அவ்னி மூவி மேக்கர்ஸ் சார்பில் இயக்குனர் சுந்தர் சி தயாரிக்க, சுந்தர் சி, பூனம் பஜ்வா , சதீஷ், வி டி வி கணேஷ் சிங்கம் புலி , யோகி பாபு , ரவி மரியா ஆகியோர் நடிக்க,
சுந்தர் சி யின் இணை இயக்குனரும், அரண்மனை , மத கஜ ராஜா உள்ளிட்ட படங்களின் திரைக்கதையில் பங்களிப்பு செய்தவருமான . வெங்கட் ராகவன் இயக்கி இருக்கும் படம் முத்தின கத்திரிக்கா
ஆக, சிஷ்யருக்கு குரு கொடுத்திருக்கும் படம் இது
மலையாளத்தில் ஜிபு ஜேக்கப் இயக்கத்தில் பிஜு மேனன் நடித்து, ரெண்டு கோடியே எண்பது லட்ச ரூபாயில் தயாரிக்கப்பட்டு 2014 செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகி,
25 கோடி ரூபாய் வசூலித்த வெள்ளி மூங்கா (காட்டு ஆந்தை ) என்ற படத்தின் ரீமேக்தான் இந்த முத்தின கத்திரிக்கா .
நேர்மையாக இருந்து – அதனால் சீக்கிரமே செத்துப் போன ஒரு அரசியல்வதிக்கு மகனாகப் பிறந்து, குடும்பப் பொறுப்பு காரணமாக நாற்பது வயசு வரை திருமணம் ஆகாத நிலையிலும் ,
தனக்கு மனைவியாக வரப் போகிறவளின் வயசு 25 க்கு மேல் இருக்கக் கூடாது என்று எண்ணும் ஒருவன் …!
ஒரு பிரச்னைக்காக அவன் போலீஸ் ஸ்டேஷன் போக , அவன் அணிந்து இருக்கும் கதர் சட்டை காரணமாக அவனை அரசியல்வாதி என்று நினைத்து ஸ்டேஷனில் அவனுக்கு ராஜ மரியாதை கிடைக்க ,
அரசியலின் அருமையை உணரும் அவன் , மாநிலத்தில் தொண்டர்களே இல்லாத தொண்டர்களுக்காக அலைகிற ஒரு தேசியக் கட்சியில் சேர்ந்து வளர்ந்து…..என்று போகும் கதை .
அவன் ஆசைப்படி அவனுக்கு ஒரு காதலியும் கிடைப்பாள்
ஆனால் அவளது அம்மா, இவன் சின்ன வயசில் லுக் விட்ட பெண் என்பதால் , விசயம் தெரிந்த காதலியின் அப்பா கல்யாணத்துக்கு மறுக்க …
இப்படி ஏகப்பட்ட கல கல ரகளைகள் கொண்ட படம் இது .
குட்டியூண்டு கொசு கிடைத்தாலே அதை ஈயாக்கி, அந்த ஈயை பேனாக்கி, பேனை பெருமாளாக்கும் சுந்தர்.சி டீமிடம், இப்படி ஒரு வல்லிய சுந்தரக் கதை கிடைத்தால் எப்படி இருக்கும் ?
அதுதான் முத்தின கத்திரிக்கா.
இந்தப் படத்தின் மூலம் (கதாநாயகியின்) அம்மாவாக புரமோட் ஆகிறார் நடிகை கிரண் . (அப்படா ! ஒரு பிரச்னை முடிஞ்சது !)
மேற்படி முத்தின கத்திரிக்கா படத்தின் பாடல் – இசை வெளியீட்டு விழாவில்,
வழக்கமான் பாணியிலான முன்னோட்டமாக இல்லாமல், படத்தில் இடம்பெறும் அட்டகாசமான குட்டி குட்டி நகைச்சுவை வசனங்களையும் சட்டயாரான வசன பன்ச்களையும் கொண்ட ,
பத்து செகண்ட் பதினைந்து செகண்ட் துளித் துளி முன்னோட்டங்களாக, ஏகப்பட்ட குட்டி முன்னோட்டங்களைக் காட்டினார்கள்
சுந்தர் சி , சதீஷ், வி டி வி கணேஷ், சிங்கம் புலி, யோகி பாபு ஆகியோர் இடம்பெறும் அந்த குட்டி முன்னோட்டம் ஒவ்வொன்றும் ஆசம் அட்டகாசம் .
வசனங்களில் புகுந்து விளையாடி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் ராகவன்
இரண்டு பாடல்களை திரையிட்டனர் . முத்தின கத்திரிகாய்க்கு ஏற்ற முத்தான கத்திரிக்காயாக பூனம் பஜ்வா. கிளாமர் கில்மாவாகவும் குடும்பக் குத்து விளக்காகவும் காட்சிக்கு ஏற்ப பளபளப்பும் பதவிசும் காட்டுகிறார் .
சித்தார்த் விபினின் இசையில் , பானு முருகனின் வண்ணமயமான ஒளிப்பதிவின் உதவியோடு படமாக்கலிலும் அசத்தி இருந்தார் இயக்குனர் வெங்கட் ராகவன்.
(தோற்றம் , பேச்சு , குரல் எல்லாம் பார்த்தால் சுந்தர் சி மாதிரியே இவரும் கேமராவுக்கு முன்னால் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் தெரிகின்றன .
எல்லாஆஆஆஆத்துக்கும் வாழ்த்துகள் வெங்கட் ராகவன் !)
நிகழ்ச்சியில் பேசிய சிங்கம் புலி ” சில காய்கள் சாம்பாருக்குதான் செட் ஆகும் . சில காய்கள் கூட்டு பொரியலுக்குதான் செட் ஆகும் .
ஆனால் கத்தீர்க்காயை வச்சு சாம்பார் , புளிக் குழம்பு, கூட்டு, பொரியல், துவையல் , எண்ணெய் கத்திரிக்கா இப்படி என்ன வேணாலும் பண்ணலாம் .
எங்க குருநாதர் சுந்தர் சியும் அப்படித்தான். அவரை வச்சு ஆக்ஷன் படம் , காமெடி படம் , சீரியஸ் படம், பேய்ப் படம் , பக்திப் படம் என்ன வேணா பண்ணலாம். இந்தப் படம் காமெடியில் பட்டையைக் கிளப்பும் ” என்றார் .
ரவி மரியா பேசும்போது ” இந்தப் படத்தின் படப்பிடிப்பில் சுந்தர் சி, வெங்கட் ராகவன் என்று ஒரு குருவும் சிஷ்யனும் பணியாற்றும் அழகைப் பார்த்து வியந்து போனேன் .
பார்க்கவே அவ்வளவு சந்தோஷமா இருந்தது ” என்றார் .
வி டி வி கணேஷ் தன பேச்சில்
” தனது படங்களில் சின்சியராகப் பணியாற்றிய தனது சிஷ்யனுக்கு ஒரு படம் கொடுத்து தூக்கி விட்டு இருக்கிறார் சுந்தர் சி .
வெங்கட் ராகவன் மிக அட்டகாசமாக இயக்கினார் , நிச்சயமாக அவர் மிகப் பெரிய டைரக்டராக வருவார் . அதில் எந்த சந்தேகமும் இல்லை ” என்றார் .
மிக கண்ணியமாகவும் உண்மையாகவும் யதார்த்தமாகவும் பேசிய இயக்குனர் வெங்கட் ராகவன்
” இப்ப காட்சிகள் எல்லாம் திரையிட்டபோது,
நான் அதைப் பார்க்கிற எல்லாருடைய முகத்தையுமே பாத்துட்டு இருந்தேன் .
நீங்கள் எல்லாம் சந்தோஷமா சிரிக்கிறத பார்த்தப்போ எனக்கு ரொம்ப தெம்பா இருந்தது . இதான் எனக்கு வேணும் .
நம்மள நம்பி படம் பார்க்க வர்றவங்கள சந்தோஷமாக சிரிக்க வச்சு என்டர்டெயின் பண்ணி அனுப்பி வைக்கனும்னு எங்க டைரக்டர் சுந்தர் சி சார் சொல்வாரு . என் நோக்கமும் அதுதான் .
படத்தில் ஹீரோவின் கேரக்டருக்கு என்ன பெயர் வைக்கலாம்னு யோசிச்சப்ப ‘முத்தின கத்திரிக்கா’ ன்னு பேரு வைக்கலாம்னு தோணுச்சு. ஆனா அது ஹீரோ கேரக்டரை குறிக்கும் விஷயம் என்பாதால,
டைரக்டர் ஒத்துக்குவாரான்னு டவுட்டா இருந்தேன் . ஆனா என்னை விட டைரக்டர் அந்த பேரை ரசிச்சார் . அப்பவே ரொம்ப நம்பிக்கை வந்துருச்சி .
படத்துக்காக நான் கேட்ட எல்லாமும் கொடுத்தார் சுந்தர் சார். ஷூட்டிங்ல எனக்கு எல்லா ஆர்ட்டிஸ்ட்களும் ம் கொடுத்த ஒத்தழைப்பு பிரம்மாதமா இருந்தது . அதே மாதிரி தான் எல்லா டெக்னீஷியன்களும் .
பூனம் பஜ்வா ரொம்ப சூப்பரா நடிச்சு இருக்காங்க .
ஷூட்டிங் ஸ்பாட்ல வேலை நடக்கணுமே என்பதற்காக யாரையாவது நான் திட்டி இருந்தா சம்மந்தப்பட்டவங்ககிட்ட இப்போ மன்னிப்புக் கேட்டுக்கறேன் .
என் முதல் படம் . எல்லாருடைய ஆதரவும் வேண்டும் ” என்றார் , நெகிழ்வாக !
