ஊரே போற்றும் உண்மையான வெற்றி என்ற வாசகத்துடன் அடங்கிய பேனர் , உண்மையைச் சொல்லி கம்பீரப்பட்டது.
படத்தின் வெற்றியை கேக் வெட்டி அனைவரும் கொண்டாடினர் . விஜய் ஆண்டனியின் ரசிகர்கள் அவருக்கு அழகான நினைவுப் பரிசு ஒன்றை பரிசளித்தனர்
“இந்தப் படத்தின் ஆரம்பம் முதல் நான் உடன் இருந்திருக்கிறேன் . சசி மாதிரி ஒரு உழைப்பாளியை, நேர்மையான படைப்பாளியை பார்க்க முடியாது .அவர் கொடுத்தது எல்லாம் நல்ல படங்கள்தான் .
அதில் பலவும் வெற்றிப் படங்கள்தான். எனினும் இந்தப் படம் சசியை இன்னொரு உயரத்துக்கு கொண்டு போயிருக்கிறது ” என்றார் சசியின் நண்பர் இயக்குனர் ஸ்டான்லி
“இது நான் வாங்க விரும்பிய படம் . விஜய் ஆண்டனி சாரிடமும் பேசிவிட்டு வந்தேன் . ஆனால் எனக்கு இருந்த வேறு சில கமிட்மெண்டுகள் காரணமாக வாங்க முடியாமல் போனது .
ஆனாலும் அதிர்ஷ்ட வசமாக செங்கல்பட்டு எனக்கு வந்தது. நன்றாகப் படம் போகிறது ” என்றார் அவ்ரா சினிமாஸ் மகேஷ் .
‘வழக்கு எண்’ முத்துராமன் பேசும்போது ” என்னை எல்லோரும் கொடுமைக்கார போலீசாகவே நடிக்க வைத்தார்கள் .
ஆனால் மிக அற்புதமான கேரக்டர் கொடுத்து எனக்கு புது வழி காட்டி இருக்கிறார் சசி . எனக்கு நகைச்சுவை வேடங்களில் நடிக்க ரொம்ப ஆசை “என்றார் .
படத்தில் சக பிச்சைக்காரனாக நடித்து இருக்கும் இயக்குனர் மூர்த்தி “சசி சாரிடம் உதவி இயக்குனராக இருந்தவன் நான் . அப்புறம் இயக்குனராகவும் ஆனேன்.
இப்போது என்னை நடிகனாகவும் மாற்றிக் கொடுத்து இருக்கிறார் . அவருக்கு காலம் உள்ளவரை நன்றியோடு இருப்பேன்” என்று குரல் கம்மி நெகிழ்ந்தார் .
அம்மாவாக நடித்திருக்கும் தீபா ராமனுஜம் ” நான் முன்பே சினிமாவிலும் சின்னத்திரையிலும் நடித்து இருக்கிறேன் . அப்புறம் அமெரிக்கா போய் விட்டேன் . மீண்டும் வந்த எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பு இது .
அந்த கேரக்டருக்கு என்னை மட்டுமே பார்த்த சசி உடனே என்னை ஒப்பந்தம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது . படம் பார்க்கும் நிறைய பேர் இப்போது என்னை சொந்த அம்மாவாகவே நினைத்து பேசுகிறார்கள்.
அது நெகிழ்வாக இருக்கிறது ” என்றார்
தனஞ்செயன் பேசும்போது “பிச்சைக்காரன் என்ற பெயரை வைத்து ஒரு படம் எடுக்கவும் அதை வாங்கி வெளியிடவும் ஒரு தைரியம் வேண்டும் . எங்களது இறுதிச் சுற்று படத்தின் பெயரும் அப்படிதான் .
