வி கே பி டி கிரியேஷன்ஸ் சார்பில் டி.வேலு தயாரிக்க,
இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் நாயகனாக அறிமுகம் ஆக,
கற்றது தமிழ் படத்திலும் , காதல் கசக்குதய்யா படத்தில் கதாநாயகியாகவும் நடித்த வெண்பா கதாநாயகியாக நடிக்க ,
இவர்களுடன் முக்கிய வேடத்தில் கே எஸ் ரவிகுமார், தம்பி ராமையா, பொன்வண்ணன், ஊர்வசி, ஆர் கே சுரேஷ் , பருத்தி வீரன் சுஜாதா ஆகியோர் நடிக்க, 
மறுபடியும் காதல் படத்தை இயக்கிய வாசுதேவ் பாஸ்கர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் பள்ளிப் பருவத்திலே .
படத்துக்கு இசை விஜய் நாராயணன் என்ற புதியவர் . ஒளிப்பதிவு வினோத்குமார் .
படத்தின் டிரைலர், பாடல் காட்சிகளை பார்த்த கமல்ஹாசன் ”படத்தின் டிரைலர், பாடல் காட்சிகள் சிறப்பாக உள்ளது. 
இந்த படம் ஒவ்வொருவருடைய பள்ளி பருவத்திலே உள்ள ஞாபகங்களை நினைவுபடுத்தும். நந்தன் ராம் , வெண்பா மாணவர்களாக வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.
எனக்கும் என் பள்ளி பருவத்திலே காலங்களை ஞாபகப்படுத்துகிறது. பள்ளி பருவத்திலே படத்தை பார்க்க ஆவலாய் உள்ளேன்” என்றார்
ஏ ஆர் ரகுமானும் வாழ்த்துத் தெரிவித்து இருந்தார் .
இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா கலைவாணர் அரங்கில் நடந்தது .
நிகழ்வில் பாடல்களும் டிரைலரும் திரையிடப்பட்ட்டது . மெல்லிசையாக அமைந்த பாடல்கள் மனதை ஈர்த்தன , மிகப் பிரம்மாதமாக இருந்தது வினோத்குமாரின் ஒளிப்பதிவு
நந்தன் ராம் உயரமாக , வசீகரிக்கும் புன்னகையோடு இருக்கிறார் . வெண்பா இயல்பாக அழகாக நடித்திருந்தார்
நிகழ்ச்சியில் படக் குழுவினர் கலந்து கொள்ள , எஸ் ஏ சந்திர சேகரன் , பாண்டிராஜ் , சற்குணம் , தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி , 
மற்றும் ஜாகுவார் தங்கம் , நடிகர்கள் நாசர் , பொன்வண்ணன் , அபிராமி ராமநாதன், தேவயானி ஆகியோர் வந்து வாழ்த்தினர்.
வரவேற்புரையாற்றிய பி டி செல்வகுமார் இசை அமைப்பாளர் சிற்பியின் சிறப்புகளை கூறி,
வந்திருக்கும் எல்லோரையும் புகழ் மாலைகளால் அர்ச்சித்து வரவேற்புரையாற்றினார் 
வாசுதேவ் பாஸ்கரின் நெருங்கிய நண்பரான இயக்குனர் சற்குணம் தன்னுடைய நிகழ்ச்சி போல,
எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ததோடு கணீர் குரலில் செந்தமிழில் வாழ்த்தினார்
இசையமைப்பாளர் விஜய் நாராயணன் தன் தாயை வணங்கி பாடி பிறகு அனைவருக்கும் நன்றி சொன்னார் . 
பாண்டிராஜ் ” வாசுதேவ் பாஸ்கர் கண்டிப்பாக ஜெயிப்பார் ” என்றார் .
நாசரும் , ஜாகுவார் தங்கமும், தேவயானியும் ” நந்தன் ராம் பார்த்த சில நொடிகளிலேயே மனதுக்குள் புகுந்து கொள்கிறார் . அவர் நிச்சயம் பெரிய ஹீரோவாக வருவார் ” என்றார் .
இயக்குனர் கஸ்தூரி ராஜாவும் பிரபு சாலமனும் ” வெண்பா என்ற அழகிய தமிழ்ப் பெயரோடு,

தமிழ் பேசத் தெரிந்த கதாநாயகி கிடைத்துள்ளது மகிழ்வான விசயம் . மிக நன்றாக அவர் நடித்தும் இருப்பது தெரிகிறது ” என்றார்கள் .
படத்தில் நடித்துள்ள போன் வண்ணனும் ஆர் கே சுரேஷும் ” மிகக் குறைந்த வசதியோடு மிக வேகமாக படப்பிடிப்பு நடந்தபோதும்,
ஸ்டெடி கேம் இயக்கஒரு உதவியாளர் கூட இல்லாத நிலையில் இப்படி ஓர் அற்புதமான் ஒளிப்பதிவை வினோத்குமார் கொடுத்துள்ளார் . 
இந்தப் படத்துக்குப் பிறகு அவர் பெரிய உயரத்துக்கு வருவார் ” என்றார்கள் . (கேமரா மேனை மேடை ஏற்றுவது இல்லையா ? இப்படியா கீழே உட்கார வைத்து இருப்பது ?)
“இவ்வளவு நல்ல படத்தில் சிறப்பான நடிகர்கள் நடித்துள்ள படத்தில் நாயகனாக நடித்தது பெருமையான விஷயம் .
இயக்குனருக்கும் தயாரிப்பளருக்கும் நன்றி . இவ்வளவு ஜாம்பவான்கள் என்னை வந்து பாராட்டியதற்கு நன்றி ” என்றார் நந்தன் ராம் 
நாயகி வெண்பா” என் பெயரையும் நான் தமிழ்ப் பெண் என்பதையும் பாராட்டி மகிழ்ந்து இவ்வளவு பேர் பேசியது சந்தோஷமாக இருக்கிறது.
உங்கள் எல்லோரின் ஆதரவும் எனக்கு வேண்டும் ” என்றார் .
” திரையில் பார்த்த சில நொடிகளிலேயே நாயகி நாயகன் இருவரும் மனம்றா கவர்கிறார்கள் . அவர்கள் கண்டிப்பாக வெல்வார்கள் ” என்றார் அபிராமி ராமநாதன் .
எஸ் ஏ சந்திரசேகர் தன் பேச்சில்,
” இசை அமைப்பாளர் தன் தாயை வணங்கிப் பாடியபோது நான் கண் கலங்கி விட்டேன் . தாயைப் போற்றிய யாரும் தோற்பதில்லை .
பாடல்கள் மெலடியாக இருக்கிறது , அருமை . செங்கல்பட்டுக்கு அந்தப் பக்கம் இன்னும் மெலடி பாடல்கள்தான் ரசிக்கப் படுகின்றன.
நந்தன் ராம் – வெண்பா இருவரும் கியூட் ஆக இருக்கிறார்கள் . நல்ல நிலைக்கு வருவார்கள் .
பொன்வண்ணன் , ஆர் கே சுரேஷ் இருவரும் பிரேமில் பார்க்க அட்டகாசமாக இருக்கிறார்கள் .
தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் வாழ்த்துகள் ” என்றார் .
மேடையே ஏறாமல் மொத்த நிகழ்ச்சியையும் கீழே அமர்ந்து ரசித்துக் கொண்டு இருந்தார் அறிமுக நாயகன் நந்தன்ராமின் அப்பாவான இசையமைப்பாளர் சிற்பி.
