ரயில் @ விமர்சனம்

டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் வேடியப்பன் தயாரிக்க, குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரு, ரமேஷ் வைத்யா, செந்தில் கோச்சடை, மற்றும் பலர்  நடிப்பில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி எழுதி இயக்கி இருக்கும் படம். 

தேனி மாவட்ட கிராமம் ஒன்று . 
 
அங்கே உள்ள பல வேலையிடங்களில் வட இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களை தமிழ் முதலாளிகள் ரின் சோப் ஆலா எல்லாம் போட்டு கும்மிக்  கசக்கிப் பிழிகிறார்கள். அங்கே வேலை செய்யும் ஒரு வட இந்தியத் தொழிலாளி (பர்வேஸ் மெஹ்ரு),  புத்தன், ஏசு, காந்தி, சினிமா எம்ஜியார் ஆகியோரின் அடர்த்தியான கலவையாக இருக்கிறான் . அதோடு எஸ் பி பால சுப்பிரமணியம் , ரவி வர்மா இவர்களை வேறு கொஞ்சம் தனக்குள் ஆங்காங்கே தூவி வைத்து இருக்கிறான். 
 
கிராமத்தில் நடுவில் முற்றமும்  மூன்று புறம் வீடுகளும் உள்ள ஒரு கட்டுமானத்தில் ஒரு வீட்டில் அவன் தனியாக குடியிருக்கிறான், மனைவி, மகள், அப்பா ,அம்மா   வட நாட்டில் . 
 
அவன் இருக்கும் வீட்டின் மறுபுறம்  ஒரு மண்ணின் மைந்தனான தமிழ்க் குடும்பம். மனைவி நல்லவள் (வைரமாலா). ஆனால் கணவன் (குங்கும ராஜ்) ஒழுங்காக சேவ் செய்யாத,  தலை கூட சீவாத பார்க்கப் பிச்சைக்காரன் போல எப்போதும் இருக்கும் – கழுத்தில் முருகன் டாலர் போட்ட – ஒரு சதா சர்வகாலக் குடிகாரன். மாமனாரிடம் சண்டை போட்டுக் கொண்டு , தெருவெல்லாம் சுற்றிக் கொண்டு இருப்பான். அதனால் அந்தத் தம்பதிக்குக் குழந்தை இல்லை. 
 
ஆனால் வடக்கனுக்கு மனைவி , மகள், அம்மா, அப்பா எல்லாம் வட நாட்டில். 
 
(ஒரு காட்சியில் ஒரு பெண்மணி ஒரு பெரிய புல்லுக்கட்டை தூக்கி விடச் சொல்லி அழைக்க, அந்தக் குடிகாரக் கணவனால் முடியாது . ஆனால் அந்த வட இந்திய நபர் ஜஸ்ட் லைக் தூக்கி விடுவான்) . 
 
குடிகாரனின் மனைவி வட இந்திய நபரிடம் அன்போடு பழகுகிறாள் . அவனும்  தீதி (அக்கா) என்று அழைத்துப் பாசத்தோடு பழகுகிறான். 
 
குடிகாரக் கணவனுக்கு அது பிடிக்காத நிலையில் (புல்லுக்கட்டு  மல்லுக்கட்டு  மட்டுமின்றி  இரவில் மனைவியை சமாதானப் படுத்தி அவன் சுகிக்கப் போகும்போது,  வட இந்திய இளைஞன் கதவைத் தட்டி அழைத்து, “என் மனைவி வீடியோ காலில் இருக்கா.. பேசுங்க ”என்று அவளிடம் சொல்வது உட்படப் பல காரணங்கள்.) 
 
ஒரு நிலையில் அவனது குடிகார சில்லுண்டி நண்பன் ஒருவன் , “பேசாம அவன ஒச்சம் பண்ணிடுவோம் ( ஊனப்படுத்துதல்) என்கிறான் . 
 
இவனும் அது பற்றி யோசிக்கும் நிலையில் ,, வட இந்திய இளைஞன் ஒரு  பையை ‘தீதி’யிடம் கொடுத்து விட்டுப் போக, போனவன் பிணமாகிறான். 
 
வட இந்தியாவில் இருந்து வரும் அவனது குடும்பம் , அவன் சம்பாத்தித்து வைத்திருந்த ஐந்து லட்சம்  பணம் எங்கே? என்கிறது .
 
மன சாட்சியுள்ள மனைவிக்கு கணவன் மேல் சந்தேகம் . நடந்தது என்ன என்பதே வடக்கன் என்று பெயரில் எடுக்கப்பட்டு பின்னர் ரயில் என்று பெயர் மாறிய இந்தப் படம். 
 
வெளியூரில் வேலைக்குப் போகிறவன் எல்லாம்  அனாதையாகத்தான் சாவான் என்ற  வருத்தம் போக்க, அந்த வட இந்திய இளைஞனுக்கு ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்து  போஸ்டர் ஒட்டி , பல்லக்குப் பாடை செய்து  அடக்கம் செய்வது, ஒரு வட இந்திய இளைஞனுக்கு தமிழ் நாட்டில் தென் மாவட்ட கிராம  வழக்கப்படி சடங்குகள் நடப்பது என்று… அந்தப் பகுதி படத்தின் இமயம் . 
 
தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பெரும் பணக்கார வட இந்தியர்கள் நிலம், இடம்  வாங்கிப் போட்டு தொழில்களை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறார்கள். அது பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் காசுக்காகவும் கமிஷனுக்ககவும் எல்லாவற்றையும் அவனிடம் தூக்கிக் கொடுத்து விட்டு,  வயிற்றுப்பாட்டுக்காக பிழைக்க வரும் ஏழை வடஇந்தியர்  மேல்  கோபப்படுவது நியாயமா என்று படம் கேட்கும்  கேள்வி அந்த இமயத்தின் சிகரம். 
 
பஞ்சம் பிழைக்கப் போறது கால கால விஷயம் தானே என்பது உட்பட, துபாய் வாழ் தமிழர் தன் உணர்வுகளைக் கூறுவது அந்த சிகரத்தின் மேல் உள்ள பூ மரம் 
 
(அதற்காக மனுசனாப் பொறந்த எல்லாருமே  ஏ ஏ ஏ .. இந்த பூமிக்கு வந்தேறிதான் சார்ர்ர்ர்ரர்ர்ர்ர் என்று நெஞ்சை நக்குவது எல்லாம்  அபத்தம் .  ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு வருவதுதான் வந்தேறி. மனுஷன் வேறு கிரகத்தில் இருந்தா பூமிக்கு வர்றான்? அவனை உருவாகும் அம்மா அப்பாவும் பூலோகவாசிகள் தானே?)
 
மற்றபடி இதை திரைப்படமாக  ஆக்கி இருப்பவர் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்தான்.
 
ஜனனியின் பின்னணி இசை, ரமேஷ் வைத்யாவின் பாடல் வரிகளும் சிறப்பு .
 
நடிக நடிகையர் தேர்வும் அவற்றில் பலரின் நடிப்பும்  அடுத்த சிறப்பு.  குறிப்பாக வைரமலா , குங்குமராஜ் இருவரும் மிக இயல்பாகவும் அழுத்தமாகவும் சிறப்பாக நடித்துள்ளனர் . வைரமாலா ஒருபடி மேல் . கோச்சடை செந்திலும் தோற்றப் பொருத்தத்தால் கவனிக்க வைக்கிறார். 
 
இது போன்ற ஓரிரு விசயங்களைத் தவிர இந்தப் படம் முழுக்க கொட்டிக் கிடப்பது இன்டல்லக்சுவல் அர்ரகன்ஸ் எனப்படும் அறிவார்ந்த ஆணவமும் தமிழ் இன மொழி அடையாளங்களுக்கு எதிரான வன்மமும், துவேஷமும்தான். 
 