படம் நன்றாக இருந்தால் பெயரில் செண்டிமெண்ட் எல்லாம் பார்க்கத் தேவை இல்லை என்பதற்கு இந்தப் படங்கள் உதாரணம் ” என்றார்
படத்தை கே ஆர் பிலிம்சுடன் சேர்ந்து வெளியிட்ட ஸ்கை லார்க் நிறுவனம் சார்பில் பேசிய உறுமீன் இயக்குனர் சக்தி ” இந்தப் படத்தை வாங்குவதற்கு பெரிய ஹோம் ஒர்க் செய்தோம் .
படம் எப்படி வந்திருக்கிறது என்பது பற்றி ஒரு தகவலும் தெரியாத நிலையில், படத்தில் நடித்தவர்கள் வேலை செய்தவர்கள் இவர்களை எல்லாம் ஃபிரன்ட் பிடித்து, அவர்களிடம் படம் பற்றி விசாரித்து,
நன்றாக வந்திருப்பது தெரிந்து படத்தை வாங்கினோம் ” என்று, அசத்தினார் .
இயக்குனர் மோகன் ராஜா பேசும்போது “நான் இயக்கிய வேலாயுதம் படத்தில் இசை அமைப்பாளராக வேலை பார்த்த காலத்தில் இருந்தே எனக்கு விஜய் ஆண்டனி பழக்கம் .
திரையுலகில் எனது முதல் நண்பன் அவன் . இப்போ நடிகனா தயாரிப்பாளரா பெரிய அளவுக்கு வளர்ந்துட்டான் . ஒரு தனி மையமாக ஆகிட்டான் . ரொம்ப சந்தோசம். அவன் இன்னும் பெரிய உயரங்களை தொடணும் .
சசி மிகச் சிறந்த இயக்குனர் . அவர் மிகுந்த பசியோடு சமைத்த உணவு இந்தப் படம் .அதுதான் படம் இவ்வளவு ருசியாக இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துகள் ” என்றார் .
லிங்குசாமி தன் பேச்சில் ” இந்தக் கதையை சசி என்னிடம் ஒன்றரை மணி நேரம் சொன்னார். அப்போது எனக்கு இருந்த சூழலில் என்னால் தயாரிக்க முடியாமல் போனது .
அப்போது நான் சசியிடம் ‘சாமியார் சொன்னதைக் கேட்டு மகன் பிச்சை எடுக்கப் போகிறான் என்ற விசயத்தை மக்கள் ஒத்துக் கொள்கிற மாதிரி பண்ணி விடுங்கள் . அது நடந்தால் படம் வெற்றி’ என்றேன் .
அப்படியே செய்து விட்டார் சசி . அசத்தல் வெற்றி . நான் இதுவரை விஜய் ஆண்டனி நடித்த எந்தப் படத்தையும் பார்த்தது கிடையாது . இந்தப் படம்தான் பார்த்தேன் . அவர் அட்டகாசமான நடிகர் ” என்றார்கள் .
தவிர மேலே பேசியவர்களில் பலரும் “பிச்சை எடுப்பதற்கான காலம் முடிந்து மீண்டும் பணக்காரனாக விஜய் ஆண்டனி கேரவானை நோக்கி நடக்கும் காட்சியில்,
ஒரு விஜய்யை , ரஜினியை பார்ப்பது போல இருந்தது ” என்று ஏகமனதாகச் சொன்னது , அந்த உண்மைக்கு பலம் சேர்ப்பதாகவே இருந்தது
மிகுந்த உணர்வுப் பூர்வமாக பேசிய கே ஆர் பிலிம்ஸ் சரவணன் ” இந்தப் படத்தை நான் வாங்கியபோது எழுந்த விமர்சனங்கள் கொஞ்ச நஞ்சமல்ல .
என் அப்பாவே ‘என்னடா இது, பிச்சைக்காரன் னு பேரு வச்ச படத்தை வாங்கி இருக்கியே/’ என்றார் . எனக்கு படம் பிடித்ததால் வாங்கினேன். எல்லாருடைய விமர்சனத்தையும் பொறுத்துக் கொண்டேன் . படம் வந்தது ஹிட் .
அப்போது கூட எனக்கு நிம்மதி இல்லை . இது ஒருவாரப் படமாக போய்விடுமோ என்று பயந்தேன் . அனால் இதோ வரும் வாரமும் படம் அப்படியே தொடர்கிறது .
இதில் இருந்து ஒன்று புரிகிறது . படம் நல்லா இருந்தா ஓடும் . இல்லன்னா அதை ஓட்ட வைக்க எல்லாம் முடியாது . ” என்றார் .
விஜய் ஆண்டனி தன் பேச்சில் ” ஆடியோ ரிலீசிலேயே நான் சொன்னேன் . இது மாதிரி ஒரு படத்தை மீண்டும் என்னால் பண்ண முடியாது என்று . இப்போது அது எவ்வளவு உண்மை என்பதை புரிந்து கொண்டு இருப்பீர்கள்.
ஒரு இசையமைப்பாளராக என்னை அறிமுகப்படுத்திய சசி சார் என்னை இந்தப் படத்தின் மூலம் இன்னும் உயர்த்தி இருக்கிறார் . அவருக்கு மீண்டும் நன்றி . சரவணன் இந்தப் படத்தை அழகாக புரமோட் செய்தார் .
அவருக்கு நன்றி . எனக்கு எல்லாமுமாக இருந்து என்னை உயர்த்தும் என் மனைவி ஃபாத்திமாவுக்கு நன்றி ” என்றார் .
சிறப்புரையாற்றிய இயக்குனர் சசி ” தமிழ் ரசிகர்களுக்கு முதல் நன்றி. அவர்களிடம் படத்தைக் கொண்டு போன பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி . சரியாக புரமோட் செய்த சரவணனுக்கு நன்றி .
எனது வேறு எந்தக் கதையை விஜய் ஆண்டனி ஒத்துக் கொண்டு நடித்து இருந்தாலும் நான் அவருக்கு நன்றி சொல்லத் தேவை இல்லை . ஏனென்றால் அது ஒரு வழக்கமான வியாபாரமாக இருந்திருக்கும் .
ஆனால் என மனதுக்கு மிகவும் பிடித்த இந்தக் கதையை ஏற்று தயாரித்து நடித்ததற்கு மிக்க நன்றி ” என்று சொன்னவர் ,
படத்தில் நடித்த அனைத்து நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களை மேடை ஏற்றி, அவர்களை தேர்ந்தெடுத்த விதம் மட்டுமல்லாது,
படத்தில் அவர்களின் பங்களிப்பு பற்றியும் விளக்கிச் சொன்ன பெருந்தன்மை வேறு யாருக்கும் வராது .
அவர் சொன்ன கடைசி விஷயம்தான் சிகரம்
“இது ஓர் உண்மைக் கதை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் என் படத்தில் வரும் அருள் செல்வகுமாரை விட , ஒரிஜினலான அந்த மனிதன் மிக உயர்ந்தவன் .
இந்தப் படத்தில் அருள் கலைச்செல்வன் அம்மா குணமாக வேண்டி 48 நாட்கள் மட்டுமே பிச்சைக்காரனாக வாழ்கிறான் .
ஆனால் அந்த ஒரிஜினல் மனிதன் அம்மா குணமானால் பிச்சை எடுக்கிறேன் என்று வேண்டிக் கொண்டு , அம்மா குணமான பிறகு. ‘வருடத்துக்கு ஆறு மாதம்’ என ஐந்து வருடம் பிச்சை எடுத்து வாழ்ந்தான் .
எனக்கு அந்த மனிதன் யார் என்று தெரியவில்லை . இதைப் பார்த்தாவது அந்த மாமனிதன் என்னை சந்திக்க வந்தால் நான் ஜென்ம சாபல்யம் பெறுவேன் ” என்று உடல் சிலிர்க்க வணங்கினார் .
இவரிடம் இருந்து வரும் படம், எப்படி நல்ல படமாக இல்லாமல் போகும்?