தமிழ்த் திரை இசைக்கு என்று நீண்ட நெடிய பெருமையும் பாரம்பரியமும் உண்டு . எத்தனையோ அற்புதமான திலகங்கள், மன்னர்கள், ஞானிகள், புயல்கள் தங்கள் இசைத் திறமையால் அற்புதமான பாடல்களை இங்கே கொடுத்து இருக்கிறார்கள் .
அந்த வரிசையில் வைத்துப் பாரட்டத்தக்கவராக இருக்கிறார் இசை அமைப்பளர் ஆர் எஸ் ரவிப்பிரியன்.
பல சாதனைகளை செய்தாலும் இன்னும் குடத்தில் இட்ட விளக்காக இருக்கும் நிலையிலும் அது வீரியம் மிக்க வெளிச்ச விளக்காக இருப்பது அவரது சாதனைகளில் தெரிகிறது . அது என்ன என்று நீங்களும் பாருங்களேன் .
சாத்தான்குளத்தை சேர்ந்த ரவிப்பிரியன் கனடாவுக்குப் போய் பின் அங்கிருந்து தமிழ்த் திரை இசைக்கு வந்தவர் . இவரது அம்மா வழித் தாத்தா இசைத் துறையில் இருந்தவர் . எனவே இவருக்கு இசை தாய்வழிச் சொத்து.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இவர் முதலில் காற்று என்ற இசை ஆல்பத்துக்கு இசை அமைத்தார் . முதல் பந்திலேயே சிக்சர் என்பது போல, அந்த முதல் ஆல்பத்திலேயே எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி, ஸ்வர்ணலதா , கிருஷ்ணராஜ், உன்னி கிருஷ்ணன், ஸ்ரீநிவாஸ், சுஜாதா, உன்னி மேனன், ஹரிணி, திப்பு , மனோ , எஸ் பி பி சரண், யுகேந்திரன், அனுபமா, ஸ்ரீராம், ஃபெபி மணி, ராகேஷ், ரஞ்சித், ஹரீஷ் ராகவேந்திரா, டாக்டர் நாராயணன், லாப்சன் ராஜ்குமார், ஸ்ரீவர்த்தினி ஆகிய இருபத்தி இரண்டு பாடகர்களின் குரலில் பா விஜய், சினேகன், கலைக்குமார் ஆகியோர் எழுதிய பதினொரு பாடல்கள் கொண்ட ஆல்பம் அது .
காதல் என்ற உணர்வை மையக்கருவாகக் கொண்டு உருவான அந்த ஆல்பத்தில் மூன்று பாடல்களை ஆர் எஸ் ரவிப்பிரியனே எழுதியும் இருந்தார் . தவிர அந்த முதல் முயற்சியிலேயே கர்நாடக இசை, இந்துஸ்தானி, அரபிக், கஜல், வெஸ்டர்ன் என்று உலகின் முக்கிய இசை வடிவங்களில் அவர் இசை அமைத்து இருப்பதைக் கண்டு எஸ் பி பி ஜானகி இருவரும் ஆர் எஸ் ரவிப்பிரியனை மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்கள்.
2002 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று சரிகம (ஹெச் எம் வி ) நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த ஆல்பம் உலகெங்கும் பாராட்டப்பட்டதோடு, இசைத் தளபதி என்ற பட்டத்தையும் அவருக்குப்பெற்றுத் தந்தது .
அடுத்து மகாகவி சுப்ரமணிய பாரதியின் பாடல்களுக்கு மேற்கத்திய, ஹிந்துஸ்தானி,சிம்பனி , ஃபோக், ஜாஸ், பாப், ராக், கர்நாடக இசை மற்றும், பைலா ஆகிய பல வித இசை வடிவங்களில் இசை அமைத்து POET என்ற இசை ஆல்பத்தை உருவாக்கினார் ஆர் எஸ் ரவிப்பிரியன் .
2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி அன்று கனடாவில் உள்ள பதிமூன்று மாகாணங்களில் ஒன்றான ஒன்டோரியாவின் தலைநகரான டொராண்டோவில் அமைந்த ஸ்கார்பரோ மாவட்டத்தில் உள்ள மக்கள் மையத்தில் அந்த இசைத் தொகுப்பை வெளியிட்டார் ஆர் எஸ் ரவிப்பிரியன்.
பல ஊடகங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பல கலைஞர்கள் முன்னிலையில் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் துணை நிறுவனமான தமிழினி இன்டர்நேஷனல் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அந்த இசைத் தொகுப்பு மகாகவியின் தொலைநோக்குச் சிந்தனைகளை உலகுக்குச் சொல்லும் வகையில் அமைந்து எல்லோராலும் பாராட்டப்பட்டது.
இது தவிர நேஷன், ஜாஸ், இது, போன்ற ஆல்பங்களோடு, ஐங்கரன் இன்டர்நேஷனல் வெளியிட்ட டச் மீ, சரிகம வெளியிட்ட சர்வம் சக்தி மயம், இவற்றோடு மெமரீஸ் என்ற இந்தி இசை ஆல்பத்தையும் வெளியிட்டார் இவர். . மெமரீஸ் ஆல்பத்தில் இவரது இசையைக் கேட்ட ஏ ஆர் ரகுமான் ”எனக்கு போட்டியா நீ வருவ;; என்று பாராட்டி இருக்கிறார்
காற்று மற்றும் POET ஆல்பங்களை வெளியிட்ட போதே இவருக்கு மெதுவாக உன்னைத் தொட்டு, பிளஸ் ஒன் பிளஸ் டூ ஆகிய படங்களுக்கு இசை அமைக்க வாய்ப்பு வந்தது.
இவர் இசையில் உருவான சாந்தன் , மேகம் ஆகிய தமிழ்ப் படங்களில் மேகம் நூறு நாள் கண்டது . இவர் இசை அமைத்த THE STRIP MALL என்ற ஆங்கிலப் படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான விருது அமெரிக்காவின் ஹவாய் மாநிலத் தலைநகரான ஹானலூலூ திரைப்பட விழாவில் கிடைத்தது .
இப்போது மதிவதம், கரி மூட்டம், சூரியனும் சூரிய காந்தியும் , தினசரி மூன்று காட்சிகள் , Hi5 ஆகிய தமிழ்ப் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இதில் தினசரி மூன்று காட்சிகள் பேய்ப்படம். அண்மையில் இசை வெளியீடு நடந்த Hi5 தமிழ், தெலுங்கு , கன்னட மொழிகளில் விரைவில் வெளிவரவுள்ளது.
நல்ல பாடல்கள் உருவாக இசையமைப்பாளருக்கும் கவிஞருக்கும் நல்ல புரிதல் இருக்க வேண்டும் என்பதற்கேற்ப ஆர் எஸ் ரவிப்பிரியனும் அவரது தோழியான கவிஞர் ஷெண்பாவும் சேர்ந்து பாடல்களை உருவாக்குகிறார்கள் . மற்ற கவிஞர்கள் ஆர் எஸ் ரவிப்பிரியன் இசையில் பாடல்கள் எழுதினாலும் பல பாடல்களை ஷெண்பா எழுதுகிறார்.
“எங்களுக்குள் நட்பு இருப்பதால் வேலை செய்வது சுலபமாக இருக்கிறது . பாடல் எழுதி மெட்டுப் போடுவதும் உண்டு . மெட்டுக்கு இசை அமைப்பதும் உண்டு . மொத்தத்தில் பாடல் நன்றாக வரவேண்டும் . அதுதான் முக்கியம் “என்று இருவரும் கூறுகின்றனர் .
” ஒரு நல்ல பாடலை இசையை மட்டும் சொல்லி லாலா லாலா என்று பாடிக்காட்ட முடியாது. வரிகளோடு பாடினால்தான் கேட்க முடியும் ” என்று இசை அமைப்பாளர் ஆர் எஸ் ரவிப்பிரியன் கூற, ” என்னதான் நல்ல வரிகள் இருந்தாலும் இசை முக்கியம்” என்கிறார் ஷெண்பா .
இந்த சிறந்த புரிதல் காரணமாக இருவரும் சேர்ந்து பொதுவாக பாடல்கள் உருவாக்கி அதை நடிகர்கள் நடனக் கலைஞர்களை வைத்து படமாக்கி இசையும் கவியும் என்ற யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்கிறார்கள் .
“அண்மையில் இவரது இசையில் சிவ கங்கா என்ற கவிஞர் எழுதிய அடைமழை என்ற ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது “என்று ஷெண்பா கூற, “நான் மெல்லிசை மன்னரின் தீவிர ரசிகன் . நல்ல மெட்டுகள்தான் பாடல்களை காலம் கடந்து வாழச் செய்யும் ” என்கிறார் ஆர் எஸ் ரவிப்பிரியன்.
குன்றேறிய விளக்காக ஜொலிக்க வாழ்த்துகள்.
