தியான் பிக்சர்ஸ் சார்பில் நட்சத்திரம் செபாஸ்டியான் தயாரிக்க, தியான் பிரபு, அஷ்மிதா, நிலோபர் காக்கா முட்டை புகழ் ரமேஷ் மற்றும் விக்கி , வேல்முருகன் நடிப்பில் தியான் பிரபு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் .
கிராமங்களில் வெளியூர்களில் இருந்து சினிமா இயக்கம் , நடிப்பு மற்றும் பல்வேறு துறைகள் மீது கொண்ட ஆசையில் சென்னைக்கு வருவோர் பலர்.
அப்படி வந்து பட்டினி கிடந்தது தெருவில் அலைந்து காலத்தை இளமையை உறவுகளை உணர்வுகளை வாழ்க்கையை தொலைத்து ஒரு சிலர் மட்டும் முன்னேற பலர் கால வெள்ளத்தில் காணாமல் போகின்றனர் .
அப்படி போராடி உதவி இயக்குனர் ஆகி, தான் இயக்க ஒரு நல்ல கதையை தயார் செய்து ஒரு தயாரிப்பாளரிடம் அல்லது இயக்குனரிடம் சொன்னால் , சொன்னவனின் அனுமதி இன்றி அவனுக்கு எந்த பயனும் இன்றி , அந்தக் கதையைத் திருடி வேறொரு இயக்குனர் மூலம் அதைப் படமாக்கி அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றால்உண்மைப் படைப்பாளிக்கு எப்படி இருக்கும்?
அவன் தன் உரிமைக்காகப் போராடும் போது எதாவது ஒரு வகையில் அவனை ஏமாற்றியவர்கள் சேர்ந்து அவனை ஒழித்துக் கட்டினால் அவன் என்ன செய்வான்?
இதை திகில் பாணியில் அணுகி இருக்கும் படம்தான் படைப்பாளன்.
தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்லப் போகிறான் ஓர் இயக்குனன். பயங்கரமான பேய்க்கதை சொல்கிறான் . தயாரிப்பாளர் கதை கேட்டு நடுங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் அடுத்த அதிர்ச்சியாக கதை சொல்லும் இயக்குனரே ஒரு பேய் என்பது தெரிய வருகிறது .
மனைவியைக் கூட சரியாகக் கவனிக்க முடியாமல் போராடி அவள் மரணமே அடைந்த நிலையில் , தான் உருவாக்கிய கதையை அந்த படைப்பாளி மைகா புரடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் லோக்கல் பொறுப்பாளரான தயாரிப்பாளரிடம் சொல்ல, அந்தக் கதையை வைத்து வேறொரு இயக்குனரை இயக்க வைத்து நூறு கோடி பட்ஜெட்டில் எடுத்த படம் சூப்பர் ஹிட் ஆகிறது .
தட்டிக் கெட்ட அந்த இயக்குனரை லோக்கல் தயாரிப்பாளரும் வெளிநாடு வாழ் தலைமைத் தயாரிப்பாளரும் அவரது ஆட்களும் சேர்ந்து கொலை செய்கின்றனர் . அந்த படைப்பாளி பேயாக வந்து என்ன செய்கிறான் என்பதே இந்தப் படம் .
ஆரம்பத்தில் கொலை செய்யப்பட்டு அழுகும் பிணத்தை போலீஸ் அதிகாரிகள் கண்டு பிடிப்பதில் துவங்கும் படம் , சினிமா ஆர்வத்தில் வந்து கனவுகளில் கரைந்து போகும் நபர்களை படம் பிடிக்கிறது.
பேயாக வரும் இயக்குனர் சொல்லும் கதையில் கிளாமர், திகில் எல்லாம் இருக்கிறது . வேல்முருகனின் ஒளிப்பதிவு அந்தப் பகுதிகளில் சில்லிடல் உணர்வைத் தருகிறது. பால முரளியின் இசையில் சத்தம் அதிகம் என்றால் பயப்படவும் வைக்கிறார் .
காட்சிகளும் ஷாட்களும் அளவுக்கு அதிகமாக நீண்டாலும் பயமுறுத்துகிறது . நடிக நடிகையரின் பங்களிப்பும் சிறப்பு .
மிக மோசமான ஒலிக்கலவை வசனங்களை சரியாக கேட்க விடாமல் இம்சிக்கிறது
பாதிக்கப்பட்ட இயக்குனருக்கும் ஆதரவாக தொலைக்காட்சி விவாதத்தில் பேசும் பிரமுகராக , இயக்குனர் – நடிகர் தருண் கோபி நடித்துள்ளார்
பின்னர் கதைக்கு சொந்தக்கார படைப்பாளி கொலை செய்யப்படுவது என்று பயணித்து கடைசியில் கருத்தியலாக நிறைகிறது .
ஒருவனின் உழைப்பை, திறமையை , அங்கீகாரத்தை , படைப்பை திருடுவது எவ்வளவு பெரிய அநியாயம் என்பதை கடைசிக் காட்சியில் சிறப்பாக நிறுவுவதில் வெற்றி அடைகிறது .
சினிமாக்காரர்கள் மட்டுமல்ல .. மக்களும் பார்க்க வேண்டிய படம் .
