வைத்திய பரம்பரையில் வந்த மக்கு பையன் (பரத்) படித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள எண்ணி காலேஜ் காலேஜாக அலைந்து ஒரு கல்லூரி வாசலில் ஒரு பெண்ணை (நந்திதா) பார்த்து முடிவு செய்கிறான் . அவள் தந்தையிடம் (தம்பி ராமையா) போய் எம் பி பி எஸ் டாக்டர் என்று பொய் சொல்கிறான் .
தனக்கு டாக்டர் மாப்பிள்ளை கிடைக்கப் போவதாக எண்ணி மகிழ்ந்து போய், கிட்டத்தட்ட மாமாவாகவே மாறி கல்யாணம் வரை கொண்டு போகிறான் பெண்ணின் தந்தை . இடைவேளையில்தான் தெரிகிறது அந்த பெண்ணும் படிக்காதவள் என்று .
பையன் பொண்ணு இரண்டு பேரும் பெரும் ஃபிராடுகள் என்பது இருவருக்கும் தெரிய வந்து சண்டை போட்டு கடைசியில் சமாதானம் ஆகிறார்கள் .
இந்த கிமு காலத்துக் கதையை கற்கால பாணியில் படமாக்கி படம் பார்க்கும் ஒவ்வொருவரின் மண்டையையும் உடைக்கிறார்கள்.
பரத்துக்கு காமெடி நடிப்பு சுத்தமாக வரவில்லை . நந்திதா பாடல் காட்சிகளில் கிளாமராக நடித்து இருக்கிறார் . ஆனால் முள்ளுச் செடிக்கு கட்டிய சேலை மாதிரி இருக்கும் அவரது தோற்றத்தால் பார்க்கும் நமக்கு அது கிளாமராகவே இல்லை .
தம்பி ராமையா, எம் எஸ் பாஸ்கர், மயில்சாமி. சிங்கம் புலி இவர்களோடு இன்னும் பல காமெடி நடிகர்கள் இருந்தும் நகைச்சுவை படத்தில் இல்லவே இல்லை . எப்படா படம் முடியும் என்று விரல் கடித்து கடித்து நகச் சுவை கண்டதுதான் மிச்சம் (சாரி.. படம் பார்த்த எஃபெக்ட்.)
இந்தப் படத்தின் மூலம் யாரையும் ஒரு காட்சியில் கூட சிரிக்க வைக்க மாட்டோம் என்று தினசரி வீட்டில் கட்டி கட்டியாய் சூடம் கொளுத்தி சத்தியம் செய்த பிறகுதான் எல்லோரும் ஷூட்டிங்கிற்கே போனார்கள் போல .
தியேட்டருக்கு வரும் கொஞ்ச நஞ்ச ரசிகர்களையும் தியேட்டர்கள் இருக்கும் திசைப் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க விடாமல் தடுக்கவே இது போன்ற படங்கள் உதவும் .
படம் சம்மந்தப்பட்ட அனைவரின் உடம்பிலும் ஆளுக்கொரு கிலோ ராட்ஷஷ ரணகள்ளி வேர் (நன்றி : சின்னப் பூவே மெல்லப் பபேசு படம்)கொண்டு ‘ரப்பு… ரப்பு..” என்று தேய்த்தால் கூடத் தப்பில்லை
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி ... அரைவேக்காடு முறை செத்த பைத்திய மாங்கா மணி