நிறைவாகப் பேசிய சுந்தர் சி
” என்கிட்ட அஞ்சு ஆறு வருஷம் ரொம்ப சின்சியரா, அசோசியேட் டைரக்டரா கோ டைரக்டரா வேலை பார்த்தவர் வெங்கட் ராகவன்.
முக்கியமா அரண்மனை , மத கஜ ராஜா படங்கள்ல திரைக்கதையிலும் அவரோட பங்களிப்பு ரொம்ப அதிகம் .
அவருக்கு சில பேர் டைரக்ஷன் வாய்ப்பு தர முன்வந்தபோது கூட அவர் போகல . நானா சொல்ற வரை போகக் கூடாது என்ற எண்ணத்தோடு இருக்கிற மாதிரியே இருந்தார் .
அதனால அவருக்கு ஒரு படம் தரணும்னு முடிவு பண்ணினேன்
அப்போதான் வெள்ளி மூங்கா மலையாளப் படம் பார்த்தேன் . ரொம்ப இம்ப்ரெஸ் ஆனேன் . .படம் அவ்ளோ சூப்பரா இருந்தது
ஆக்சுவலா நான் ஹீரோவா நடிச்ச பல வருஷம் ஆச்சு . ஒரு லெவல்ல எனக்கு நடிப்புல ஆர்வம் போய் டைரக்ஷன் முழு கான்சென்ட்ரேஷனும் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.
அரண்மனை படங்கள்ல கூட நான் நடிச்சது எல்லாம் ஒரு கேரக்டர்தான் . அந்தக் கேரக்டர்ல நடிக்க ஒரு ஹீரோ வேணும் .
ஆனா அந்த கேரக்டருக்கான காட்சிகள் கம்மி என்பதால வேற ஹீரோக்கள் ஒத்துக்க மாட்டாங்கன்னுதான் நான் நடிச்சேன் .
ஆனா வெள்ளி மூங்கா படம் பார்த்த உடனே, எனக்கு மறுபடியும் நடிக்கணும்னு ஆசை வந்தது .
நான் வெங்கட் ராகவன் கிட்ட வெள்ளி மூங்கா படம் பற்றி சொல்லி ‘இது உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க பண்ணலாம்.
பிடிக்கலன்னா பரவால்ல . வேற கதை சொல்லுங்க, நான் உங்களுக்கு தயாரிப்பாளரா ஒரு படம் கொடுக்க தயார்’னு சொன்னேன் .
ஆனா அவர் ‘வெள்ளி மூங்கா சூப்பரா இருக்கு அதையே பண்ணலாம்’னு சொன்னார் .
அதுக்கு அப்புறம் ஆறு மாசம் உட்கார்ந்து சின்சியரா தமிழுக்கு ஏத்த மாதிரி ஸ்கிரிப்ட் பண்ணினார் . இப்போ இந்த முத்தின கத்திரிக்கா படத்துல வெள்ளி மூங்கா இருபது சதவீதம் மட்டும்தான் இருக்கு .
இது வெங்கட் ராகவன் படம் . வசனத்தில் கூட அவர் சொல்ற அதே வார்த்தைகளை அப்படியே அதே ஆர்டர்ல சொல்லணும்னு எதிர்பார்ப்பார் .
ஒரு வார்த்தையை மாத்திப் போட்டாக் கூட சம்மதிக்க மாட்டார் . அப்படியேதான் எல்லாரும் நடிச்சோம் .
முன்னல்லாம் பாக்யராஜ் சார் படம் பார்த்துட்டு வெளிய வர்றப்ப, எல்லாரும் சந்தோஷமா வருவாங்க . நான் மட்டும் சோகமா வெளிய வருவேன் .
அவரோட அடுத்த படம் பார்க்க இன்னும் ஒரு வருஷம் ஆகுமென்ற சோகம் அது . அந்த அளவுக்கு நான் அவரோட தீவிர ரசிகன் .
இந்த முத்தின கத்திரிக்கா படத்தைப் பார்க்கும்போது பாக்யராஜ் சார் படம் பார்த்த மாதிரியே இருக்கு . டைரக்டர் வெங்கட் ராகவனை எல்லாரும் இப்பவே மாடர்ன் பாக்யராஜ்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க .
ரொம்ப சந்தோஷமா இருக்கு .
நிச்சயமா அவர் பெரிய டைரக்டரா வந்து, எனக்கு போட்டியா வருவார்னு எதிர்பார்க்கிறேன் .படம் வரும் ஜூன் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகுது . உங்க எல்லாரோட சப்போர்ட்டும் வேணும் . ” என்றார் .
‘கத்திரிக்கா முத்தினா கடைக்கு வந்துதானே ஆகணும்’ என்பது பழமொழி . இந்த முத்தின கத்திரிக்கா கடைத் தெருவையே கலக்கட்டும் . கடை தெருவே கலகலக்கட்டும் !