துல்கர் சல்மான், நிவின் பாலி , ஃபகத் ஃபாசில், நித்யா மேனன், பார்வதி, நஸ்ரியா நடிக்க , அஞ்சலி மேனன் என்ற பெண் இயக்குனரின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வந்த படம் பெங்களூர் டேய்ஸ். பத்து கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் சுமார் ஐம்பது கோடி ரூபாய் வரை ஈட்டி, மலையாள சினிமாவின் மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.
அந்த பெங்களூர் டேய்ஸ் படம் ஆர்யா,(துல்கர் ரோல்) பாபி சிம்ஹா,(நிவின் பாலி ரோல்) ராணா டகுபட்டி (ஃபகத் ஃபாசில் ரோல் ), சமந்தா,(நித்யா மேனன் ரோல்) ஸ்ரீதிவ்யா(நஸ்ரியா) ஆகியோர் நடிக்க தமிழில் தயாராகிறது . மலையாளத்தில் ‘ பூ’ பார்வதி நடித்த வேடத்தில் தமிழிலும் பார்வதியே நடிக்கிறார். தவிர லக்ஷ்மி ராய், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் உண்டு .
பொம்மரிலு பாஸ்கர் என்ற பிரபல தெலுங்கு இயக்குனர் இயக்க, தமிழ் , தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பிவிபி புரடக்ஷன்ஸ் தயாரித்து இருக்கிறது . பொம்மரிலு பாஸ்கர் தெலுங்கு சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பி வி பி நிறுவன நிர்வாக தயாரிப்பாளர் ராஜீவ் ” மலையாளத்தில் நல்ல வெற்றி பெற்ற ஒரு படத்தை தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் தயாரித்து உள்ளோம். இது மொழிகளைக் கடந்த படம் ” என்றார்.
ஆர்யா , பாபி சிம்ஹா,ஸ்ரீதிவ்யா ஆகியோர் ” இந்தப் படத்தில் நடித்தது மிக சிறந்த அனுபவம் . ஒரு நல்ல படத்தில் இருக்கிற சந்தோசம் இருந்தது . எல்லோரும் நல்ல நண்பர்களாக ஒரு பிகினிக் போனது போல இருந்தது ” என்றார்கள் .
பார்வதி பேசும்போது ” இந்தப் படத்துக்கு தமிழில் நடிக்க என்னை அழைத்த போது மலையாளத்தில் எனது கேரக்டர் என்ன பெயரில் ((ஆர் ஜே சாரா) எந்த மதத்தைச் சேர்ந்த பெண்ணாக எந்த கலாச்சாரத்தின் அடிப்படையில் இருந்ததோ அப்படியே தமிழிலும் இருக்க வேண்டும் ‘ என்று கேட்டுக் கொண்டேன். அப்படியே செய்து கொடுத்தார்கள் . அதற்கு நன்றி” என்றார் .
பார்வதியிடம் நான் ” ஒரு படத்தை இன்னொரு மொழியில் ரீமேக் செய்யும்போது அந்த கலாச்சாரத்துக்கான அடையாளங்கள் சேர்த்தால்தான் அன்னியோன்யப்படும். அப்படி இருக்க நீங்கள் மலையாளப் படத்தில் வந்தது போலவே பெயர் எல்லாம் கேட்டால் இங்கே அன்னியப்படாதா?” என்றேன் .
“சாரா என்பது கிறிஸ்தவப் பெயர் . கிறிஸ்தவ மதம் தமிழ் நாட்டிலும் உண்டு அல்லவா?” என்றார்
”உண்டு . ஆனாலும் இங்குள்ள வெகுஜன கிறிஸ்தவப் பெயர்கள் என்பது வேறு . கேரளாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் அதில் நேட்டிவிட்டி வேறுபாடுகள் உண்டு . தவிர கலாச்சார மாற்றம் உண்டே ? அது பாதிப்பு ஏற்படுத்துமே ” என்றேன் .
“இந்தப் படத்தில் ஏற்படுத்தாது ” என்றார் . (படம் பார்த்துட்டு சொல்றோம் பார்வதி !)
பாஸ்கர் பேசும்போது ” எனது தெலுங்குப் படங்களில் நம்ம ஊர் டெக்னீஷியன்கள் எப்போதுமே உண்டு . ஆனால் இந்த பெங்களூர் டேய்ஸ் படத்தை இயக்கும்போது எனக்கு ஏற்பட்ட சந்தோஷம் என்னவென்றால் ஷூட்டிங் ஸ்பாட் முழுக்க தமிழ்க் குரல்களே கேட்டுக் கொண்டு இருக்கும் ” என்றார் . (தமிழேன்டா !)
“தமிழில் முதன் முதலாக படம் இயக்கும்போது,, உங்கள் சொந்தக் கதையோடு வராமல் மலையாள ரீமேக்கோடு வருவது ஏன் ?” என்ற ஒரு , சக பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பதில் சொன்ன பாஸ்கர் ” இந்தப் படத்துக்கு என்னை ஒப்பந்தம் செய்த பி வி பி நிறுவனம் தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் எடுக்க முடிவு செய்ததால் இது முதல் தமிழ் படமானது . விரைவில் சொந்தக் கதையுடன் வருவேன் ” என்றார்.
அதே போல ”உங்கள் ஊர் நயன்தாரா தமிழ் நாட்டில் மிகப் பெரிய ஹீரோயினாக இருப்பது பற்றி என்ன நினைக்கறீங்க ?” என்ற கேள்விக்கு பதில் சொன்ன பார்வதி ” அதுல எனக்கு ரொம்ப சந்தோஷமும் பெருமையும்” என்றார்.(நிஜமாலுமே பூப் போல மனசு )
என்னது?
ஸ்ரீதிவ்யா என்ன பேசுச்சா ?
அந்தப் பொண்ணு பேசறதுக்கு(க் கூட ) காசு கேட்கும் போல இருக்கே ……!