N 4 @விமர்சனம்

தர்மராஜ் பிலிம்ஸ் சார்பில் நவீன் ஷர்மாவுடன் இணைந்து லோகேஷ் குமார் தயாரித்து எழுதி இயக்க, மைக்கேல் தங்கதுரை, கேப்ரியெல்லா செலஸ், வினுஷா தேவி,  அனுபமா குமார், அப்சல் ஹமீது, பிரக்யா நக்ரா, வடிவுக்கரசி, அழகு நடிப்பில் வந்திருக்கும் படம். 

சென்னையில் N 4 சாலையை ஒட்டிய குப்பத்தில் வாழும் எளிய மனிதர்களின்  கதை . இரண்டு காதல் ஜோடிகள் !

ஒன்று  சூர்யா- சவுந்தர்யா (மைக்கேல் தங்கதுரை- கேப்ரியெல்லா செலஸ்) இன்னொன்று கார்த்தி – அபிநயா (அப்சல் ஹமீது- விஷ்ணு தேவி) . அபிநயா பேச்சு மாற்றுத் திறனாளி. 

இந்த ஜோடிகளுக்குள்  பாசாங்கில்லாத காதல் ,பெண்களுக்கு இருக்க வேண்டிய சீற்ற குணம் , அதை ஏற்கும் ஆண்கள் என்று எளிய இனிய வாழ்க்கை . அனாதைக் குழந்தைகளான  இவர்கள் நால்வரையும் எடுத்து வளர்க்கும் ஒரு பெண் ( வடிவுக்கரசி) . ஓடிப் போய்  திரும்ப வரும் அவரது கணவர் வேலு (அழகு)

இந்த இளைஞர்களுக்கு தொழில் ரீதியாக ஒரு பகை. 

உடல்நிலை பாதிக்கப்பட்ட மகனைக் கொண்ட ஒரு பெண் இன்ஸ்பெக்டர் ( அனுபமா) . அந்த மகனுக்கு சரியான சமயத்தில் உதவி செய்து உயிர்காக்கும் வேறொரு மேட்டுக் குடி காதல் ஜோடி ( அக்ஷய் – பிரக்யா நக்ரா) 

மகனின் மருத்துவ செலவுக்காக பணத்துக்கு இன்ஸ்பெக்டர் அலைய , போதையில் மேட்டுக்குடிக் காதலன் சுட்ட துப்பாக்கிக் குண்டு , பேச்சு மாற்றுத் திறனாளி அபிநயாவின் உயிரைப் பறிக்கிறது . 

இப்போது குற்றவாளிகளைப் பிடிக்காமல் விட்டால் இன்ஸ்பெக்டருக்கு மருத்துவ செலவுக்கு பணமும் கிடைக்கும் . நடந்தது என்ன என்பதே இந்தப் படம. 

மிகச் சிறப்பான ஃபிலிம் மேக்கராக இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் குமார்  .  படத்தை அவர் துவங்கி நடத்திச் செல்லும் விதம் , காட்சி அமைப்பு, நடிக நடிகையரிடம் வேலை வாங்கிய விதம் யாவும் அற்புதம் . சிறு சிறு துணைக் கதாபாத்திரங்களுக்கும் வாழ்வியல் ரீதியாக உயிரும் உணர்வும் கொடுத்து அசத்துகிறார் இயக்குனர் . 

சில காட்சிகளில் நாமும் ஒருவராக உள்ளே உட்கார்ந்து விடுகிறோம். அப்படி ஒரு அற்புத இயக்கம் . 

கடலுக்குப் போய் வராமல் இருக்கும் சூர்யாவையும்  கார்த்தியையும் எதிர்பார்த்து ஆயா , சவுந்தர்யா , அபிநயா, வேலு, பக்கத்து வீட்டுப் பெண், புறம் பேசும் இன்னொரு பெண் அனைவரும காத்திருக்கும் காட்சி ஒன்று எடுத்து இருக்கிறார் இயக்குனர் .

ஆர்ட்டிஸ்டுகள் பொசிஷன் வரைக்கும் அது ஒரு முழுமையான காட்சி . திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட வேண்டிய COMPLETE SCENE அது 

படம் முழுக்கவே இப்படி  வாழ்வியல் காட்சிகள் அருமை . 

