத்து நடித்துக் கொடுத்தது மட்டுமல்ல , நடிப்புக்கு வெளியேயும் இந்தப் படத்துக்காக ஓடி ஓடி உழைத்தார் . எல்லா இடத்துக்கும் போனார் .
ஹேப்பி நியூ இயர் பாடலில் நடிக்க அவ்வளவு நடிக நடிகையரையும் அழைத்து வந்தார்
ஏ ஆர் ரகுமானுக்கு பாடலை வெளியிட நேரம் கேட்டு, நீண்ட மெயிலை அனுப்பினார். ரகுமான் சார் ஷ்யூர் என்று ஒற்றை வார்த்தை பதிலில் சம்மதம் சொன்னார் .
ரஜினி சார் டிரைலரை ரசித்து இன்னொரு முறை பார்த்துப் பாராட்டியது எல்லாம் மறக்க முடியாத அனுபவம் .
சிரமங்கள் எல்லாம் படம் நன்றாக வர வேண்டும் என்பதற்கான சிரமம்தான் .
சாந்தனு, ஸ்ருஷ்டி டாங்கே இருவருக்கும் இந்தப் படத்துக்கு பிறகு புதிய உயரங்களை அடைவார்கள் .
இந்தப் படம் எல்லா ரசிகர்களும் பார்த்து ரசிக்கிற மனதுக்கு பிடித்த படமாக இருக்கும் ” என்றார் .
வாழ்த்துகள் !













