ரால்ப் புரடக்ஷன்ஸ் சார்பில் ரபேல் சல்தானா தயாரிக்க, புதுமுகம் ரிஜன், ஆரஞ்சு மிட்டாய் நாயகி அர்ஷிதா , பட்டிமன்றம் ராஜா ஆகியோர் நடிக்க,
சுசீந்திரனிடம் ஆதலினால் காதல் செய்வீர் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய நாகராஜன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா !’
டி.எம்.சவுந்திரராஜன் பாடிய அழகென்ற சொல்லுக்கு முருகா என்ற பக்தி மணம் கமழும் அற்புத பக்திப் பாடலில் முருகாவுக்கு பதில் அமுதாவை ஏற்றி படத்துக்கு பெயராக வைத்து விட்டார்கள் .
“ரஜினி ரசிகர் மனறத்தில் இருக்கும் இளைஞனுக்கு ஒரு பெண் மீது காதல் வருகிறது. அந்தக் காதலை சொல்கிறான் . அவள் ஏற்கவில்லை. அவளை எப்படி தன் காதலை ஏற்க வைக்கிறான், அந்த இளைஞன் என்பதுதான் படத்தின் கதை .
இதை வட சென்னைப் பின்னணியில் வெகு யதார்த்தமாகவும் அதே நேரத்தில் நகைச்சுவையாகவும் சொல்லி இருக்கிறேன் . எல்லோருக்கும் பிடிக்கிற டீசன்ட்டான குடும்பப் படம் இது ” என்கிறார் இயக்குனர் .
படத்தின் இசையமைப்பாளர் ரஜின் மகாதேவ் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் நாலு போலீசும் நல்ல இருந்த ஊரும் படத்துக்கு இசை அமைத்தவர் . “படத்தில் நாலு பாடல்கள் . எல்லாமே மிக யதார்த்தமானவை” என்கிறார் இவர்
படத்தின் ஒளிப்பதிவாளர் ஜே.கே.கல்யாண்ராம். இது இவருக்கு முதல் படம் . “பொதுவாக வட சென்னை என்றாலே அது அழுக்கானது . புழுதியும் கசகப்பும் நிறைந்தது . ரத்தமயமானது ” என்று ஒரு பிரம்மை பலருக்கும் இருக்கிறது .
ஆனால் இதில் வட சென்னையை மிக அழகாக – படத்தின் கதைக்கு ஏற்ப – மிக அழகாகக் காட்டி இருக்கிறேன் . இதுவரை நீங்கள் பார்க்காத வட சென்னையை இந்தப் படத்தில் பார்க்கலாம் ” என்கிறார் கல்யாண்ராம்.
‘எல்லாம் சரி அழகென்ற சொல்லுக்கு முருகா என்பது எப்பேர்ப்பட்ட பக்திப் பாடல். அதில் முருகாவுக்கு பதில் அமுதா வருவது நியாயமா?’ என்றால் நாங்கள் அமுதா என்ற சொல்லின் மூலம் காதலைத்தான் உயர்த்திப் பிடிக்கிறோம். மற்றபடி உடல் ரீதியாக ஒன்றும் சொல்லவில்லை. காதலித்து மணம் புரிந்த முருகனுக்கு அது தவறாக தெரியாது ” என்கிறார் இயக்குனர் .
அப்படியா முருகா ?