அவனி டெலி மீடியா சார்பில் குஷ்பூ சுந்தர் தயாரிக்க, சுந்தர் சி, ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி நடிப்பில் பத்ரி எழுதி இயக்கி இருக்கும் படம்.
கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலில் இருக்கும் ஒருவன் ( ஜெய்) , மாலை முரசு நாளிதழின் நிருபரை (ஹனி ரோஸ்) சந்திக்க விரும்புகிறான். சந்திக்கும் நிருபரிடம் தான் செய்யாத கொலைக்கு தண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் , ஆனால் செய்த எட்டு கொலைகள் பற்றி யாருக்கும் தெரியாது என்கிறான் .
மேற்படி சைக்கோ கொலைகாரனின் வழக்கை விசாரிக்கும் பொறுப்பு , சாராய வியாபாரி ஒருவனின் குண்டு வைப்புக்கு மகளையும் புத்திர சோகத்தால் மனைவியையும் இழந்த போலீஸ் அதிகாரி ( சுந்தர் சி ) கைக்கு வருகிறது .
மாலைமுரசின் நிருபர் இந்த போலீஸ் அதிகாரிக்கு பெண் பார்க்கப்பட்டு, காதல் காரணமாக போலீஸ் அதிகாரியை மணக்க மறுத்தவர்.
மிகுந்த புத்திசாலித்தனத்துடன் செயல்படும் கொலைகாரன் சட்டத்தின் படியே ஜெயிலில் இருந்து விடுவிக்கப்படுகிறான் . வெளியே வந்த அவன் மேலும் சிலரையும் பெண் நிருபர் , அவரது மகள்,,போலீஸ் அதிகாரியின் தந்தை ஆகியோரைக் கொல்ல முயல , என்ன நடக்கிறது என்பதே இந்தப் படம் .
போலீஸ் அதிகாரியாக மிக இயல்பாக நடித்துள்ளார் சுந்தர் சி.
வில்லனாக ஜெய் … ஆரம்பத்தில் பொருந்தவில்லை என்றாலும் போகப் போக மிரட்டுகிறார்
ஹனி ரோஸ் , மானஸ்வி இருவரும் ஓகே.
கொலை செய்து விட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைவது , சட்டம் விரிக்கும் வலையை அந்த சட்டத்துக்கே வலை விரித்து முடக்குவது என்று ஜெய் கேரக்டர் செய்யும் வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது .
படத்தில் மாலைமுரசு நாளிதழின் தலைப்புச் செய்தியாக வரும் ஒரு வாசகம்… ‘ ஈன்ற தந்தையைக் கொன்ற தந்தை’
ஈனுதல் என்பது உடம்பில் இருந்து வெளிக் கொண்டு வரும் உயிர். ஆக என்றைக்கு ஒரு ஆணின் உடலுக்குள் கர்ப்பப்பை வந்து அத்துண கரு வளர்ந்து அவன் உடம்பில் இருந்து குழந்தை பெற்றெடுக்கப்படுகிறதோ அப்போதுதான் அவன் ஈன்ற தந்தை என்று ஆக முடியும் .
மிகப் பழமையான பாணிக் காட்சிகளை ரத்தத்தில் முக்கி எடுத்ததற்குப் பதில் வித்தியாசமான காட்சிகள் அமைத்து சுவாரஸ்யத்தில் நீராட்டி இருக்கலாம்.
எனினும் கடைசிக் காட்சிகள் பரபரப்பு படபடப்பு .
