திங்க் பிக் (Think Big) ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன் மற்றும் பால்சன் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் சாம் பால் இருவரும் தயாரிக்க , அழகப்பனின் மகனும் பிரபல இயக்குனருமான ஏ.எல்.விஜய் வழங்க, சத்யராஜ் , யூகிசேது, புதுமுகம் வருண், அனு மோள் ஆகியோரின் நடிப்பில்
ஜாய் மேத்யூ கதை எழுத, பிரபல படத் தொகுப்பாளர் ஆண்டனி திரைக்கதை அமைத்து படத் தொகுப்பு செய்து இயக்கி இருக்கும் படம் நைட் ஷோ .
இந்த ஜாய் மேத்யூ தேசிய விருது பெற்ற தமிழ்ப் படமான அக்ரகாரத்தில் கழுதை படத்தை இயக்கிய ஜான் ஆபிரகாமிடம் பணி புரிந்தவர் . ஜாய் மேத்யூ மலையாளத்தில் எழுதி இயக்கி, லால் மற்றும் சீனிவாசன் ஆகியோர் நடித்த படம் ஷட்டர்.
மராத்தி வரை உருவாகி சக்கைப் போடு போட்ட அந்த ஷட்டர் படம்தான் ‘நைட் ஷோ’ ஆக தமிழில் வருகிறது .
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஒரு குடும்பத் தலைவர் விடுமுறைக்காக குடும்பத்தோடு சென்னை வருகிறார். சென்னையில் அவருக்கு சொந்தமாக உள்ள ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் ஷட்டர் மூடிய ஒரு கடையைத் தவிர மற்ற எல்லா கடைகளையும் வாடகைக்கு விட்டு இருப்பவர் அந்தக் குடும்பத் தலைவர் . அந்த ஷட்டர் கடை மட்டும் பெரும்பாலும் மூடியே இருக்கும் .
சென்னையில் அவருக்கு ஒரு அட்டோக்காரருடன் நட்பு வருகிறது . அதன் மூலம் ஒரு விலைமாதுவுடன் தொடர்பு ஏற்படுகிறது. ஆட்டோக்காரரின் ஏற்பாட்டின்படி அந்த மனிதரும் விலை மாதுவும் ஷட்டர் மூடிய கடைக்குள் தங்குகிறார்கள். காலையில் ஷட்டரை திறக்க வர வேண்டிய ஆட்டோக்காரர் வரவில்லை .
இரண்டு நாள் கடைக்குள்ளேயே இருக்க நேரிடுகிறது . இதனால் தன் குடும்ப மானம் போய்விடும் என்ற பயத்தில் குடும்பத் தலைவர் நடுங்குகிறார் .
அந்த இடத்தில் தனது திரைப்படத்தின் ஸ்கிரிப்டை தொலைத்த ஓர் இயக்குனர் அதை எடுப்பதற்காக ஷட்டரை திறக்க முயல அப்புறம் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை என்று சொல்கிறது படக்குழு.
ஆனால் ஷட்டருக்குள் வேறு ஏதோ மர்மத்தை வைத்திருகிறது திரைக்கதை .
குடும்பத் தலைவராக சத்யராஜ், ஆட்டோ டிரைவராக மறைந்த நடிகர் ஐசரி வேலனின் பேரனும், வேல்ஸ் கல்விக் குழுமத்தின் தலைவரான ஐசரி கணேஷின் சகோதரி மகனான வருண் , இயக்குனராக யூகி சேது (படத்துக்கு வசனமும் இவரே ), விலைமாதுவாக அனு மோள் நடித்து இருக்கிறார்கள்.
ஷட்டர் படம் பார்த்த இயக்குனர் விஜய் அதை, தான் தயாரிக்க விரும்ப அவருக்கு அனுமதி கொடுத்து இருக்கிறார் ஜாய் மாத்யூ .
அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை, ஷங்கர், ஏ.ஆர் . முருகதாஸ், கவுதம் மேனன், லிங்குசாமி, கே.வி.ஆனந்த். ஏ.எல். விஜய் படங்கள் உட்பட ஐம்பது படங்களுக்கும் மேலாக படத் தொகுப்பு செய்த ஆண்டனிக்கு கொடுத்து இருக்கிறார் ஏ.எல்.விஜய் .
படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஆண்டனியுடன் நிறைய படங்களில் பணியாற்றிய நடிகர் சூர்யா, கவுதம் மேனன், கே.வி.ஆனந்த்,எஸ் ஜே சூர்யா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
“பல அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடிய வித்தியாசமான படம் இது. நிச்சயமான ரொம்ப நல்ல அனுபவமாக இருக்கும் ” என்றார் , வசனம் எழுதி டைரக்டராக நடித்து இருக்கும் யூகி சேது
படத்தின் டிரைலர் பரபரப்பாகவும் மதமதர்ப்பாகவும் இருந்தது . மேக்கிங் வீடியோ ஒன்றில் இயக்குனராக ஆகி இருக்கும் எடிட்டர் ஆண்டனி எல்லா நடிகர்களுக்கும் துள்ளித் துள்ளி நடித்துக் காட்டி இருப்பது தெரிந்தது .
படத்தை மிகவும் சிலாகித்துப் பேசிய சத்யராஜ் ” எடிட்டர் ஆண்டனி நடித்துக் காட்டியது நன்றாக இருந்தது . எனக்கு புதிய பாணியாக இருந்தது. இன்னும் அமைதிப்படையில் நான் நடித்ததையும் வால்டர் வெற்றிவேலில் நடித்ததையும் பேசி என்ன பயன் ?
நானும் புதுப்பிக்கப்படவேண்டும். எனவே புது இயக்குனர்கள் என்னை புது நடிகனாக நினைத்து அவர்கள் பாணியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ” என்றார் .
தெளிவு !