ரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சார்பில் டார்லிங் 2 என்ற படத்தைத் தயாரித்துக் கதாநாயகனாக நடித்து தமிழ்த் திரை உலகுக்கு கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் ரமீஸ் ராஜா
கலையரசன், முனீஸ் , காளி வெங்கட், மெட்ராஸ் ஜானி, அர்ஜுனன் ஆகியோர் உடன் நடிக்க, மாயா என்ற புதுமுகக் கதாநாயகி அறிமுகமான இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை,
சதீஷ் சந்திர சேகரன் என்ற அறிமுக இயக்குனருக்குக் கொடுத்து இருந்தார் ரமீஸ் ராஜா .
ஹாரர் படமாக வந்த இந்த தனது முதல் படத்திலேயே பயந்த சுபாவம் மற்றும் முரட்டு குணம் கொண்ட இளைஞன் என்று இரு மாறுபட்ட வேடங்களில் நடித்திருந்தார்
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா வெளியிட்ட இந்தப் படம் ரமீஸ் ராஜாவுக்கு வெற்றிப் படமாக அமைந்தது.
அடுத்து இப்போது தனது இரண்டாவது படமாக தயாரித்துக் கதாநாயகனாக நடித்து வரும் ‘விதி மதி உல்ட்டா ‘ படத்தில் ஏ ஆர் முருகதாசின் உதவியாளரான விஜய் பாலாஜியை இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார்
கொடுமையான தாதாவிடம் மாட்டிக் கொள்ளும் குடும்பத்தையும் காதலியையும் ஒரு மிடில் கிளாஸ் பையன் எப்படிக் காப்பாற்றுகிறான் என்ற கதையில் உருவாகும் இந்தப் படத்தில் ,
தாதாவுடன் மோதும் மிடில் கிளாஸ் பையனாக ரமீஸ் ராஜா நடிக்கிறார்
இதில் இவருடன் இணைந்து டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்றாயன், சித்ரா லக்ஷ்மணன், கு.ஞான சம்மந்தம் ஆகியோர் நடிக்க , கதாநாயகியாக ஜனனி ஐயர் நடிக்கிறார்
காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை மாதம் நடக்க இருக்கிறது .
இதை அடுத்து மூன்றாவதாக மர்டர் மிஸ்ட்ரி கதை அமைப்புக் கொண்ட ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ரமீஸ் ராஜா.
முன்னணி நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றும் இந்தப் படத்தின் பெயரும் முதல் தோற்ற போஸ்டரும் விரைவில் வெளிவரும் என்கிறார் ரமீஸ் ராஜா






