லைட்ஸ் ஆன் மீடியா சார்பில் ஈ ஏ வி சுரேஷ், சுந்தர கிருஷ்ணா, வெங்கி சந்திரசேகர் தயாரிக்க,, நிஷாந்த் ரூசோ, காயத்ரி, கோடங்கி வடிவேல், கவுதம், ராட்சஷன் வினோத், விவேக் பிரசன்னா, நடிப்பில் தனபால் கோவிந்தராஜ் எழுதி இயக்கி இருக்கும் படம்.
காவல் நிலையத்தில் போலீஸ்காரர் ஒருவருக்கும் ( வடிவேல்) அங்கு கையெழுத்துப் போட வரும் நபருக்கும் (நிஷாந்த் ரூசோ)எப்போதும் ஏழாம் பொருத்தம். இந்த நிலையில் அருகில் உள்ள காட்டில் ஒரு பிணம் கிடப்பதாகத் தகவல் வர, அந்தக் காட்டுக்குப் போக மேற்படி போலீஸ்காரருக்கு வழி தெரியாத நிலையில் , கையெழுத்துப் போட வரும் கைதியை உடன் அனுப்புகிறார் இன்ஸ்பெக்டர்
காட்டில் இருவரும் உடலைக் கண்டு பிடித்த நிலையில் , சிக்னல் கிடைக்காத காரணத்தால் இன்பெக்டரிடம் ( வினோத்) போனில் பேச சற்றுத் தள்ளி போக வேண்டிய சூழலில் உள்ள போலீஸ்காரர், கைதிக்கும் பிணத்துக்கும் ஒரே கை விலங்கை போட்டு விட்டுப் போகிறார் .
அந்த நபரை ( விவேக் பிரசன்னா) கொலை செய்ய ஒரு கூட்டம் காட்டுக்குள் இறங்குகிறது .
பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நடிகையின் ( காயத்ரி அய்யர்) கணவர்தான் சாவில் இருந்து பிழைத்தவர் என்று தெரிகிறது .
நடிகைக்கும் ஒரு எம் எல் ஏ வுக்கும் கொடுக்கல் வாங்கல் இருக்கிறது . பிழைத்தவரைக் கொலை செய்ய முயலும் கும்பலின் தலைவனுக்கும் ( அருள்) நடிகைக்கும் ஒரு விவகாரம் இருக்கிறது .
ஒரு நிலையில் சாவில் இருந்து பிழைத்தவனைக் கொலை செய்யும் சதியில் போலீசும் சேர, கையெழுத்துப் போட வந்த குற்றவாளி என்ன செய்தான்? கொலைக் குறி வைக்கப்பட்டவர் என்ன ஆண் என்பதே படம்.
படத்தின் முதல் சிறப்பு அந்த காடுகள் லொக்கேஷன். சும்மா அள்ளுகிறது . அஷ்வின் நோயல் ஒளிப்பதிவு ஜஸ்ட் லைக் தட் காடுகளை படம் எடுத்து இருக்கிறது.
ஸ்டேஷனில் கையெழுத்துப் போடும் குற்றவாளி நல்லவன் கேரக்டரில் நிஷாந்த் ரூசோவின் தோற்றம் கவனிக்க வைக்கிறது . அந்த முழியும் குரலும் அவ்வளவு பொருத்தம்.
அவருக்கும் கோடங்கி வடிவேளுக்குமான சண்டை கெமிஸ்ட்ரி ஆரம்பக் காட்சிகளில் ரசனை.
ரெஞ்சித் உன்னியின் இசை சில இடங்களில் சபாஷ் போட வைத்துள்ளது .
உள்ளங்கை நெல்லிக்கனியாக ஊகிக்க முடிந்த கதை திரைக்கதை. மிக எளிய படமாக்கல் தந்திருக்கிறார் தனபால் பத்மநாபன் .
உருண்டு புரண்டு அலைந்து திரிந்து ஒரு படத்தை எடுத்து இருக்கிறார்கள் ஈ ஏ வி சுரேஷ், சுந்தர கிருஷ்ணா, வெங்கி சந்திரசேகர்
.
ஊருக்குருவி ஆகி விட்டார்கள்; அடுத்த முறை பருந்தாக வாழ்த்துகள்