JN சினிமாஸ் சார்பில் J.பார்த்தசாரதி தயாரிக்க, வெற்றி , தியா மயூரிக்கா , கேஜிஎப் ராம் , எம் எஸ் பாஸ்கர் , கணேஷ் வெங்கட்ராமன், மாரிமுத்து, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத் , வினோத் சாகர், பாய்ஸ் ராஜன், லட்சுமி நாராயணன் , சைதன்யா ,விஜி, அபி ,கர்ணன் ஜானகி ,. இவர்களுடன் தயாரிப்பாளர் J.பார்த்தசாரதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, குரு ராமானுஜம எழுதி இயக்கி உள்ள படம் .
ஆந்திராவில் செம்மரம் வெட்ட , வறுமை காரணமாக கூலித் தொழிலாளிளாகப் போகும் தமிழர்களை , செம்மரம் கடத்தும் நபர்களாகக் கணக்குக் காட்டி , அந்தக் கூலித் தொழிலாளிகளை தமிழன் மேல் உள்ள இனத் துவேசம் காரணமாக கொடூரமாக அடித்தும் சித்திரவதை செய்தும் சுட்டும் கொன்றும் அநியாயம் செய்யும் கும்பலில் சிக்கிக் கொண்ட தன் மைத்துனை(கபாலி விஷ்வந்த்) காப்பாற்ற செல்லும் ஒருவனுக்கும் ( வெற்றி) ,
வறுமை காரணமாக தன் மகள் விபச்சாரத்துக்குப் போன இடத்தில் ஒருவனைக் கொன்று விட , ஆபத்து என்று தெரிந்தும் விறகு வெட்ட வந்த ஒரு பெரியவருக்கும் ( எம் எஸ் பாஸ்கர்) இவர் போன்றவர்களுக்கும் நடந்தது என்ன ? உண்மையான கடத்தல்காரர் பற்றி ஒரு கூலித் தொழிலாளி சொன்ன காரணத்துக்காக எல்லோரையும் என்கவுண்டர் பண்ண ஆந்திர போலீஸ் திட்டமிடுவது ஏன் என்பதே படம்
கதை 2015இல் தமிழகத்தின் ஜவ்வாது மலை , படவேடு மலைப்பிரதேசங்களில் இருந்து ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட போனதாக சொல்லி திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர வனத்துறையினரால் 20 தமிழர்களை சுட்டு கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது
கதைக் களனான ரேணிகுண்டா , தலக்கோணம் , தேன்கணி கோட்டை காடுகள் படத்தில் பிரம்மாண்டமாய் விரிகின்றன. படமாக்கல் மிக சிறப்பாக இருக்கிறது . அதற்காக ஒளிப்பதிவாளர் சுரேஷ்பாலா குரு ராமானுஜம் இருவருக்கும் பாராட்டுகள்.
பக்கத்து மாநிலத்துக்கு வேலைக்குப் போகும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்து வைத்து விட்டுப் போனால், போகும் இடத்தில் எதுவும் பிரச்னை என்றால் உதவும் என்ற முக்கிய விசயத்தைச் சொல்கிறார்கள் . பாராட்டுகள்
அதே போல தமிழர்கள் மேல் இனத்துவேசம் காட்டும் ஒரு ஆந்திர போலீஸ் அதிகாரிக்கு சேகர் ரெட்டி என்று பெயர் வைத்து இருப்பதும் அபாரம்
செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு கோடி கோடியாகச் சம்பாதிப்பவர்கள் எல்லோரும் தெலுங்கர்களே என்பதை தைரியமாகச சொல்ல வந்தவர்கள் அதை உணர்த்தி விட்டாலும் ஒரு நிலையில் சற்றே தடுமாறுகிறார்கள் . பரவாயில்லை
சக நடிகர்களில் ஒருவராக கரைந்து இருக்கிறார் வெற்றி . அருமை. எம் எஸ் பாஸ்கர் வழக்கம் போல நெகிழ வைக்கிறார், நாயகி தியா எளிமையும் பாந்தமும்,.
இடைவேளை வரை சிறப்பாகப் போகும் படம் அதன் பிறகு சறுக்குகிறது .
ஆந்திராவில் தமிழ்க் கூலிகள் நிஜமான – ஆந்திரக் கடத்தல்கார்களைக் காப்பாற்ற தமிழ்க் கூலிகள் கடத்தல்காரர்களாக சித்தரிக்கப்பட்டு இனத் துவேஷத்தோடு சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் என்ற கதை சொல்ல வந்து விட்டு , கடைசியில் நாயகன் மட்டும் தப்பித்து வருகிறான் என்பதை சொல்வது எப்படி நல்ல படமாக இ இருக்கும்?
கேப்டன் பிரபாகரன் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் முடிந்த பிறகு கோர்ட் சீன், அரசியல் என்று அது ஒரு சமூகப் படமாக மாறும் அல்லவா? அப்படி ஒரு கதைப் போக்கு இந்தப் படத்துக்கும் தேவைப்படுகிறது .
தப்பி வரும் நாயகனைக் கொல்ல தெலுங்கர்களுக்கு ஆதரவாக ஆந்திர போலீஸ் களம் இறங்க , அவனைக் காப்பாற்ற தமிழக போலீஸ் களம் இறங்க, இரண்டு போலீசும் எல்லையில் மோதிக் கொண்டு செய்தியாகி , இரு மாநிலப் பிரச்னையாகி சுப்ரீம் கோர்ட்டுக்கு வழக்குப் போய்,

தமிழக அரசு சார்பில் ” குற்றவாளி யாராக இருந்தாலும் கண்டியுங்கள் . ஆனால் நிஜமான கடத்தல்காரர்கள் ஆந்திரகளாக இருக்க, கூலிக்கு மரம் வெட்ட வரும் கூலிகளை தமிழர்கள் என்ற காரணத்துக்காக கடத்தல் செய்பவர்கள் என்று பொய்யாக சித்தரித்து சுட்டுக் கொல்வீர்கள் என்றால் அப்புறம் என்ன இந்திய ஒருமைப்பாடு ‘ என்ற கேள்வியை தமிழக அரசு எழுப்புவதாக படம் போயிருந்தால் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்று இருக்கும் .
ஆனால் அதற்கு எல்லாம் உட்கார்ந்து சின்சியராக திரைக்கதை எழுதணும்