ஸ்ரீரங்கா புரடக்ஷன்ஸ் சார்பில் ஏ. ஆனந்தன் தயாரிக்க, அருண் பாலாஜி, லீமா பாபு , அர்ஜுன் , தயாரிப்பாளர் ஆனந்தன் , பாலாசிங் ஆகியோர் நடிக்க ,
நடிகர் காதல் சுகுமார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் சும்மாவே ஆடுவோம்
கூட ஆடலாமா ? ஓடிப் போகலாமா ? பார்க்கலாம் .
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அன்பு காட்டும்ஒரு நல்ல ஜமீன்தாருக்கு (தயாரிப்பாளர் ஆனந்தன் ) வாரிசு இல்லாதது பெரிய குறையாக இருக்கிறது .
ஜமீன்தாரினியின் (யுவராணி) சகோதரர்(சம்பத்) இந்த விசயத்தில் ஜமீன்தாரை ‘பட்ட மரம்’ என்று கிண்டல் செய்கிறார் .
இந்த நிலையில் ஜமீனின் ஆஸ்தான ஜோதிடர் (பாண்டு) வேறொரு பெண்ணோடு ஜமீன்தார் ‘கூடி’ குழந்தை உருவானால்தான், பிறகு ஜமீன்தாரினிக்கு குழந்தை பிறக்கும் என்கிறார் .
ஜமீன்தார் அதை மறுக்க , விசயம் அறிந்த தாழ்த்தப்பட்ட ஏழைப் பெண் ஒருத்தி (அம்மு), தம்மவர்களையும் சமமாக நடத்தும் ஜமீன்தாருக்காக , அவரோடு வலுவில் கூடி தாயாகிறாள் .
அதே காலகட்டத்தில் ஜமீன்தாரினியும் தாயாகிறாள் .
இருவருக்கும் ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் குழந்தை பிறக்க , ஏழைப் பெண் அங்கேயே மரணம் அடைய, அந்தக் குழந்தை அனாதையாகிறது .
இதைத் தாங்க முடியாத ஜமீன்தார் ஏழைப் பெண்ணுக்கு பிறந்த குழந்தையை ஜமீன்தாரினியின் தொட்டிலில் போட்டு விட்டு , ஜமீன்தாரினிக்கு பிறந்த குழந்தையை ஏழைப் பெண்ணின் தொட்டிலில் போட்டு விடுகிறார் .
குழந்தைகள் மாறி ஏழைப் பெண்ணின் மகன் அர்ஜுன் ( புது முகம் அர்ஜுன்) ஜமீன்தாரின் வாரிசாகி பிரபல நடிகன் ஆகிறான் .
ஜமீன்தாரினியின் நிஜ மகன் கண்ணன் (அருண் பாலாஜி) சேரியில் வளர்கிறான் . அதோடு அர்ஜுனின் ரசிகர் மன்றத் தலைவனாகவும் இருக்கிறான் .
இந்த நிலையில் சக ரசிகன் ஒருவன் அர்ஜுன் கட் அவுட்டுக்கு அலங்காரம் செய்யும்போது , தவறி விழுந்து அடுபடுகிறான். அவனுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவிக்கிறான் அர்ஜுன் .
அதை வாங்கி வர , கண்ணன் போக , தனது தாய்மாமன் பேச்சைக் கேட்டு பணம் தர மறுப்பதோடு கண்ணனை அர்ஜுன் அவமானப்படுத்துகிறான் .
ஆனாலும் அர்ஜுனை நேசிக்கும் கண்ணன் ,தனது கடையை மூன்று லட்ச ரூபாய்க்கு விற்று , அந்தப் பணத்தை அர்ஜுன் கொடுத்ததாக பாதிக்கப்பட்ட ரசிகனுக்கு தருகிறான் .
இந்த நிலையில் ஊரில் கண்ணன் உள்ளிட்ட சேரி மக்கள் வாழ ஜமீந்தரால் கொடுக்கப்பட்ட பெரிய அளவு நிலத்தை ஒரு கார்ப்பரேட் கம்பெனி கேட்க , அதை எப்படியாவது பிடுங்கித் தர, தாய்மாமன் திட்டமிடுகிறான் .
அதே நேரம் அர்ஜுன் பணம் தராமல் அவமானப்படுத்தியதும் அது கண்ணனின் கடையை விற்ற பணம் என்பதும் அறிந்த ஊர் மக்கள் , அர்ஜுனிடமே போய் ‘’நீ ஹீரோ இல்லை கண்ணன்தான் ஹீரோ’’ என்று கூறுகிறார்கள் .
அர்ஜுனும் தாய்மாமனும் சேர்ந்து , கண்ணன் மற்றும் சேரி மக்களை எள்ளி நகையாடி ,
‘’ஹீரோ ஆவது அவ்வளவு சுலபமா ?முடிந்தால் முப்பது நாளில் ஒரு படத்தை எடுத்து நடித்து ஓட்டி ஹீரோவாகிக் காட்டு . அப்போ உன்னை ஒத்துக்கறோம் .
முடியலன்னா , நீங்க குடி இருக்க ஜமீன் கொடுத்த நிலத்தை நீங்க எங்களுக்கே திருப்பித் தரணும்’’ என்று நிபந்தனை வைக்க ,
சென்னையில் உள்ள ஒரு அசிஸ்டன்ட் டைரக்டரை படத்துக்கு டைரக்டர் ஆக்கி ,
ஊரில் உள்ள போட்டோகிராபர்தான் கேமரா மேன், சலவைத் தொழிலாளிதான் காஸ்டியூமர், பந்தல் போடுபவர்தான் ஆர்ட் டைரக்டர, முடி திருத்துபவர்தான் மேக்கப் மேன் என்று யூனிட் உருவாக்கி,
களம் இறங்குகிறது கண்ணன் அணி
ஏழைகளான கண்ணன் மற்றும் அந்த சேரி மனிதர்களால் சவாலில் ஜெயிக்க முடிந்ததா ?
அவர்களை ஜெயிக்க அர்ஜுனும் அவனது தாய்மாமனும் விட்டார்களா ? நிலம் பறிபோனதா ?என்ன நடந்தது என்பதே இந்த சும்மாவே ஆடுவோம் படம் .
படத்தில் இத்தனை கேரக்டர்கள் இருந்தும், தானே நடிக்க வாய்ப்பு இருந்தும் படத்தில் சின்ன கேரக்டரில் கூட நடிக்காமல் முழுக்க இயக்குனராகவே மாறி ,
இயக்கத்தின் மீது தனக்கு உள்ள ஈர்ப்பை நிரூபித்து இருக்கிறார் காதல் சுகுமார்
எடுத்த எடுப்பிலேயே கதைக்குள் இறங்கும் வேகமும் படம் ஆரம்பித்து பதினைந்து நிமிடத்துக்குள் கதைக்குள் ஒன்ற வைத்த திரைக்கதையுமாக, பாராட்ட வைக்கிறார் சுகுமார் .
ஜோதிடம் உண்மை என்று சொல்ல ஒரு கதையா என்று கேள்வி எழுந்தாலும் படத்தில் அது ஒரு நாவல்டியான விசயமாக இருப்பதால் புறக்கணிக்க முடியவில்லை .
குழந்தைகள் மாறிய கதை, நண்பர்களுடன் ரசிகர் மன்ற கலாட்டா, குறும்புப் பெண்ணுடன் (லீமா பாபு) கண்ணனின் காதல் என்று…… இயல்பாக போகும் முதல் பகுதி ,
அர்ஜூனால் அவமானப்படுத்தப்படும்போது ‘’போட்றா மச்சான் ஆட்டம் “ என்று சொல்ல வைக்கிறது .
சவால் விட்டு கண்ணன் மற்றும் மக்கள் படம் எடுக்க துவங்குவதில் நகைச்சுவை கொப்பளித்து , போகப் போக நம்மை சுவாரஸ்யப் படுத்துகிறது .
படத்தின் கிளாஸ் ஏரியா என்றால் அந்த ஆர்ட் டைரக்ஷன் ஐடியாக்கள்தான் .
வாட்டர் பாக்கெட்களை பீய்ச்சி மழைக்காட்சியை படம் எடுப்பது , ஐஸ்வண்டியை டிராலியாக பயன்படுத்துவது , ராட்டினத்தை ஜிம்மி ஜிப் ஆக பயன்படுத்துவது… இப்படி எல்லாமே ரசனையான ஆட்டம் .
ஷூட்டிங்கை நிறுத்த வந்து கலாட்டா செய்யும் அடியாளை , அந்த இடத்திலேயே படத்துக்கு வில்லனாக தேர்வு செய்ய , நடிகனான சந்தோஷத்தில் அவன் டைரக்டர் முன்னால் கைகட்டி நிற்கும் காட்சி அட்டகாசம்
‘’எங்களை வைத்துதான் படம் எடுக்க வேண்டும் இல்லை என்றால் ஷூட்டிங்கை நிறுத்துவோம்’’ என்று சொல்லும் ஃபெஃப்ஸி பிரதிநிதியை கிராம மக்கள் கட்டி வைத்து அடிப்பதை,
ஃபெஃப்ஸிக்கு எதிரான விசயமாக பார்க்காமல் , எளிய படைப்பாளிகளின் சுதந்திரத்துக்கு வரும் குறுக்கீட்டின் போது வரும் பாசாங்கற்ற கோபமாகவே பார்க்க வேண்டும் .
பட வெளியீட்டில் கியூப் தொழில்நுட்பத்தின் ரீதியாக வரும் பிரச்னைகள் வரை இயக்குனர் சுகுமாரின் பார்வையும் கோணமும் துணிச்சலும் பாராட்டுக்குரியவை .
இதுவரை நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட காதல் சுகுமாருக்குள் இப்படி ஓர் அர்த்தமுள்ள படைப்பாளியா என்ற மகிழ்வான வியப்பு ஏற்படுகிறது . வெல்டன் சுகுமார் .
கண்ணனாக நடித்து இருக்கும் அருண்பாலாஜி கேரக்டரை உணர்ந்து நடிக்கிறார் . தோற்றம் , வசன உச்சரிப்பு, சோக நடிப்பு எல்லாமும் முதல் படம் என்ற வகையில் பாராட்டப்பட வேண்டியவை .
நடிகராக வரும் அர்ஜுன் எடுப்பார் கைப்பிள்ளை கேரக்டரை உணர்ந்து நடிக்கிறார் .
இதுவரை பார்க்காத புதிய முகம் என்பதும் , மிக இயல்பான தோற்றமும் ஜமீன்தார் கேரக்டரில் தயாரிப்பாளர் ஆனந்தனை ஏற்க வைக்கிறது.
குறும்புக்காரப் பெண்ணாக வரும் நாயகி லீமா பாபு ஷார்ட் அண்ட் கியூட் .
சேரி வாழ் பெரியவராக வரும் பாலாசிங் , மற்றும் நாற்பதுக்கும் மேற்பட்ட நகைச்சுவை நடிகர்கள் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்து உள்ளனர் .
வில்லியம்சின் ஒளிப்பதிவு படத்தின் எளிமைக்கு உதவுகிறது .
ஸ்ரீகாந்த் தேவா இசையில் அஸ்மின் எழுதி இருக்கும் முத்து முத்து கருவாயா பாடல் இனிமையோ இனிமை .
முருகன் மந்திரம் எழுதி இருக்கும் ரஜினியை ஞாபகப்படுத்தும் தலைவா தலைவா பாடல் மற்றும் மகராசி பாடல் அருமை .
‘விடியாத இரவிங்கு’ பாடலில் முருகன் மந்திரம் எழுதி இருக்கும் , “திரைகள் இல்லாமல் கூத்துக் கட்டிய கம்பன் இளங்கோ என் பாட்டன்.! ஒலிகள் இல்லாமல் கூத்துக் கட்டிய வள்ளுவன் கூட என் பாட்டன் “
— போன்ற வரிகளின் அடிப்படைப் பொருள் சிறப்பானது .
லகான் படத்தின் கதையில் கிரிக்கெட்டுக்கு பதில் சினிமா , வெள்ளைக்காரனுக்கு பதில் அர்ஜுன் மற்றும் அவன் தாய் மாமன், இந்தியர்களுக்குப் பதில் ஏழை மக்கள் ..
இதுதான் இந்த சும்மாவே ஆடுவோம் படம் .
முதல் பாதியை இன்னும் கவனமாக சுவாரஸ்யமாக செதுக்கி இருக்கலாம் ,
ஒரு பாட்டு வந்து ஒரே காட்சி முடிந்ததும் இன்னொரு பாட்டு இருப்பதை தவிர்த்து இருக்கலாம் .
கடைசியில் கின்னஸ் சாதனை சினிமா போல ஒரு நாளில் படம் எடுக்கப்படுகிறது என்றும் ‘வளர்மதி’யில் படம் ரிலீஸ் ஆகிறது என்றும் சொல்லி இருக்கலாம் .
இப்படி ஒரு சில விசயங்கள் இருந்தாலும்
சொன்ன விசயத்திலும் சினிமா விசயங்களை சொன்ன வகையிலும் பலே பலே பாரட்டுக்குள்ளாகிறது படம்
சும்மாவே ஆடுவோம் … சலங்கை சத்தம் கேட்குது !