வெள்ளித் திரை டாக்கீஸ் சார்பில் முஜிப் மற்றும் ட்ரையம் ஸ்டுடியோ சார்பில் ஆண்டி தயாரிக்க, மிர்ச்சி ரமணா, தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன் , ஹம்சினி பெருமாள் , வினோத் மோகன சுந்தரம், தினேசினி நடிப்பில் ஜே கே விக்கி எழுதி, படத் தொகுப்பு செய்து இயக்கி இருக்கும் படம் பூ சாண்டி வரான்.
இதில் முஜிப், மிர்ச்சி ரமணா தவிர மற்ற அனைவரும் மலேசியா வாழ் தமிழர்கள் .
மலேசியாவில் பழைய நாணயங்களை சேகரிக்கும் பழக்கம் உள்ள மாற்றுத் திறனாளி மற்றும் அவரது நண்பர்கள் இருவருக்கும் (தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன்) ஆவிகளுடன் பேசும் ஆசை வருகிறது. பாண்டியர் கால பழம்பெரும் நாணயம் ஒன்றை பயன்படுத்தி அவர்கள் ஒரு ஆவியுடன் பேச , அது தன்னை கண்ணுக்குத் தெரியாத நதிக்குள் துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மல்லிகா என்ற இளம்பெண் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறது . தொடர்ந்து பேச, இவர்கள் சில விஷயங்கள் கேட்க, அது சில நிபந்தனைகள் விதிக்க, இவர்கள் மறுக்க விளைவுகள் விபரீதம் ஆகிறது
ஓர் உயிரும் போகிறது . அப்புறம் நடந்தது என்ன என்பதை திகில் திரில் கலந்து எதிர்பாராத திருப்பங்களுடன் அட்டகாசமாக அழகாகச் சொல்லி இருக்கிறார்கள் பூ சாண்டி வரான். அருமை. சிறப்பு. பெருமை.
நாடுகள், கண்டங்கள் கடந்த மொழி தமிழ் . அவற்றின் பேச்சு வழக்கும் பலப் பல . எனவே தமிழ்நாட்டில் தாய்த்தமிழ்ப் படங்கள் வருவது போல, மலேசியத் தமிழ்ப் படங்கள், ஈழத் தமிழ்ப் படங்கள் நிறைய வர வேண்டும் என்பதே என் ஆசை.இப்போதுள்ள சூழலில் மலேசியாவில் இருந்து மேலும் நல்ல தமிழ்ப் படங்களை உருவாக்கலாம். அங்கிருந்து வந்த வெண்ணிற இரவுகள் போன்ற ஒரு சில படங்களுக்குப் பிறகு நம்பிக்கையூட்டும் படமாக வந்திருக்கிறது இந்த பூ சாண்டி வரான்.
பூச்சாண்டி என்பதுதான் பொருத்தமான பெயர் . ஆனால் யோகிபாபு நடிக்க அப்படி ஒரு படத்துக்கு தலைப்புப் பதிவானதால் இந்தப் பெயரில் வருகிறார்கள். ஆனாலும் பூச்சாண்டி என்ற பெயர் தரும் அதே பயப் பரவச உணர்வை இந்தப் படம் தருகிறது . அதுதான் இந்தப் படத்தின் வெற்றியும் சிறப்பு .
அதிலும் குறைவான லொக்கேசன்கள், பத்துக்கும் குறைவான மொத்த கதாபாத்திரங்கள் இவர்களை வைத்துக் கொண்டு ஆர்வம் குறையாமல் பார்க்க வைக்கிற ஒரு சிறப்பான படத்தைக் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் விக்கி. பாராட்டுகள். வாழ்த்துகள். தமிழகத்தில் இருந்து செல்லும் ஆராய்ச்சியாளராக நம்ம ஊர் மிர்ச்சி ரமணா சிறப்பாக நடித்துள்ளார். மலேசியத் தமிழ் நடிக நடிகையரின் அந்த பேச்சு வழக்கும் உச்சரிப்பும் இனிமை .
அதுவும் சங்ககாலம், ராஜேந்திர சோழன் , பாண்டியர்கள், கடாரம் , தமிழின் தொன்மை இவற்றை எல்லாம் இப்போது ஒரு தமிழ்ப் படம் பேசுகிறது என்பது எவ்வளவு பெரிய அதிசயம் . (அதற்கேற்ப ஒரு காட்சியில் செல்வா ராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் பட சுவரொட்டி இருக்கும் . அருமை !)
அசலிசம் பின் முகமது அலியின் ஒளிப்பதிவு , டஸ்டின் தந்திருக்கும் இசை ஆகியவையும் பாராட்டுக்குரியது .
பூச்சாண்டி என்றால் ஏதோ பேய் என்று நினைக்கிறோம் . உண்மையில் அது என்ன என்ற விளக்கமும் ‘அட’ போட வைக்கும் சிறப்பு . இதே திட்ட மதிப்பில் திரைக்கதை இன்னும் சிறப்பாக அமைத்திருக்க முடியும். மேலும் சிறப்பான நடிப்பைக் கொண்டு வந்திருக்க முடியும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய கதையை சொல்லும்போது கூட இந்தியா என்றே சொல்கிறார்கள். தமிழன் என்று சொல்வதுதானே சரி . அப்போது இந்தியா ஏது?
ராஜேந்திர சோழன் மலேசியா வந்தான் . அதனால் கடாரம் கொண்டான் என்று பெயர் பெற்றான் என்று ஒரு வசனம் . மலேசியாவை வென்றான் என்று அல்லவா இருக்க வேண்டும்( மலேசிய அரசு விடாதோ?)அதே போல பேய்களுடன் பேசும் ஒய்ஜா போர்டு முறையை இன்னும் சிறப்பாக காட்டி இருக்கலாம் .
இப்படி சில குறைகள் இருந்தாலும் நேரம் போவதே தெரியாமல் எளிமையான மேக்கிங்கில் படம் பார்ப்பவர்களை கட்டிப் போட்டு கடைசியில் இன மொழி வரலாறு , சிவனிய ஆன்மிகம் எல்லாம் சொல்லி சபாஷ் போட வைக்கிறது பூ சாண்டி வரான்.
அவசியம் பார்க்கலாம் .
இன்னும் நிறைய மலேசியத் தமிழ்ப் படங்கள் வரட்டும் . வெல்லட்டும்