லத்தி @ விமர்சனம்

ராணா புரடக்சன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் விஷால், சுனைனா , ரமணா  நடிப்பில்  அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கி இருக்கும் படம் லத்தி .

போலீஸ்காரர்களிடம் துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் இருந்தாலும் வெகு ஜன மக்களைப் பொறுத்தவரை லத்திதான் போலீஸ் ஆயுதம். அந்த லத்தி இருப்பது கான்ஸ்டபிளிடம்.  ஏனெனில் எந்த பிரச்னையின் போதும் நேரடியாக மக்களையும் குற்றவாளிகளையும் பொது இடத்தில் முதலில் எதிர்கொள்வது பெரும்பாலும் கான்ஸ்டபிள்தான். அந்த கான்ஸ்டபிள் கம்பீரமாகவும் நேர்மையாகவும் இருந்து விட்டால் அந்த லத்திக்கு முன்னால் வேறு எந்த ஆயுதமும் இணை இல்லை. 
 
அப்படி ஒரு கான்ஸ்டபிள் விஷால். ஒரு பெண்ணிடம் தவறு செய்த பெரிய இடத்து  இளைஞன் ஒருவனை அவர் கண்டித்த நிலையில் அந்தப் பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட , அவனை ஸ்டேஷனில் வைத்து நையப்புடைக்கிறார். ஆனால் கற்பழித்தது அவன் இல்லை என்பது உறுதியாக, அதனால் சஸ்பென்ட் செய்யப்படுகிறார். 
 
நர்சாகப் பணிபுரியும் அன்பான மனைவி (சுனைனா) துணையோடு  மீண்டும் பணிக்கு சேர முயலும் நாயகனுக்கு , மகன் (லிரிஷ் ராகவ்) ஆசைப்படி பள்ளிக் கூடத்துக்கு போலீஸ் யூனிஃபார்மோடு போய் மகனை அழைத்து வர முடியாத வருத்தம் . மனைவியிடம்  செவிலிச் சேவை  பெறும்  ஒரு பெண்மணியின் (வினோதினி )  கணவர் (தலைவாசல் விஜய்) போலீஸ் உயர் அதிகாரி. அவர் தலைமயில் பணியாற்றிய காலத்தில் நாயகன் சிறப்பாகச் செயல்பட்டு இருக்க, அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க, அவர் மேலதிகாரியிடம்( பிரபு ) சஸ்பென்ஷனை திரும்பப் பெறச் செய்ய , மீண்டும் பணிக்குப் போகிறார் நாயகன் . 
 
அமைச்சர்களே நடுங்கும் அதிகார பலம், பண பலம் , அளவில்லாத அலைகடல் போல ஆட்கள் கொண்ட படை பலம்  கொண்ட சற்றும் மனிதபிமனமில்லாத அயோக்கிய  தாதா  ஒருவரின் மகனும் அப்பனை விட பல மடங்கு மிருகமுமான ஒருவன் (ரமணா) பல கொலைகளும் அயோக்கியத்தனங்களும் செய்யும் நபர் . 
 
மேலதிகாரியின் மகளிடம் (மிஷா) அவன் அசிங்கமாக நடந்து கொள்ள, அவனை தண்டிக்க மேலதிகாரியால் முடியவில்லை. காரணம் தாதா தன் மகனை மந்திரி ஒருவரின் மகளுக்கே மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்திருக்கும் நிலைக்கு உயர்ந்து இருப்பதுதான் . 
 
எனவே அவனை சட்டத்துக்கு அப்பாற்பட்டு தண்டிக்க முடிவு செய்யும் அந்த மேலதிகாரி , தன்னால்  சஸ்பென்ஷன் முடிந்து வேலைக்கு போன நாயகனை அழைத்து , தாதா மகனின் முகத்தை மறைத்துக்  கட்டி விட்டு . லத்தியால் அடித்து நொறுக்க வைக்கிறார் . அது மட்டுமின்றி நாயகனின் தலையை மட்டும்  மறைத்து விட்டு அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் ஏற்ற , தலை இல்லாவிட்டாலும் தோற்றம், யூனிபார்ம் உடையில் உள்ள பெயர் , அப்போது நாயகனுக்கு வந்த ரிங் டோன் பாடல் இவைகளை வைத்து  நாயகனை  நெருங்குகிறது தாதாக்கள் பெரும்படை. 
 
அந்தப் படையிடம்  கட்டுமான வேலை நடக்கும் கட்டிடம் ஒன்றில் , பயம் வந்தால் வலிப்பு வரும் மகனோடு,  நாயகன் சிக்கிக் கொள்ள, நடந்தது என்ன என்பதே லத்தி . 
 
படத்தின் நாயகன் கேரக்டருக்கு செஞ்சு வச்ச…. ம்ஹும் செதுக்கி வச்ச சிலை மாதிரி இருக்கிறார் விஷால். சண்டைக் காட்சிகளில் உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார் . பிரம்மிக்க வைக்கிறார். உணர்ச்சிகரமாக நடித்தும் இருக்கிறார் . விஷாலின் ஈடுபாடு பாராட்டுக்குரியது . 
 
அறிமுக இயக்குனர் வினோத் குமார் சிறப்பான முறையில்  படமாக்கி இருக்கிறார். மகனுக்கு அம்மா வழியே நம்பிக்கை  ஊட்டும்படியான காட்சிகள் சிறப்பு. தனித்தனி பிரேம்களில் வரும் நபர்கள் ஒரு இடத்தில்  கட் இல்லாமல் ஒரே பிரேமில் இயல்பாக நிற்கும்படியான உத்தி உட்பட பாராட்ட விஷயங்கள் உண்டு. 
ரமணா வெறி பிடித்த வில்லனாக வருகிறார் . அந்த வெறியையும் ரசித்து செய்யும் தாதாவாக வரும் சன்னியும் சிறப்பு. 
 
சுனைனா இயல்பு. சிறுவன் ராகவ் ஈர்க்கிறான் . 
 
பால சுப்ர மணியெத்தின் ஒளிப்பதிவும் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் தரம் . 
 
பாசக் கதை சொல்வதா பகைக் கதை சொல்வதா என்பதில்  இருக்கும் தடுமாற்றம், அதீத சினிமாத்தனம் இவை திரைக்கதையில் அமைய வேண்டிய உயிர்ப்பையும் யதார்த்தத்தையும் பின்னுக்குத் தள்ளி விட்டது . மேலதிகாரியே அடையாளம் கண்டு பிடிக்க வசதியாக வீடியோவை சமூக வலை தளத்தில் போடுவது எல்லாம் அநியாயம் . 
 
எனினும் ஆக்ஷன் , செண்டிமெண்ட் பந்தி … இந்த லத்தி 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *