பேரன்பு @ விமர்சனம்

ஸ்ரீ ராஜலக்ஷ்மி பிலிம்ஸ் சார்பில் பி எல் தேனப்பன் தயாரிக்க, மம்முட்டி, தங்க மீன்கள் சாதனா, அஞ்சலி,

அஞ்சலி அமீர், பாவல் நவகீதன் நடிப்பில் ராம் இயக்கி , உலகப் பட விழாக்களில் பல்வேறு விருதுகளை பெற்ற படம் பேரன்பு .

அன்பா ? வம்பா ? பார்க்கலாம் . 

வெளிநாட்டிலேயே வெகு காலம் வேலை செய்த அமுதவனுக்கும் ( மம்முட்டி ) தனக்கும் பிறந்த,

பாப்பா என்ற மூளை முடக்குவாதக் குறைபாடு உடைய  ( ஸ்பாஸ்டிக்) பாப்பா என்ற சிறுமியை ( தங்க மீன்கள் சாதனா) ,

கணவனிடமே ஒப்படைத்து விட்டு , தனக்குப் பிடித்தவனோடு போய் விடுகிறாள் மனைவி.

அவமானம் கருதி மனிதர்கள் குறைவான – தனக்குப் புதிய மழைப் பிரதேசத்தில் வீடு பார்த்து மகளோடு வசிக்கப் போகிறார் அமுதவன் .

அதுவரை தந்தையிடம் ஒட்டாமல் அம்மாவுக்காக ஏங்கிக் கொண்டிருந்த பாப்பா , தந்தையிடம் கொஞ்சம் நெருங்குகிறாள் .

 பாப்பா பெரிய மனுஷி ஆனா நிலையில் அவளை கவனிக்க ஒரு பெண்ணின் உதவி தேவைப் படுகிறது அமுதவனுக்கு .

வேலைக்கு வந்த விஜய லக்ஷ்மி  (அஞ்சலி ) பாப்பாவோடு மன ரீதியாகவும், அமுதவனோடு உடல் ரீதியாகவும் நெருங்குகிறாள் . 

அமுதவனும் விஜய லட்சுமியும் திருமணம் செய்து கொண்ட நிலையில் ,

விஜய லட்சுமியின் தாய்மாமனாக அறியப்படும் பாபு (பாவல் நவ கீதன்) அவளது கணவன் என்பதும் …

அமுதவன் பாப்பா இருவரும் வசிக்கும் — ஒரு வெள்ளைக்காரப் பெண்மணிக்கு சொந்தமான அந்த வீட்டின்,

வாடகை உரிமையை பெற்று அங்கே ரெசார்ட் அமைக்க விரும்பும் சில கட்டப் பஞ்சாயத்து நபர்களின்

 ( பி எல் தேனப்பன், ஜே எஸ் கே சதீஷ் குமார்) ஆட்கள் என்பதும் தெரிகிறது . 

விஜய லக்ஷ்மி மீது புகார் தர முடியும் என்ற நிலையிலும் , அந்த வீட்டின் வாடகை உரிமையை விட்டுக் கொடுத்து விட்டு

பாப்பாவோடு ஊருக்கு வருகிறார் அமுதவன் . 

கால் டாக்சி டிரைவராக வேலை செய்து கொண்டு மகளோடு ஒண்டிக் குடித்தனத்தில் வசிக்கிறார் . 

பாப்பாவுக்கு மூளை முடகுவாதக் குறைபாடு காரணமான காலை கால்களில் ஊனம் ,

மன வளர்ச்சியின் ஊனம் இருந்தாலும் வயதுக்குரிய உணர்வுகள்  வருகின்றன .

மாத விலக்கு சமயத்தில் தொடர்ந்து அப்பாவே நாப்கின் மாற்றுவதை அவர் விரும்பவில்லை . 

அது தொடர்பான பிரச்னைகள் அமுதவனின் மனத் திண்மையை உடைக்கின்றன . 

இதற்கிடையே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் ஓர் திருநங்கை விலை மாதுவின் (அஞ்சலி அமீர்) 

நட்பு அமுதவனுக்கு கிடைக்கிறது . 

அவளை மகளின் பிரச்னைகளை தீர்க்க பயன்படுத்திக் கொள்ள அமுதவனால் முடியவில்லை .

காரணம் குடும்பப் பெண்ணாக அறிமுகமான  விஜயலட்சுமியே கொடுத்த அதிர்ச்சி . 

ஒரு நிலையில் அமுதவன் மகளோடு வாழ்க்கையை முடித்துக் கொள்ள கடலில் இறங்க …

அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த பேரன்பு 

தமிழில் ஓர் உலகப் படம்  ! ‘இயற்கை இரக்கமற்றது , இயற்கை புதிரானது , இயற்கை சுவாரஸ்யமானது.

இயற்கை முடிவுகள் அற்றது’ உள்ளிட்ட 12 தலைப்புகளில் 12 காட்சி அத்தியாயமாக படத்தைக் கொடுத்து இருக்கிறார் ராம் . 

வார்தைகளால் விவரிக்க முடியாத அனுபவம் !

அழுத்தமான காட்சிகள்… ஆழமான நிதானமான ஷாட்கள் .. என்று ராம் படத்தை உருவாக்கி இருக்கும் விதம் ,

நாம் பார்ப்பது படம் அல்ல என்ற உணர்வை ஏற்படுத்துகிறது . 

அமுதவனாகவும் பாப்பாவாகவும் நாம் மாறி மாறி வாழத் துவங்கி விடுகிறோம் . அதுதான் இந்தப் படத்தின் ஆகப் பெரும் பலம் .

ராம்

அதுதான் இதை வழக்கமான சினிமாக்களில் இருந்து மிகுந்த உயரத்தில் வைத்துக் கொண்டாட வைக்கிறது . 

காட்சி அமைப்பு, படமாக்கல் , நடிக நடிகையரிடம் வேலை வாங்கிய விதம் இவற்றால், மஜீத் மஜிதி , கிம் கி டக் வரிசையில்

கம்பீர சிம்மாசனம் போட்டு உட்காருகிறார் ராம் .நெகிழ்வும் மகிழ்வும் எங்கள் மகா கலைஞனே . 

“பாப்பா கையையும் காலையும் வாயையும் திருப்பிக்கிட்டு நடக்கறத பாத்து நானும் நடக்க முயற்சி பண்ணேன் . முடியவே இல்ல .

ஆனா பாப்பா சர்வசாதரணமா நடக்கும் . அது அவளுக்கு பழகின விஷயம் .

அப்போதான் ஒருத்தர் கிட்ட போய் இன்னொருத்தரை காட்டி , ” நீங்க ஏன் அவரை மாதிரி இல்லன்னு கேட்கறது எவ்வளவு பெரிய வன்முறைன்னு புரிஞ்சது “

“இவ்வளவு நல்ல குழந்தை இருக்கிற நீங்க போய் அப்படி ஒரு காரியம் பண்ணி இருக்கீங்கனா ,,

பாவம் உங்களுக்கு எவ்வளவு பெரிய பிரச்னை இருக்குமோ ?” 
— போன்ற ராமின் வசனங்கள் …

எளிய வார்த்தைகளில் பெரிய விசயங்களை சொல்லும் விதம் பிரம்மிப்பு . 

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு செய்திருக்க்கும் உணர்வுக் கூட்டலும் தரக் கூட்டலும் சிலிர்க்க வைக்கிறது 

தேனி ஈஸ்வர்

ஒளிபபதிவே ஒரு குணாதிசயமாக மிளிர்கிறது . உலகக் கலைப் படங்களின் ஒளிப்பதிவாளர்களுக்கு எல்லாம்,

தனது பொருள் செறிந்த ஒளிப்பதிவால் சவால் விட்டு இருக்கிறார் தேனி ஈஸ்வர் .

இது போன்ற படங்களுக்கு தனது வழக்கமான பாணியிலேயே சிறப்பான இசையை கொடுத்து தூக்கி நிறுத்துவதில்

யுவன் சங்கர் ராஜா வல்லவர்தான். ஆனால் இதில் அவரது இசை இன்னும் ஆழமாக இறங்கி நிற்கிறது . 

பெரும்பாலும் மவுனத்தையும் மெல்லிய- நிதானமான ஒற்றை ஒலிகளையும் இசையாக்கி  இதயம் நெகிழ்த்துகிறார்  யுவன் .

கடைசியில் வரும் ரோலிங் டைட்டில் சமயத்தில் அரேபிய – உருது வடிவ இசை மூலம் தனது மனதின் மத உணர்வையும் வெளிப்படுத்திக் கொள்ள தவறவில்லை . 

பாப்பாவாக தங்க மீன்கள் சாதனா ! ஒரு மூளை முடக்குவாதக் குறைபாடு உள்ள சிறுமியை ,

அச்சு அசலாக தனக்குள் இருந்து உருவாக்கிக் காட்டி விதிர் விதிர்க்க வைத்து இருக்கிறாள் இந்த சிறுமி .

அந்த குறை பாடு உள்ள குழந்தையை அப்படி நடிக்க வைப்பது கூட கஷ்டமில்லை .

