HERO CINEMAS நிறுவனத்தின் சார்பில் சி. மணிகண்டன் தயாரிக்க,
நிறம், காந்தர்வன் ஆகிய படங்களில் நடித்த கதிர் ஹீரோவாகவும் ‘கீதாஞ்சலி ‘என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் நடித்த ஸ்வப்னா கதாநாயகியாகவு
கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் இருவரிடமும் பல படங்களில் பணியாற்றியவரும் . நிறைய தெலுங்குப் படங்களுக்கு கதை திரைக்கதை எழுதியவருமான விஜய் சண்முகவேல் அய்யனார்.,
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கும் படம் ‘ ஒன்பதிலிருந்து பத்து வரை .
இரண்டரை மணி நேரத்துக்கு ஒகே வா ? பார்க்கலாம் .
பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளினிப் பெண் ஒருத்தியின் (ஸ்வப்னா ) தீவிர ரசிகனாக இருக்கிறான் கால் டாக்சி ஓட்டும் ஓர் இளைஞன் (கதிர்)
ஒரு நாள் அவளை சந்திக்க எண்ணி வானொலி நிலையத்துக்கு அவன் போய்க் கொண்டு இருக்க, அந்த நேரம் பார்த்து டாக்சி நிறுவனம் ஒரு சவாரிக்கு போகச் சொல்ல ,
நிறுவனத்தின் மீது காட்ட முடியாத எரிச்சலை, பயணிக்க வரும் பெண் மீது காட்டுகிறான் .
சென்னையில் இருந்து காஞ்சிபுரத்துக்கு அவள் பயணிக்க, வழியிலேயே இருவருக்கும் சண்டை .
ஒரு நிலையில் தனது காரில் பயணிக்கும் பெண்தான் தன் மனதுக்குப் பிடித்த தொகுப்பாளினி என்று அவனுக்கு தெரியவருகிறது . இப்போது இவன் அவளிடம் அன்பாக பேச, அவள் அவனை தவறாக நினைக்கிறாள் .
காஞ்சிபுரத்துக்கு சென்று சேரும் அவள் அங்கே தனது வருங்காலக் கணவன் என்று ஒருவனைக் காட்ட , அவன் அதிர்ச்சி அடைகிறான் . அந்த திருமணத்தை தடுக்க முயல்கிறான் .
‘எனக்கு உன் மீது காதல் எல்லாம் இல்லை’ என்று அவள் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்காமல்
அந்தப் பெண்ணின் அக்கா , அக்கா கணவர் , அம்மா , வருங்கால மாப்பிள்ளை நால்வரையும் கட்டி வைத்து மிரட்டி அந்தக் கல்யாணத்தை தடுக்க முயல்கிறான் .
அவனால் அதை செய்ய முடிந்ததா ? காரணம் என்ன என்பதே இந்த ஒன்பதிலிருந்து பத்து வரை .
கால்டாக்சி இளைஞன் கதாபாத்திரத்தில் கிராமியத் தோற்றத்தில் பொருத்தமாக இருக்கிறார் கதிர்,
கொப்பும் குலையுமாக இருக்கிறார் ஸ்வப்னா . பத்து வார்த்தை பேசுவதற்குள் முப்பது வார்ததைகள் பேச வேண்டிய அளவுக்கு உதடுகள் அசைகின்றன .
ஒளிப்பதிவாளர் ராஜரத்னத்தின் கேமரா கோணங்கள் மற்றும் ஒளிப்பதிவு அருமை . குறிப்பாக பயணக் காட்சிகளில் அழகான ஒளிப்பதிவு .
படத்தில் சில நல்ல நகைச்சுவைகள் இருக்கின்றன . ஆனால் படமாக்கிய வகையில் அவை பலன்தரவில்லை . லிவிங்ஸ்டன் வரும் அந்த ஆரம்பக் காட்சிகள் தாங்க முடியவில்லை .
இடைவேளை வரும்வரை வெறும் பயணம் என்பதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை .
போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் அவற்றில் நடித்து இருக்கும் நடிகர்களின் நடிப்பு எல்லாம் படு செயற்கை .
இடைவேளைக்கு பிறகு பாதி ஓடிய பிறகு , பங்களாவில் நாயகன் எல்லோரையும் கட்டி வைத்த பிறகு படம் கொஞ்சம் பார்க்கும்படி மாறுகிறது .
‘இதுக்கு மேல் இந்தப் படத்தில் என்னத்தை சொல்லப் போறாங்க?’ என்று முடிவு செய்து விட்ட நிலையில் அந்த கிளைமாக்ஸ், ‘அட…!’ என்று ஆச்சர்யப்பட வைக்கிறது .
ஆனால் மக்களைக் கவர இது மட்டுமே போதுமா ?
ஒன்பதிலிருந்து பத்துவரை … பதினைஞ்சு இருவது நிமிஷம் மட்டும் !