மாஸ், தகடு தகடு படங்களில் நடித்தவரும் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படம் உட்பட சில படங்களில் நடித்துக் கொண்டு இருப்பவருமான மாஸ் ரவி எழுதி இயக்கி,
நடித்து இருக்கும் டெலி பிலிம் ‘ஒரு லைக் ஒரு கமெண்ட்.’
பேஸ் புக்கில் லைக் மற்றும் கமெண்ட் வாங்குவதில் பலருக்கும் உள்ள அதீத மோகத்தையும் ,
அதற்கான பல விசயங்களில் ஒரு சினிமா முதல் நாள் முதல் காட்சி திரையிட ஆரம்பிக்கப்பட்ட பத்து நிமிடத்தில் படம் மொக்கை , வேஸ்ட் என்று ஸ்டேட்டஸ் போட்டு படத்துக்கு வரும் ரசிகர்களைத் தடுத்து
படத்தின் வெற்றியை பாதிக்கும் அநியாயத்தையும், கண்டிக்கும் படம் இது .
சினிமாவே பார்க்காமல் விமர்சனம் என்கிற பெயரில் திரையுலகிற்கு எதிராக சமூக ஊடகங்களில் பொறுப்பற்று செயல்படும் இளைஞர்கள் பற்றிய கதை இது.
பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றால் எப்படி திரையுலகினர் பாதிக்கப் படுகின்றனர் என்று சொல்கிறது படம்.
மூன்று நண்பர்கள். காலையில் எழுந்ததும் தங்களது பேஸ்புக் ஸ்டேட்டஸ்க்கு எத்தனை லைக் கிடைத்து இருக்கிறது என்று பார்த்துவிட்டுதான் அடுத்த வேலையே பார்ப்பவர்கள் .
பேஸ்புக் மூலம் அறிமுகமாகும் நண்பர்களை வரவழைத்து தண்ணி அடித்து விட்டு தங்களுக்குள் அடித்துக் கொள்வது இவர்களுக்கு பொழுதுபோக்கு .
உடற் பயிற்சி செய்து கட்டுமஸ்தான புகைப்படங்களை போட்டு லைக் வாங்குவதும் பெண்களை பிரண்ட் ரெக்வெஸ்ட் கொடுக்க வைப்பதும் உப தொழில்கள் .
வெள்ளிக் கிழமை காலை காட்சி ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் படம் வேஸ்ட் என்று கமென்ட் போட்டு படத்தை காலி செய்வது பிரதான தொழில்.
அதுவும் ஒரு நிலையில், நாளை வெளியாக உள்ள படத்தை இன்றே திருட்டு விசிடியில் வாங்கி லேப்டாப்பில் பத்து நிமிடம் மட்டுமே பார்த்துவிட்டு,
”நான் சத்யம் தியேட்டரில் பிரிமியர் ஷோ பார்க்கிறேன்.படம் படு மொக்கை..” என்று ஸ்டேட்டஸ் போட்டு நிறைய லைக் வாங்குகிறார்கள்
மூவரில் இருவருக்கு பேஸ்புக் மூலம் பெண் தோழிகள் உண்டு . யாருடைய தோழி அழகு என்பதில்அந்த இருவருக்கும் சண்டை வருகிறது .
அந்த இருவரில் ஒரு நண்பனின் முக நூல் பக்கத்தில் அவனே போடுவது போல பல தவறான தகவல்கள் வெளியாகின்றன . அதில் பாதிக்கப்படும் அவன் ,
சண்டை போட்ட இன்னொரு நண்பன்தான் காரணம் என்று மூணாவது நண்பனிடம் புகார் செய்கிறான்.
ஆனால் சந்தேகத்தில் சிக்கிய நண்பன், ”நான் அப்படி செய்யவில்லை” என்று கூறுகிறான். யோசிக்கும்போது, பாதிக்கப்பட்ட நண்பனே தனது முக நூல் பாஸ்வேர்டை ,
ஒரு சினிமா டைரக்டரிடம் கொடுத்தது ஞாபகம் வருகிறது. அவர்தான் அந்த பாஸ் வேர்டை பயன்படுத்தி தப்பாக ஸ்டேட்டஸ் போட்டு , இமேஜை காலி பண்ணி இருக்கிறார் என்பது தெரிகிறது .
அவரிடம் போய் சண்டை போட, “ஏண்டா… தப்பா ஒரு ஸ்டேட்டஸ் போட்டதுக்கே இவ்வளவு கோபப் படறீங்களே . ஆனா படத்தையே பாக்காம தப்பா சொல்லி படத்தை அழிச்சு பல பேரை தெருவுல நிறுத்தறீங்களே …
இது என்ன நியாயம் ? ” என்று கொந்தளிக்கிறார் .
அது மட்டுமல்ல … அப்படி பாதிக்கப்பட்டு ஓடாமல் போன படத்தின் இயக்குனர் ஒருவர், பைத்தியமாகி இருப்பதைக் காட்டுகிறார். நண்பர்கள் தவறை உணர்கிறார்கள் .
இதுதான் படம் .
சினிமாக் கலைஞர்கள் ஒரு வெற்றிக்காக படும் கஷ்டத்தை சொல்லும் இடங்களில் வசனம் அருமை .
நண்பர்களில் ஒருவராகவும் பைத்தியமான இயக்குனராகவும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் மாஸ் ரவி. நண்பர்களில் ஒருவனாக நடிப்பு ஒகே. மன நிலை பாதிக்கப்பட்ட இயக்குனராக மிகச் சிறப்பான நடிப்பு .
பொதுவான ஒரு கேரக்டரை எடுத்து நடிப்பது வேறு . ஆனால் டைரக்டராக சிறப்பாக நடிக்க வேண்டும என்றால் உள்ளே ஒரு நிஜமான டைரக்டர் இருக்க வேண்டும் .
ரவிக்குள் இருக்கும் அந்த டைரக்டர்தான் இந்தப் படத்தை இயக்கியும் இருக்கிறார்
படம் திரையிடல் நிகழ்ச்சியில் இயக்குனர்கள் சுப்பிரமணிய சிவா, சரவண சுப்பையா ,டூ பட இயக்குனர் ஸ்ரீராம், தகடு தகடு ராஜேஷ் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் .
நிகழ்வில் கலந்து கொண்டு இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசும் போது: ” இப்படத்தை இயக்கியுள்ள மாஸ்ரவி தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டுள்ளவர்.
நம்மை மற்றவர் உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்காமல் தானே உருவாக்கிக் கொண்டுள்ளார். நெப்போலியன், அலெக்சாண்டர் எல்லாம் அப்படித, தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டவர்கள்தான்.
இன்று சினிமாவுக்கு வருகிறவர்களில் பலர் இன்ஜினியரிங் முடித்தவர்கள் .எல்லாருக்கும் படித்தது ஒன்று விரும்பியது ஒன்று , கிடைப்பது ஒன்று என்றுதான் இருக்கிறது.
பாரதிராஜாசார் நடிக்க வந்தவர்தான்;இயக்குநர் ஆகிவிட்டார். ஷங்கர்சார் நடிக்க வந்தவர்தான்; இயக்குநர் ஆகிவிட்டார். இன்று பேஸ்புக் தவிர்க்க முடியாத சாதனமாகிவிட்டது. ஒவ்வொரு இந்தியர் மூலமும் வருமானம் போகிறது. பேஸ்புக் பற்றிச் சொல்கிற கதை இது.
இக்குறும்படத்தின் மூலம் மாஸ்ரவி தனது நடிப்புத் திறமையை நிரூபித்து இருக்கிறார். அவர் குறும்படத்திலிருந்து சினிமாவிலும் வெற்றிபெற வேண்டும் ” என்றார்.
இயக்குநர் சரவண சுப்பையா பேசும் போது ” இதைக் குறும்படமாக டெலி பிலிமாக எடுத்திருக்கிறார்.
இந்திய சினிமாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறும்பட படைப்பாளிகள் சினிமாவில் பெரிய வரவேற்பு பெற்று வருகிறார்கள்.
குறும்படம் என்பதை சாதாரணமாக பார்த்தது இப்போது மாறிவிட்டது. ‘தி ப்ளாக் ஹோல்’ என்கிற இரண்டு நிமிடக் குறும்படம் 2 பில்லியன் டாலர் சம்பாதித்திருக்கிறது.
உலகிலேயே அதிகம்பணம் சம்பாதித்திருக்கிறது. இந்தப் படத்தை ‘பாபநாசம்’ போல அன்றாடவாழ்க்கை கலந்து எடுத்திருக்கலாம். இருந்தாலும் இதை குறைகளைத் தவிர்த்து விட்டு ரசிக்கலாம். ” என்றார்.
“ரவி மிகச் சிறந்த நண்பர். மனிதர் . தன் நடிப்புத் திறமையை வெளிக்காட்ட வாய்ப்பாக இந்தப் படத்தை எடுத்துள்ளார். இரண்டு கேரக்டரும் அவர்தான் என்பதை கண்டுபிடிக்கவே நேரம் ஆனது .
மிகச் சிறப்பாக நடித்துள்ள ரவிக்கு இந்தப் படத்துக்குப் பிறகு இன்னும் நிறைய நல்ல படங்கள் நடிக்கக் கிடைக்கும் ” என்றார் இயக்குனர் ஸ்ரீராம் .
நடிகர் மைம் கோபி பேசும்போது” எனக்கு பணம் தந்தது சினிமா., புகழ் தந்தது சினிமா, எல்லாம் தந்தது சினிமா. .
இன்று செல்போன் ஆறாவது விரல் போலாகிவிட்டது. பெண் நண்பர்களிடம் பேச ஆரம்பித்து விட்டால் 24 மணி நேரமும் பேசுகிறார்கள்.
செல்போனை தூக்கி வீசுங்கள். யாரையும் மனசால் புண்படுத்த வேண்டாம். நல்ல மக்களை சேருங்கள். நல்ல வார்த்தை பேசுங்கள். ” என்றார்.மாஸ் ரவி
நடிகர் வல்லவன், ” பேஸ்புக்கை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தினால் நல்லது. மழை வெள்ளத்தின் போது எல்லாரையும் பேஸ்புக்தான் இணைத்து உதவிட பயன்பட்டது.”என்றார்
நடிகர் இமான் அண்ணாச்சி பேசும்போது ” சினிமாவில் எப்படி ஜெயிப்பது என்று தெரியாமல் நானும் திணறியிருக்கிறேன். வாய்ப்பு தேடிய போது நாங்கள் டீக்கடையில் கூடிப் பேசுவோம்.
இப்போது பலர் பல இடங்களில் மேலே போய் விட்டார்கள். ஆனாலும் இன்னமும் சிலர் அங்கே அன்றாடம் வருவதை பார்க்கிறேன்.அப்போது வருத்தமாக இருக்கும்.
வாய்ப்பு தேடுவோருக்கு ஒரு அறிவுரை, எல்லாரும் வருமானத்துக்கு ஒரு தொழிலை வைத்துக் கொள்ளுங்கள். வாய்ப்பு தேடிய காலங்களில் நான் காலையில் காய்கறி வியாபாரம் செய்வேன்.
இங்கு எல்லாருமே வலிதாண்டி வந்தவர்கள்தான் . அடுத்து மாஸ் ரவி படம் இயக்கும்போது எனக்கும் நடிக்க வாய்ப்புத் தரணும்” என்றார் , “என்றார்.
இயக்குநர் ராகேஷ் பேசிய போது ” நான் முதலில் இந்த மாஸ் ரவியை ‘தகடு தகடு’ படத்தில் நடிக்க வைத்தேன். அப்போது எல்லாம் பதற்றமாக இருப்பர்.
”ஏன்யா பதற்றம், எனக்கும் இதுதான் முதல் படம் நான் பதற்றமில்லாமல் இயக்குநர் போல நடிக்கவில்லையா ?அதுபோல். நீயும் நடி. பதற்றத்தைக் காட்டக் கூடாது’ என்றேன்.
மறுபடி ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன? ‘ படத்தில் நடிக்க வைத்தபோது பதற்றமில்லாமல் நடித்தார். நல்ல முன்னேற்றம் தெரிந்தது எப்படி என்றேன். ஆறு குறும்படங்களில் நடித்து விட்டதாகக் கூறினார்.
திருட்டுவிசிடி பற்றிப் பேசுகிறார்கள். அதை ஒழிக்கவே முடியாது. திருடனாய் பார்த்து திருந்தினால்தான் உண்டு. எப்போதும் திருடனைப் பொதுமக்கள்தான் பிடித்து தர்ம அடி கொடுப்பார்கள்.
திருட்டுவிசிடி விஷயத்தில் பொதுமக்களே திருட்டு வேலை செய்கிறார்கள்.
இங்கு வந்துள்ள இமான் அண்ணாச்சியை என்படத்தில் நடிக்க கேட்ட போது அதிக சம்பளம் கேட்டதால் நடிக்க முடியாமல் போய்விட்டது. ” என்றார் .
உடனே இமான் அண்ணாச்சி எழுந்து” எனக்கு இடையில் உள்ளவர்கள் செய்தவேலை அது .நான் ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் நடிக்க மட்டுமே அதிக சம்பளம் கேட்பதுண்டு. அதே போல இதற்கும் கேட்டிருக்கிறார்கள்.
நல்ல கதை இருந்தால் எனக்குச் சம்பளம் இரண்டாம் பட்சம்தான். இதற்குமுன்பு ஒரு மேனேஜர் இருந்தார்.அவரை இப்போது மாற்றிவிட்டேன். என்னை இப்போது நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் .
என் சம்பளம் சம்பந்தமாக வதந்திகளை நம்ப வேண்டாம்.” என்றார்.
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462