ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள ‘பித்தள மாத்தி’ திரைப்படம் ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் காமெடி கலந்த காதல் திரைப்படமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா ஆகியோர் உடன் நடித்துள்ளனர். இயக்குநர் மாணிக் வித்யா இயக்கியுள்ளார் சரவணன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் மாணிக்க வித்யா, தயாரிப்பாளர் சரவணன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் ஆர் வி உதயகுமார், நடிகர் காதல் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காதல் சுகுமார் பேசும்போது, ” உமாபதி மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் வாழ்த்துகள். திருமண வரவேற்பு அன்றே அவரது படம் வெளியாவது மிகப் பெரிய ஆசிர்வாதம் என்று சொல்லலாம். “என்றார்.
இயக்குனர் ஆர்வி உதயகுமார் பேசும் போது, ” நிகழ்ச்சிக்கு வந்தால் எதோ ஒரு விஷயம் அழகாக இருக்க வேண்டும். இங்கு ஊடக நண்பர்கள்தான் அழகாக தெரிகின்றனர். உமாபதி, ஐஸ்வர்யா தம்பதிக்கு திருமண வாழ்த்துக்கள். திருமணத்திற்கு பிறகு அவர்களுக்கு பெரிய மாற்றம் வரும் என நினைக்கிறேன். எனக்கும் திருமணத்திற்கு பிறகுதான் முதல் படம் வெளியானது. கருடன் படத்தில் எனது நடிப்பை பாராட்டினீர்கள்.

பித்தள மாத்தி படத்தின் ட்ரெய்லர் பாடல்கள் பார்த்தோம். இயக்குனர் மாணிக்க வித்யா ரொம்ப பிரமாதமாக செய்துள்ளார். படத்தின் தலைப்பு வித்தியாசமாகவும் அழகாகவும் தமிழ்த் தலைப்பாகவும் உள்ளது.இப்போது நிறைய படங்களில் தமிழைத் தேட வேண்டியுள்ளது.உமாபதி இப் படத்தில் அருமையாக நடித்துள்ளார். திரையுலகம் மீண்டு எழுந்து வருவது போல தோற்றம் தெரிகிறது. கொஞ்ச நாட்களாக திரைப்படம் வெளியாகும் எண்ணிக்கை அதிகமாகவும் வெற்றிப் படங்களின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது.எதார்த்த படங்கள் இன்றைய காலகட்டத்தில் மக்களால் மிகவும் பாராட்டப்படுகிறது. பித்தள மாத்தி படமும் நிச்சயம் டிரெண்ட் மாத்தி படமாக இருக்கும் “என்றார்.
கே.ராஜன்பேசும்போது, ” நான் பலரிடம் பணத்தை கொடுத்துவிட்டு வட்டி வராமல் தவிக்கிறேன். இப்படி நிறைய பித்தள மாத்திகள் இருக்காங்க கவனமாக இருங்கள். . ஒரு படம் ஆரம்பிச்சா தயாரிப்பாளர்கள் படும் வேதனை கொஞ்சநஞ்சமல்ல. . சினிமாவில் நிறைய பித்தள மாத்திகள் இருக்காங்க. சில இயக்குனர்கள் பித்தள மட்டும் மாற்றவில்லை தயாரிப்பாளரையே மாத்தி விடுகின்றனர். பணக்காரனாக வந்தவரை ஏழையாக அனுப்பி வைக்கின்றனர். எல்லாமே ஆங்கில தலைப்பு. தமிழில் தலைப்பு வைத்த படங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் பரிசீலனை செய்து வருகின்றனர். நான் தமிழக முதல்வரை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். டிக்கெட் விலையை குறைக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் மனு கொடுத்தேன் கவனிப்பதாக சொல்லியுள்ளனர். 100 படங்கள் வந்தால் 80 படங்கள் காணாமல் போகிறது. பெரிய வருத்தமாக உள்ளது”என்றார்

கலை இயக்குனர் வீர சமர் பேசியபோது, “தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்கள் சிறு படங்களுக்கு உயிர் கொடுத்து பேசும் ஒரு அற்புதமான மனிதர். இவரைப் போன்றவர்களை நாம் பாதுகாத்து வைக்க வேண்டும்.உச்ச நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கியிருந்தாலும் ஒரு சிறு படத்தின் நிகழ்ச்சிக்கு வந்து இருக்கும் ஆர்வி உதயகுமார் அவர்களுக்கு நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர் சரவணன் தயாரிப்பாளர் மட்டுமின்றி எல்லா வேலையையும் செய்யக்கூடியவர். இதுபோன்ற தயாரிப்பாளர்களுக்கு நாம் மூன்று மடங்கு வேலை செய்ய வேண்டும். இப்படத்தில் ஹீரோயினுக்காக அயர்ன் பாக்ஸில் ஒரு வண்டி ரெடி செய்தோம். இயக்குனர் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த இயக்குனராக வருவார்.சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடாத கதையை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எடுத்துள்ளனர்.”என்றார்.
இயக்குனர் மாணிக்க வித்யா பேசும்போது, “ஒரு படத்தை ரீ ரிலீஸ் செய்து வெளியிடுவது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்கு தெரியும். அந்த அளவுக்கு எனது தயாரிப்பாளர் நம்பிக்கை வைத்துள்ளார். உலகம் முழுவதும் 70 திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்கிறார். இப்படத்தின் தலைப்பு மீது ஆரம்பத்தில் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தது. நாம் எல்லோரும் வெளியே ஒரு தோற்றம் உள்ளுக்குள் வேறு தோற்றத்தில் இருப்போம். அதுதான் இந்த கதையிலும்.படத்தில் வில்லி கதாபாத்திரம் வித்தியாசமானதாக இருக்கும். எல்லோரும் எனக்கு ஆதரவு தர வேண்டும் “என்றார்.

தயாரிப்பாளர் சரவணன் பேசும்போது, “ஒரு படம் குழந்தை மாதிரி.தாய் இயக்குனர் என்றால் தகப்பன் தயாரிப்பாளர்தான்.ஒரு படத்தை நடுத்தெருவில் வீசி செல்வது தயாரிப்பாளருக்கு அழகல்ல. அதனை சரி செய்யும் வேலையைதான் நான் செய்துள்ளேன்.சத்யராஜ் நடித்த அடாவடி படத்தை டெல்லி வரை சென்று போராடி ரிலீஸ் செய்தேன். தடை என்றெல்லாம் சொன்னார்கள். ஓடாத படத்தையே ரிலீஸ் செய்த நான் ஓடும் படத்தை எப்படி விடுவேன். இந்த படம் எனக்கு மிகப் பெரிய அனுபவத்தை கொடுத்தது. இந்த படம் எடுக்கும்போது எனக்கு நெஞ்சு வலி வந்தது. வீட்டில் எல்லோரும் என்னை படம் எடுக்க வேண்டாம் என்றனர். ஆனாலும் இயக்குனருக்காக எனது முடியாத சூழலிலும் நான் வேலை செய்தேன். இந்த படத்தை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்”என்றார்,