வட  இந்தியத் தொழிலாளிகளை தமிழ் நாட்டு முதலாளிகள் கசக்கிப் பிழிகிறார்களாம்  
 
சாதாரணத் தமிழர்கள் குடிபோதையில் குலைந்து வேலையில் கவனம் செலுத்தாமல் போக, அறிவார்ந்த தமிழ் ஊழியர்கள் உரிய சம்பளம் கேட்க, உரிமைகள் பேச, இரண்டு தரப்பிலும் கொஞ்சம் சோம்பேறித்தனம் ஏற, 
 
தன் உழைப்பின் மதிப்பு தெரியாமல் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு வந்த  வட இந்தியர்களை லாபத்துக்கு ஆசைப்பட்டு வேலைக்கு வைத்த தமிழக சிறு முதலாளிகள்…   இன்று அந்த வடக்கத்தியரின்  பிடிக்குள் போய்  விட்டார்கள். வட இந்திய ஆட்கள் வைத்ததுதான்  சட்டமாக இருக்கிறது. அவர்கள் சொன்னபடி முதலாளிகள் ஆட வேண்டி இருக்கிறது. இன்று  வட இந்தியத் தொழிலாளர்கள்தான் தமிழ் நாட்டில் முதலாளிகளையும்  வாடிக்கையாளர்களையும் கசக்காமல் பிழிகிறார்கள். ஆனால் இது பற்றி இந்தப் படம் துளி கூடப் பேசவில்லை . 
 
குடிக்கப் போனாலும் குளிச்சு முடிச்சு தலை சீவி பவுடர் அடிச்சிட்டுப் போவான் நம்ம ஆளு. வரும்போதுதான் தூசியும் தும்புமாக வருவான்  ஆனால் இந்தப் படத்தின் நாயகனை எப்போதுமே  ஏதோ பன்றி கூட பக்கத்தில் வரப் பயப்படும் அளவுக்குக் கேவலமான தோற்றத்தோடு காட்ட வேண்டிய அவசியம் என்ன ?
 
மாறாக இன்னும் பான் பராக் பரட்டைத் தலை என்ற நிலையில் பட வட இந்தியத் தொழிலாளர்கள் இருக்க, இந்தப் படத்தில் வரும் அந்த வட இந்திய நபர் மட்டும், ‘ தங்கத் துகள் மேலே விழுந்தால் கூட தட்டி விட்டுவிட்டுதான் போவான்யா..’ என்ற அளவுக்கு சுத்தத்திலும் சுத்தமாக மாசு மருவில்லாத மன்னவன் போலவே படம் முழுக்க இருக்கிறான். தவிர பாடுகிறான் . ஓவியம் வரைகிறான் .  காஷ்மீர் ஆப்பிள் மாதிரி  அவன் இருக்கான் என்று எதிரிகளே அவனைக் கொண்டாடுகிறார்கள். ப்ப்ப்பப்ப்ப்பப்பா.. ஏதோ வட இந்திய ஆவிகள் உள்ளே புகுந்து ஒன்று சேர்ந்து  எழுதிய கதையும் காட்சிகளுமாகப் போகிறது படம். 
 
தேனி மாவட்டத்தில் எந்த கிராமத்தில்,   நடுவில் சதுர முற்றம் கொண்ட – ஒன்றை ஒன்று பார்த்த மாதிரி இருக்கும் வீடுகளில்- குடும்பம் இருக்கும் வீடுகளில் – யாரோ ஒரு வட இந்திய இளைஞனுக்கு  தனியாக வசிக்க வீடு கொடுக்கிறார்கள்  என்று யாராவது சொன்னால் பஹூத் அச்சாவாக இருக்கும் . ஆச்சா?
 
கணவன் குடித்து விட்டு மனைவியை அடிப்பானாம். உடனே இந்த வட இந்திய இளைஞன் கணவனை அடித்துத் தள்ளி வீழ்த்துவானாம். மறுநாள்  வழக்கம் போல நடக்குமாம். தேனி மாவட்டக்காரய்ங்களே .. ஹலோ.. ஹலோ..  
 
படத்தில் ஒரு காட்சி …. 
 