ஆனால் சாதனா நடித்து இருப்பது இமாலய உழைப்பும் திறமையும் இருந்தால் மட்டுமே சாத்தியம் 

“பாப்பா கையையும் காலையும் வாயையும் திருப்பிக்கிட்டு நடக்கறத பாத்து நானும் நடக்க முயற்சி பண்ணேன் . முடியவே இல்ல .

ஆனா பாப்பா சர்வசாதரணமா நடக்கும் . .. ” என்ற வசனத்தை இங்கே பொருத்திப் பார்த்தால் ,

சாதனா செய்திருக்கும் சாதனையின் பரிணாமம் கொஞ்சமாவது விளங்கும் . 

மகளே ! உனக்குக் கிடைக்காத விருதுகள் ,, விருதுகளே அல்ல !

தனது பண்பட்ட் நடிப்பால் அமுதவன் கதாபாத்திரத்துக்கு அமுது ஊட்டி இருக்கிறார் மம்மூக்கா !

அதுவரை மகளுக்கு எல்லா வகையிலும் பணி செய்து கிடந்த நிலையில் ,

அவளது பாலியல் பிரச்னை அறிந்து இடிந்து உடைந்து நொறுங்கி சிதறிப் போகிறாரே …

அடடா ! கல்லாய் சமைந்து போகிறோம் நாம் . (இன்னும் பேச்சில் அடிக்கும் மலையாள வாசனைதான் கொஞ்சம் உறுத்தல் . )

அஞ்சலி , பாவல் நவ கீதன் படத்துக்கு கிடைத்து இருக்கும் கூடுதல் கவிதைகள் !

அஞ்சலி அமீர் சிறப்பு . 

மகளின் பாலியல் பிரச்சனைக்கு அமுதவன் தீர்வு காண முயலும் விதம் முட்டாள்தனமானது .

ராமின் அப்நார்மல் தன்மை துருத்திக் கொண்டு வெளிப்படுவதோடு , முகம் சுளிக்க வைக்கும் விஷயம் அது . 

தன்னை விரும்பும் திருநங்கை விலைமாதுவை தனக்காக இல்லாவிட்டாலும்

பாப்பாவுக்காக முன்னரே திருமணம் செய்து கொண்டு  தாய்மையின் அன்பால் பாப்பாவை சரி செய்ய அமுதவன் முயலாதது ஏன் ? 

அதுதான் கதை .. அதுதான் குணாதிசயம் என்பது சரியான பதில் அல்ல .

 மகளுக்காகவே வாழும் தகப்பன் , தன் குணாதிசயத்துக்கு முக்கியத்துவம் தர மாட்டான் . 

அதே போல ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் இயற்கை இரக்கமற்றது , இயற்கை புதிரானது என்று

அத்தியாயத்தின் ஆரம்பத்திலேயே போடப்படும் தலைப்புகள்  திரைக்கதையின்  போக்கை யூகிக்க வைக்கிறது . 

மாறாக ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ” இப்படியாக.. இயற்கை இரக்கமற்றது  ‘ ‘என்று போட்டு,

ஒவ்வொரு அத்தியாயத்தையும்  முடித்து விட்டு , அடுத்த அத்தியாயத்தை துவங்கி இருந்தால் ….

இந்தக் குறையை தவிர்த்து இருக்கலாம் . 

இப்போதைய முடிவை விட ,  அமுதவன் பாப்பா இருவரும் கடலில் இறங்கி போய் விடுவதோடு படத்தை முடித்து இருந்தால் ,

இந்தப் படம் இன்னும் பெரும் மன அதிர்வை ஏற்படுத்தி ஸ்பாஸ்டிக் குழந்தைகள் மீது

சமூகம் காட்ட வேண்டிய அக்கறையை உணர்த்தி இருக்கும் . 
ஆனால் அது …

ஸ்பாஸ்டிக் குழந்தையை பெற்றால் தற்கொலைதான் முடிவு என்ற எண்ணத்துக்கு

ஸ்பாஸ்டிக் குழந்தைகளின் பெற்றோரை ஆளாக்கி விடும் என்ற நல்ல எண்ணத்தில் மாற்றி விட்டாரோ என்னவோ .?

படம் முடிந்து வெளியே வந்த போது, ” நெகிழ்வின் வெளியில் ஆழமும் உயரமும் ஒன்றே”

என்ற ஒரு சிந்தனை வந்து போனது . 

பேரன்பு …. மனித உணர்வுகளுக்கு மகுடம் சூட்டுவது !

மகுடம் சூடும் கலைஞர்கள்

************************************

ராம், சாதனா, தேனி ஈஸ்வர், மம்முட்டி, யுவன் சங்கர் ராஜா, அஞ்சலி 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *