
ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் ஷஷி மற்றும் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் இருவரும் இணைந்து தயாரிக்க, யூ டி வி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும் தயாரிப்பில் இணைய,
(நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழில் ) மாதவன், புதுமுகம் ரித்திகா சிங் மற்றும் மும்தாஜ் சர்க்கார் , ராதாரவி, நாசர் ஆகியோர் நடிப்பில், துரோகி படத்தை இயக்கிய சுதா கொங்காரா இயக்கி இருக்கும் படம் இறுதிச் சுற்று .
சுதா மணிரத்னத்தின் உதவியாளராக இருந்தவர் . அப்போது முதலே மாதவன் அவருக்கு பழக்கம் .
ஸ்ரீகாந்த் , விஷ்ணு , பூர்ணா , பூனம் பஜ்வா , பூஜா ஆகியோர் நடிக்க , சுதா இயக்கிய துரோகி படம் பெரிதாகப் போகாத நிலையில், வித்தியாசமான கதையை படமாக்க விரும்பிய சுதா , இந்திய அளவில் உள்ள பெண் குத்துச் சண்டை வீராங்கனைகள் எவ்வளவோ சாதனைகள் செய்தும் எப்படி அங்கீகாரம் இல்லாமல் இருக்கின்றனர் என்பதை, நாடெங்கும் சுற்றி ஆராய்ச்சி செய்து, அதன் அடிப்படையில் கதை தயார் செய்து …
தனக்கு அறிமுகம் ஆன மாதவனை அணுகிக் கதை சொல்ல , கதை பிடித்த மாதவன் தயாரிப்பாளர் ஷஷியை அறிமுகம் செய்ய , அவர் இதை சி.வி.குமாரிடம் சொல்லி அவரையும் இணைக்க , இந்தியில் பிரபல தயாரிப்பாளர் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியும் இணைய… இப்படியாக தமிழ் இந்தி என்று இரண்டு மொழிப் படமாக உருவாகி இருக்கிறது இறுதிச் சுற்று .
தனுஷின் ரசிகையான ஒரு சென்னை சேரிவாழ் சென்னைப் பெண் பாக்சிங் வீராங்கனையாக விரும்பி பாக்சிங் கற்க , அவளது பாக்சிங் கோச் ஆக வரும் மாதவன் மேல் அவளுக்கு காதல் வர, ஆனால் அவன் ஒரு ….
—- இப்படி படத்தின் கதை போகிறது என்பது படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களைப் பார்க்கும்போது தெரிகிறது .
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் மிக அருமையாக வந்திருக்கிறது . சந்தோஷ் நாராயணனின் மகள் தீதியும் ஒரு பாடல் பாடி இருக்கிறார் .
விடியும் முன் என்ற படத்துக்கு மிக அற்புதமான ஒளிப்பதிவு செய்திருந்த சிவகுமார் விஜயன் என்ற திறமைமிக்க ஒளிப்பதிவாளர் இந்தப் படத்துக்கும் மிக சிறப்பாக ஒளிப்பதிபு செய்துள்ளார் என்பது காட்சிகளில் தெரிகிறது .
பாக்சிங் வீராங்கனையாக நடிக்கும் ரித்திகா சிங் மிக நன்றாக பாக்சிங் போட்டுள்ளாரா என்பது படத்தைப் பார்த்தால்தான் தெரியும். ஆனால் கும்மாங்குத்து டான்ஸ் சும்மா கும்மி எடுக்குது பொண்ணு.
படம் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சி.வி.குமார்
” ஷஷி என்னையும் படத் தயாரிப்பில் இணையும்படி சொன்னபோது , ஸ்கிரிப்டை அனுப்பி வைங்க என்று சொன்னேன் . அனுப்பினார் . படித்தேன் . நன்றாக இருந்தது . ஆனால் ‘நம்மால் தாங்க முடியாத பட்ஜெட் .
எனவே இந்திக்கும் சேர்ந்து எடுத்தால் நன்றாக இருக்கும்’ என்றேன் . அதன்படி ஷஷி செயல்பட, இந்திக்கான உருவாக்கத்தில் பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ராஜ்குமார் ஹிரானி இணைந்தது எங்களுக்குப் பெருமை . படம் ஜனவரி 29 ரிலீஸ் ஆகிறது ” என்றார் .
மாதவன் பேசிய போது
” எல்லாரும் என்னை ஏன் கேப் விட்டுடீங்கன்னு கேட்கறாங்க. நான் எந்த கேப்பும் விடல . சினிமாவுலதான் இருக்கேன். தமிழ்ல இப்போ படம் பண்றது கவனமா செய்ய வேண்டிய விஷயம் . அந்தக் கவனத்தோடு இந்தப் படத்தில் நடிச்சு இருக்கேன்” என்றார் .
ராஜ்குமார் ஹிரானியிடம் நான் ” சார். நீங்க ஏன் ஒரு நேரடித் தமிழ்ப் படத்தை இயக்கக் கூடாது?”என்றேன் .
“தமிழ் நாட்டுல நல்ல டெக்னீசியன்கள் இருக்காங்க . அவங்க கூட நான் தொடர்ந்து இணைஞ்சு வேலை செய்யறேன் . அது எனக்கு ரொம்ப சந்தோசம். முன்னாபாய் எம் பி பி எஸ் படம் வசூல்ராஜா எம் பி பி எஸ் ஆக வந்தது உட்பட, என்னோட பல படங்கள் தமிழ்ல ரீமேக் ஆகி இருக்கு.
ஆனா என்னால நேரிடயா தமிழ் படம் இயக்க முடியாது . ஏன்னா எனக்கு தமிழ் மொழி தெரியாது . மொழி தெரியாம படம் இயக்க முடியாது ” என்றார் .
உங்க நேர்மைக்கு ஒரு ‘கட்டிப் புடி’ அன்பு சார் !