வட இந்திய இளைஞன் குடிகாரனின் மனைவியை தீதி என்று அழைப்பான். அவளுக்கு மொழி புரியாது .( புரிந்தாலும் தாய் மொழியில் பேசும்போது கிடைக்கும் உணர்வைத் தராது.  தமிழில் கெட்ட வார்த்தை பேசப் பிடிக்காமல் வேறு வழி இல்லாத சூழலில் ஆங்கிலத்தில் பேசும் வழக்கம் இருக்கே.. அப்படி) 
 
ஒரு காட்சியில் அவள் வீடெங்கும் தீபம் ஏற்றி பட்டுப் புடவை கட்டி அழகாக இருப்பாள். அவளை வட இந்தியன் வைத்த கண் வாங்காமல் பார்ப்பான். அவள் ஒரு நிமிடம் ‘சிலிர்ப்பான’ உணர்வுக்குப் போய், ‘ என்ன அப்படிப் பாக்கிற/’ என்று கேட்பாள்
 
 அழகு என்று அவன் சொல்லி விட்டு , . சட்டென்று காலில் விழுந்து ஆசிர்வாதம் பண்ணுங்க என்பான் . அவள் துடிதுடித்துப் போய் ‘நிதானத்துக்கு’ வந்து ஆசீர்வாதம் செய்வாள். அதன் பிறகுதான் படத்தில் அவன் என் தம்பி என்றே சொல்வாள்.  
 
இந்தக் காட்சியின் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரிகிறதா? இல்லை எனில் புல்லுக் கட்டு காட்சியை இணைத்துப் பார்த்தால் புரியும் . 
 
அதாவது அவள் கூட ஒரு நொடி இந்த மன்மதனைப் பார்த்து சலனப்பட்டு விட்டாளாம். ஆனால் அந்த வட இந்திய இளைஞன் உத்தம புத்திரனாம். சத்திய சந்தனாம் . 
 
ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது ?
 
 பாவம் பார்த்து வட இந்திய ஆட்களுக்கு சகோதர பாசத்தோடு உதவும் பெண்களை அதே வட இந்திய இளைஞர்கள் ஏமாற்றும் சம்பவங்கள் எத்தனை . 
 
இதே சென்னையில் அபார்ட்மென்ட் காவலாளியாக வந்த ஒரு வட இந்திய  இளைஞன் மேல் ஒரு முதியோர் குடும்பம் பாசம் காட்ட, அதை சாக்காக வைத்து  அந்த இளைஞன்  சலுகைகள் பெற்று , இன்னொரு பக்கம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடத்தல் செய்யும் கூட்டத்தில் ஒருவனாக இருக்க, போலீஸ் பிடிக்க, அந்தக் குடும்பமே போலீசிடம் சிக்கி அல்லல் பட்டதுதானே வரலாறு. 
 
எத்தனை கொலை கொள்ளைக் கடத்தல், பாலியல் வன் சம்பவங்கள், வட இந்திய ஆட்களால்  நடக்கிறது? இதே தமிழ் நாட்டில் ஒரு போலீஸ் அதிகாரியை ஒரு வடக்கத்திக் கும்பல் நிறுத்தி கிண்டல் செய்து கலாய்த்து அடித்து அனுப்பிய வீடியோ வைரல் ஆனது எல்லோருக்கும் தெரியும் . ஆனால் இந்தப் படம் எடுத்த யாருக்குமே தெரியவில்லை, 
 
ஒரு கதை அல்லது கற்பனை என்பது உண்மையாக இல்லாமல் இருக்கலாம் . ஆனால் உண்மைக்குப் புறம்பாக இருக்கலாமா?  
 
தேனி மாவட்டத்தில் உள்ள மக்களில் ஒரு சமுதாய மக்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். இன்னொரு சமுதாய மக்கள் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் . 
 
இந்தப் படத்தை எழுதி இயக்கிய பாஸ்கர் சக்தி தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவர் . எனவே அதே மண்ணைச் சேர்ந்த தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் மீதான வன்மம், வஞ்சம், குரோதம் படம் முழுக்க பாம்பு விஷம் போல துப்பப்பட்டு இருக்கிறது . 
 
குடிகார நாயகன் அழுக்குக்கே  உமட்டும் அளவுக்கு அழுக்காக இருப்பான் . ஆனால் அவன் கழுத்தில் உள்ள முருகன் படம் போட்ட சதுர வடிவ பெரிய டாலர் மட்டும் எப்போதும் பளிச்சென்று சுத்தமாக இருக்கும் . அவன் குட்டிக்கரணம் அடித்தாலும் அது  கழுத்துக்கு  நடுவிலேயே  படம் பார்க்கும் எல்லோருக்கும் தெரியும்படியாக   இருக்கும். அந்த முருகன் டாலர் எல்லா ஷாட்களிலும் நாயகன் கழுத்தில் நட்ட நடுவாட்டமாய் பளிச் என்று தெரிய வேண்டும் என்பது  இந்தப் படத்தின் படப்பிடிப்பில்  முக்கியமான  வேலையாகவே இருந்திருக்கிறது.  (யப்பா… அந்த முருகன் டாலர் நல்லா தெரியுதா? நேரா வை. நடுவால வை. பளிச்சுன்னு துடைச்சு கொடு. பத்தலன்னா  ஒரு லைட்டைப் போடு.  ஒகே ஷாட் போலாம்) 
 
எப்போதும் குடித்து விட்டு எக்குத்தப்பாகப் பேசிக் கொண்டு இருக்கும் அந்த  நண்பன் கதாபாத்திரத்திடம் ஒரு காட்சியில் ஒரு பெண் “உங்கப்பா தமிழ் ஆசிரியர் ன்னு எனக்கு தெரியும் பா . அதுக்காக இப்படி எல்லாம் பேசாதப்பா ” என்கிறது . அங்கே தமிழ் ஆசிரியர் மகன் என்ற  அடையாளம் எதற்கு? 
 
உடனே அந்தக் குடிகார நண்பன், ” நான் குடிகாரன் தான் ஆனா..  என்று நீட்டி முழக்கும்படி ஒரு சப்பைக்கட்டு வசனம் . 
 
இப்படி பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் வேலையை படம் முழுக்க செய்து இருக்கிறார்கள். 
 
தவிர நாயகனும் அந்த நண்பனும் எப்போது பார்த்தாலும் “நாங்க எல்லாம் வீரப்பரம்பரைல்ல.. அரிவாள எடுத்தா கீழ வைக்க மாட்டோம் “என்று  நாயைப் பார்த்து எல்லாம்  வசனம் பேசுகிறார்கள். எனில் அவர்கள் எந்த சமூகம் என்று மறைமுகமாக சொல்லப்படுகிறார்கள்? அப்போ அந்த நாய் யாருக்கான குறியீடு? 
 
வடக்கத்தியர்கள் இங்கு வந்து உழைக்கிறார்கள். ஆனால் தமிழ் நாட்டு இளைஞர்கள் — தமிழ் மற்றும்  தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட சமூக இளைஞர்கள் உட்பட – எல்லாப் பயல்களும் குடித்து விட்டு வீணாப் போறாங்க என்று சொல்லலாம் . அது நேர்மை . 
 
ஆனால் வடக்கத்தி இளைஞன் சம்பாதித்த பணத்தை இவன் மொத்தமாகத் திருடிக் கொண்டதோடு அவனைக் கொலை செய்யவும் முயன்றான் என்று சொல்வது என்ன நியாயம்?  இந்தப் படத்தை  பார்க்கும் வட இந்தியர்கள் நாளை என்ன நினைப்பார்கள். ‘பாருங்க . ஒரு ‘ தமிழர் ‘ எடுத்த படத்திலேயே என்ன சொல்றாங்க பாருங்க என்று கேட்பார்களா இல்லையா? அப்போது இந்தப் படத்தின் பின்னால் உள்ள நோக்கம்  என்ன? 
 
 இந்தக் கதையை அப்படியே மாற்றி யோசிப்போம் . தேனிக்கு பதிலாக  ஒரு வட இந்தியக் கிராமம் . குடிகார வட இந்தியன் . அவனது நல்ல பொண்டாட்டி .பிழைக்கப் போன தமிழ் இளைஞன் . அவனுக்கு அந்த வீடு வாடகைக்கு கிடைக்குமா? புல்லுக்கட்டு சீன் முடிந்த பிறகு தமிழனால் அந்த ஊரில் நடமாட முடியுமா? 
 
வடக்கத்திய மனைவியை அடிக்கும் வடகத்திக் குடிகாரனை தமிழ் இளைஞன் வீழ்த்திய அடுத்த சம்பவமாக ஊரே ஒன்று சேர்ந்து தமிழ் இளைஞனை அடித்தே கொல்வார்கள். அதுதானே நடக்கும்.  எனில் இந்தப் படம் யாருக்குக் குடை பிடிக்க ?
 
”இருக்கட்டுங்க …. நீங்க சொல்ற மாதிரியே இருக்கட்டும் . வட நாட்டில் இருந்து இங்கு வந்து பிழைக்கும் தொழிலாளிகளை  ஆதரித்து ஒரு படம் இருக்கக் கூடாதா ? எடுக்கக் கூடாதா? அது என்ன அவ்வளவு பெரிய குத்தமாய்யா?’  என்று யாரவது கேட்கலாம் . 
 
காலகாலமாக தமிழர்கள் மட்டும் கடல் கடந்து போகவில்லையா என்ற ரீதியில் இந்தப் படம் கூட ஒரு கேள்வி  கேட்கிறது .
 
தப்பில்லை . இல்லாதவன் பிழைக்க வரட்டும் . தப்பில்லை. ஆனால் அப்படி வருபவர்கள் இயல்பாக இல்லாமல் ரயில் ரயிலாக  முழுக்கக் கொண்டு வந்து கொட்டப்படுகிறார்களே .. இந்த மண்ணுக்குள் திணிக்கப்படுகிறார்களே அது ஏன் ? 
 
அப்படி வந்தவன் பாத் ரூம்  போய் வருவதற்குள் அவனுக்கு ஆதார் கார்டும் ரேஷன் கார்டும் கொடுக்கப்படுகிறதே .. அதுவும் பேரை மாற்றி தமிழ்ப் பெயர் வைக்கப்பட்டு அவை எல்லாம் உடனடியாகக் கிடைக்கிறதே .  அது எப்படி>
 
இந்த மண்ணின் மக்களின் மொழியைக் கற்காதவனுக்கு கற்க முடியாது என்று ஆணவமாகச்  சொல்பவனுக்கு அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பதவிகள் வழங்கப்படுகிறதே அது எதற்காக ?
 
மற்ற மாநிலங்களில் நாடுகளில் பிழைக்கப் போன நம்மவர்களுக்கு  இதெல்லாம் கிடைக்கவில்லையே ஏன்?  மண்ணைத் திருத்தி பொன்னாக்கி பல நாடுகளை நம்மவர்கள்  முன்னேற்றும் வரையில் பொறுத்திருந்து, பிறகு தமிழர்களின் சொத்துக்களை எல்லாம் பிடுங்கிக் கொண்டு  அவனை அடித்து விரட்டவும் கொல்லவும் செய்தார்களே .. ஏன்? 
 
இன்னும் ஆந்திராவில் செம்மரம் வெட்டும் தெலுங்கு முதலாளிகளை காப்பாற்றும் அந்தத் தெலுங்கு போலீஸ்….  மரம் வெட்டக் கூலி வேலைக்குப் போகும் தமிழர்களை குற்றவாளி என்று சொல்லி சுட்டுக் கொன்று கணக்கு முடிக்கிறதே. ரயில் என்று படம் எடுத்தவர்களுக்கு துயில் என்ற பெயரில் அதைப் படமாக எடுக்கும் நேர்மை இருக்கா? 
 
தமிழர்கள்  எந்த மாநிலத்தில் நாட்டில் எந்தக் காலத்தில் இப்படி மண்ணை ஆக்கிரமிக்கக் கொண்டு போய்  திணிக்கப்பட்டான்? எந்த மாநிலத்தில் எந்த நாதாரி  அவனுக்கு உடனே ஆதார் கார்டு ரேஷன் கார்டு எல்லாம் வாங்கிக் கொடுத்தான் ? அந்த மாநில மொழி தெரியாத தமிழனுக்கு யார்  அங்கே முக்கியமான மக்களோடு புழங்கும் வேலைகளை உடனடியாகக் கொடுத்தார்கள் 
 
அப்படி இருக்க  ஒரு பிரச்னையை நடுநிலமையாக நேர்மையாக சொல்ல வேண்டிய  புல்லுக் கட்டைத் தூக்கும்  தெம்பு  இல்லாமல் திராணி இல்லாமல்  சுய நல போதையில் மல்லாந்து விட்டு, 
 
 இப்படி படத்தை எடுப்பது என்ன நியாயம் ? 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *