இரா என்டர்டைன்மென்ட் சார்பில் இரா சரவணன் தயாரித்து எழுதி இயக்க, சசிகுமார், சுருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி, ஜி எம் குமார் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்.
தாழ்த்தப்பட்ட மக்கள் வறிய நிலையிலும் ஆதிக்க சாதியினர் பலமாகவும் வளமாகவும் வாழும் கிழக்குத் தமிழக கிராமம் ஒன்று .
காலம் காலமாக பஞ்சாயத்து போர்டு தலைவராக இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர் கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்) . அந்த பதவியில் வெகுகாலம் இருந்து இப்போது படுத்த படுக்கையாக கிடப்பவர் ஆதிக்க சாதி வெறியின் உச்சமான – அவரது அப்பா ( ஜி எம் குமார்)
சண்டை சச்சரவு சமாதனம் அதிகார பகிர்வு, வளங்கள் பகிர்வு எல்லாம் அந்த ஆண்ட சாதி ஆட்களுக்குள் மட்டுமே . தாழ்த்தப்பட்ட மக்கள் அடிமைகள் மட்டுமே.
கோப்புலிங்கத்தை எஜமானாக ஆண்டையாக தெய்வமாகக் கருதும் அப்பாவி தாழ்த்தப்பட்ட நபர் கூழுப்பானை ( சசிகுமார்) . ஆதிக்க சாதியின் வஞ்சகங்கள் புரியும் அறிவோடு அவனது மனைவி செல்வி (சுருதி பெரியசாமி). பள்ளி செல்லும் ஒரு மகன் நந்தன் (மிதுன்)
கோப்புலிங்கத்தின் சாதிவெறி பிடித்த அப்பாவுக்கு மூத்திரப் பை மாற்றி கழுவி துடைத்து விடுவது கூழுப்பானையின் அன்றாடத் திருப்பணி, அவன் அப்படி செய்து விட்டுப் போனதும் அந்த இடத்தை கழுவி விடும் அளவுக்கு சாதி வெறி.திடீரென்று அந்தக் கிராமம் ரிசர்வ் தொகுதியாக மாற்றப்பட, தொடர்ந்து தான் பிரசிடென்ட் ஆக நிற்க முடியாத நிலை கோப்புலிங்கத்துக்கு . எனவே தனது, கொத்தடிமைக்கும் பாபிலோனிய அடிமைக்கும் மேலான விஸ்வரூப அடிமையான கூழுப்பானையை டம்மி தலைவராக்கி தான் தொடர்ந்து அதிகாரம் செய்ய திட்டமிடுகிறார் .
கூழுப்பானை தலைவராக ஆனாலும் அவனுக்கு டம்மி தலைவருக்கு உரிய மரியாதையைத் தரக் கூட முடியாமல் அவன் மேல் கோபப்படுகிறார் கோப்புலிங்கம்.
கூழுப்பானையின் இறந்து போன பெரியம்மாவையே சாதி வெறி காரணமாக மரியாதையோடு புதைக்க முடியாத நிலையில், அவன் தங்களுக்கு என்று ஒரு சுடுகாடு கேட்டு பி டி ஓ வைச் ( சமுத்திரக்கனி) சந்திக்க,
அதன் விளைவாக கோப்புலிங்கம் சட்டவிரோதமாக விவசாயம் செய்யும் அரசுப் புறம்போக்கு நிலம் அவரை விட்டுப் போகிறது.
கோபப்படும் அவர் கூழுப்பானையையும் அவன் மனைவி பிள்ளைகளையும் அடித்து நொறுக்கி சித்திரவதை செய்து ஊரை விட்டே விரட்ட, அப்புறம் நடந்தது என்ன என்பதே படம்.
அதிகாரத்தின் மூலம் வறியவர்களுக்கு உதவி செய்யும் பதவிகள், சட்ட ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்டாலும் அதில் ஆதிக்க சாதி எப்படி புகுந்து, பதவிக்கு வரும் தாழ்த்தப்பட்டவர்களை பொம்மைகளாக ஆக்கி தொடர்ந்து தாழ்த்தப்பட்டவர்களாகவே வைத்திருந்து , மேலும் அவர்களை ஒடுக்கி, தின்று கொழுகிறது என்ற உண்மையை
கதை நடக்கும் கள உருவாக்கம், விவரணைகள் யாவையும் சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குனர் இரா சரவணன்.
”இங்கு ஆளறதுக்கு இல்ல வாழறதுக்கே அதிகாரம் தேவைப்படுது” என்பது போல, படத்தின் வசனங்களும் சில இடங்களில் சிறப்பு.
ஒரு உள்ளடங்கிய கிராமத்தின் கடைநிலை தாழ்த்தப்பட்ட சமூகத்தின் அப்பாவி மனிதனாக — ஆதிக்க சாதிக்கு அடிமைச் சேவகம் செய்வதே பிறப்பின் நோக்கம் என்று நம்பும் நிலையில் இருந்து , பிறகு நிமிரும், கூழுப்பானை கேரக்டரில் கொண்டாடும்படி நடித்துள்ளார் சசிகுமார் .
வழக்கமாக நான் படங்களில் பார்க்கும் கெத்தான சசிகுமாரா இது என்று வியக்க வைக்கிறார் .
எஜமான விசுவாசம், பின்னர் நிலை உணர்ந்து ஒரு மலையைத் தாண்ட வேண்டி இருக்கிறதே என்ற அயற்சி என்று அந்தக் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்.
கூழுப்பானை என்ற தனது கிண்டலான பட்டப் பெயர் கொண்ட வாழ்க்கையில் இருந்து அம்பேத்குமார் என்ற தனது உண்மையான பெயரோடு கூடிய புதிய உணர்வுக்கு மாறும்போது , முந்தைய கேரக்டரையும் முழுக்க விட்டு விடாமல் புதிய மாற்றத்தின் அடையாளங்களையும் சேர்த்து அவர் நடிப்பில் கொடுத்து இருக்கும் கலவை மிக சிறப்பு .
அவ்வளவு கருப்பு மேக்கப் தேவை இல்லை என்றாலும் , மிகுந்த மெனக்கெடலோடு, கொண்டாடும்படி நடித்திருக்கிறார் சுருதி பெரியசாமி . அடித்து விரட்டப்படும் காட்சிகளில் நாம் பார்ப்பது படம் இல்லை நிஜ சம்பவம் என்ற உணர்வை தருகிறார். அருமை
ஆரம்பத்தில் பொருத்தமாக இருந்தாலும் ஒரு நிலைக்கு மேல் எரிச்சலூட்டுகிறது பாலாஜி சக்திவேலின் ஸ்டீரியோ டைப் வில்லன் நடிப்பு .
ஆர் வி சரணின் ஒளிப்பதிவு சூழலை நன்றாக உணர வைக்கிறது . ஜிப்ரனின் இசையும் உணர்வுக் கூட்டலுக்கு உதவுகிறது
நல்ல கதை. ஆனால் அதற்கேற்ற ஆழமான திரைக்கதை இல்லை. எமோஷன் கொப்பளிக்க வேண்டிய காட்சிகள் எல்லாம் வெறும் ஸ்டேட்மென்ட் ஆகவே போகிறது , மேக்கிங்கில் போதாமை .
உணர்வுகளை விட தரவுகளைச் சொல்வதில் கவனமாக இருக்கிறது திரைக்கதை.
படத்தில்,வரும் ஒவ்வொரு திருப்பத்தையும் முதலில் ஒரு ஷாட்டில் கேரக்டர்களுக்குக் காட்டி அதன் பிறகு ஆடியன்சுக்கு காட்டும் ஷாட் ஸ்டைல், இந்தப் படத்துக்கு செட் ஆகவில்லை. அந்த தாமதமே சில விசயங்களை நமக்கு முன் கூட்டியே புரிய வைத்து விடுகிறது. அந்தத் திருப்பங்கள் சட்டென்று முகத்தில் அடிப்பது போல ஆடியன்சுக்கு காட்டப்பட்டு அதன் பிறகு அதற்கு கேரக்டர்கள் ரியாக்ட் செய்யும் உத்திதான் இந்தப் படத்துக்கு செட் ஆகி இருக்கும் .
கிளைமாக்சும் பலவீனமே.
எனவே எந்தத் தரப்பையும் பெரிதாகக் கவராத படமாக நைந்து விட்டது நந்தன்