உலகமே மேக்கப் பூச்சுகளின் விற்பனைக்காக வெள்ளை நிறமே அழகு என்று ரத்த சோகை நோயாளிகளை உருவாகிக் கொண்டு இருக்கும் நிலையில் கருப்பு என்பது எவ்வளவு அழகு . அதுவும் அந்த கருப்பான பெண்கள் கோபக்காரப் பெண்களாக இருந்தாலும் சரி,அமைதியான பெண்களாக இருந்தாலும் சரி  அவர்கள் எவ்வளவு  அழகு தேவதைகள் என்பதை வெளிப்படுத்தும் இடத்தில் இயக்குனரின் மொழி , நில, இன , சமூக அரசியல் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது . 

அண்ணன் தம்பி இருவருக்கும் சூர்யா கார்த்தி என்று பெயர் வைத்த காரணம் மட்டும் இயக்குனர் சொல்லாவிட்டால் புரியாது. 

ஈர்ப்பான மைக்கேல் தங்கதுரையின் முகம் கேரக்டருக்கு பொருத்தம் . அப்சல் ஹமீதும் சிறப்பு . 
கட்டிப் பிடித்து வாழ்த்துச் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது . அப்படி ஒரு அற்புதமான நடிப்பை கொடுத்து இருகிறார்கள் கேப்ரியா செலசும், வினுஷா தேவியும் . எப்போதும் பொங்கிப் பேசும் சவுந்தர்யா, அபிநயத்தால்  பேசும் அமைதியான அபிநயா என்று அந்த இணைப்பே அருமை . 

போலீஸ் ஸ்டேஷனில் பேரிளம் பெண் போலீசின் குறும்பு அருமை. இன்ஸ்பெக்டராக வரும்ம் அனுபமாதான்,  எமோஷன் என்ற பெயரில், ஏதோ  நாற்றமடிக்கும் பொருளை முகர்ந்து பார்த்து விட்ட பாவனையிலேயே படம் முழுக்க வந்து கடுப்பு கிளப்புகிறார் 

திவ்யனின் ஒளிப்பதிவு , டானி சார்லஸ் படத் தொகுப்பு  பால சுப்ரமண்யத்தின் இசை மற்றும் ஒலி வடிவமைப்பு, ஒலிக் கலவை யாவும் சிறப்பு. கலை இயக்கம் அருமை . 

ஒரு நல்ல படம் பார்க்கும் உணர்வை கடைசி வரை கொடுக்கிறது இந்தப் படம் . 

ஆனால் திரைக்கதைதான்  ஒரு நிலையில் திக்குத் தெரியாமல் அலைகிறது . ஆபரேஷனுக்கு பணம் கொடுக்கவே,  ஏன் ஓடிப்போனார்? எதற்கு திரும்ப வந்தார் என்று தெரியாத வேலு திரும்ப வருவது…. அவரை சந்திக்கும் ஒருவர் என்னவோ அவர் இங்கு தொடர்ந்து இருப்பது போல் சகஜமாக பேசுவது ….. சண்டை போடும் ரவுடி திடீர் என நட்பாகும் சினிமாத்தனம் ….,கடைசியில் எந்தப் பக்கம் நிற்பது என்பதில் தீர்மானம் இல்லாத திரைக்கதை  என்று படத்துக்குப் பின்னடைவாகப் போய் விட்டது. 

உள்ளேயே ஒரு அட்டகாசமான திரைக்கதை இருக்கிறது . 

கார்த்தி கஞ்சா அடிப்பதைப் பார்த்து பாசத்தோடு சவுந்தர்யா கண்டிக்க அதனால் வரும் சண்டையில் எல்லோரும் ஆளுக்கொரு பக்கம் பிரிகிறார்கள் அல்லவா ? அதையே முக்கிய திரைக்கதையாகக் கொண்டு டெவலப் செய்து மற்ற விசயங்களை ஊறுகாய் போல வைத்து முழு திரைக்கதையையும் எழுதி இருந்தால் இந்த அட்டகாசமான மேக்கிங்குக்கு படம் பட்டையைக் கிளப்பி இருக்கும் . 

ஆனால் அந்த தங்கப் பாதையை வடிவுக்கரசி அழுது நடிக்கும் கண்ணீரின் காட்சியில் அநியாயமாக மூழ்கடித்து விட்டார்கள் . 

எனினும் உணர்வுகளின் ஆவேசச் சங்கமமாக அட்டகாசமாக மேக்கிங்கில் சுகமான பயணம் தருகிறது N4.

வாழ்த்துக்கள் லோகேஷ் குமார். இன்னும் நல்ல கதை திரைக்கதைகளோடு உங்கள் திறமையைக் காட்டுங்கள் .
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *