அதர்வா , பிரியா ஆனந்த் இணையராக நடிக்க ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் யுவராஜ் போஸ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் படம் இரும்புக் குதிரை. இந்தக் குதிரை ரேசில் எப்படி? பார்க்கலாம் .
பிராமண அப்பாவுக்கும் கிறிஸ்தவ அம்மாவுக்கும் மகனாகப் பிறந்து , அப்பாவுடன் பைக்கில் போகும்போது நடந்த விபத்தில் அப்பா இறந்து விட அதனால் மிகவும் பாதிக்கப்பட்டு , பீட்சா டெலிவரி வேலை செய்தும் கூட, மெதுவாக பைக் ஒட்டி கம்பெனியில் திட்டு வாங்கும் இளைஞன் பிரித்விக்கு (அதர்வா), சம்யுக்தா என்ற இளம் பெண்ணோடு (பிரியா ஆனந்த்) காதல் வருகிறது .
பைக்கில் வேகமாகப் பறக்க ஆசைப்படும் அவளது ஆசைக்காக, அவளே தேர்வு சூப்பர் பைக் ஒன்றை செகண்ட் ஹேண்டாக வாங்குகிறான் ப்ரித்வி .
அவளோடு நீண்ட பயணம் செய்யும் வேளையில் அவளுக்கு தன் மீது இருப்பது நட்பு மட்டுமே என்று உணர்ந்து ஏமாற்றத்தோடு ஊர் திரும்பும் வேளையில் , சூப்பர் பைக்குகளில் சவாரி செய்யும் இளைஞர்கள் குழுவுடன் வரும் ஒரு பைக் ரேசர் டான் ஸ்டோனி (ஜானி டிரை கியூயேன்) , பிருத்வியை வழி மறித்து அடித்துப் போட்டுவிட்டு சம்யுக்தாவை கடத்திப் போகிறான் .
இடைவேளை !
‘என்னை தேடி வந்து பைக்கை கொடுத்து விட்டு அவளை அழைத்துப் போ’ என்று தகவலும் அனுப்புகிறான் டான் ஸ்டோனி.
பிளாஷ் பேக்காக, பைக் ரேசருக்கு சொந்தமான பைக்கை அவனது தம்பி ஒருவன் ஓட்டிக் கொண்டு போய் பந்தயத்தில் தோற்க , வெற்றி பெற்ற மைக்கேல் என்பவன் அந்த பைக்கை கொண்டு போய் விட்டதும் விவரிக்கப்படுகிறது.
அது தெரிந்தும் பைக் ரேசர் டான் ஸ்டோனி பைக்கை பிடுங்கிக் கொண்டு போகாமல் சம்யுக்தாவை கடத்தி வந்து மறைத்து வைத்து விட்டு, ‘பைக்கை கொடுத்துவிட்டு சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு போ’ என்று பிரித்வியிடம் சொல்வது ஏன் ?
பிரித்விக்கும் மைக்கேலுக்கும் என்ன சம்மந்தம் ? கடைசியில் என்ன ஆச்சு என்பதே இரும்புக் குதிரைகள்..
படமாக்கல் முறையில் அசத்தி இருக்கிறார் இயக்குனர் யுவராஜ் போஸ் .
ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு காட்சிகள் நிகழும் கால நேரத்தை சரியாக உணர்த்துவதோடு வித்தியாசமான வண்ண ஒளிக் கலவைகளோடு மிக அழகாக ஜொலிக்கிறது . பாண்டிச்சேரியை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
சில பல காட்சிகளில் ஓ பி அடித்தாலும் , ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை ஒரு தனித்தன்மையுடன் இருப்பதை பாராட்டலாம். ஆனால் டைட்டிலில் வரும் பின்னணி இசையில் ஒலி அளவை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி இருக்கலாம். ரஜினிகாந்த் நடித்த தாய்வீடு படத்தில் பப்பிலஹரி இசையில் வந்த ”உன்னை அழைத்தது கண்’ பாடலின் இசையை ஒரு பாட்டில் அப்படியே பயன்படுத்தி இருக்கிறார் பிரகாஷ்
படத்தின் மிகப் பெரிய பலம் கனல்கண்ணன் , வில்லியம் ஹாங் இருவரின் ஆக்ஷன் காட்சிகள்தான். சும்மா பொறி பறக்கிறது. தவிர விதம் விதமான கேமராக்களை பயன்படுத்தி அசத்தி இருக்கிறார்கள்.
சிக்ஸ் பேக்கில் நிற்கிறார் அதர்வா. படத்துக்காக மெனக்கெட்டும் இருக்கிறார் . ஆனால் நடிப்பில் இன்னும் சிரத்தை வேண்டும் . பிரியா ஆனந்த் இந்தப் படத்துக்கு பலமும் இல்லை பலவீனமும் இல்லை.
படத்தின் ஆரம்பக் காட்சிகளில் காட்டப்படும் பிரித்விக்கும் அவனது அம்மாவுக்குமான காட்சிகளில் மாத்தி யோசி பாணியில் வசனங்கள் இருந்தாலும் யதார்த்தம் மிஸ்ஸிங்,
முதல் பாதி எந்த சுவாரசியமும் இல்லாமல் போகிறது. பாடல்கள் சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் வந்து குதிக்கின்றன.
தனது தம்பியின் மரணத்துக்கு காரணமான பைக்கை பார்த்த டான் ஸ்டோனி பிருத்வியை கொன்று போட்டுவிட்டு பைக்கை கொண்டு போயிருப்பதுதான் இயல்பான திரைக்கதையாக இருக்க முடியும் . ஆனால் இடைவேளையிலேயே பைக்கை பார்த்து விட்டு பிருத்வியை அடித்துப் போட்டு விட்டு பைக்கையும் அங்கேயே விட்டுட்டு சம்யுக்தாவை மட்டும் கடத்திப் போவது பக்கா சினிமாத்தனம் .
எம்ஜிஆர் நடித்த நீதிக்குத் தலைவணங்கு படத்தில் வரும் பைக் ரேசில் நிறைய டூப் ஷாட்கள் இருந்தாலும் அதை மக்கள் நம்பி ரசித்தது அந்தக் காலம் . அனால் இன்றைய கால கட்டத்திலும் படத்தில் வரும் (இத்தாலியில் எடுக்கப்பட்ட ) பைக் ரேசில் ஏராளமான டூப் ஷாட்கள் வருவது ஒரு குறை. (கேட்டால் ”நம்ம ஹீரோக்களை வைத்துக் கொண்டு இவ்வளவுதான் சார் எடுக்க முடியும்” என்கிறார் இயக்குனர் )
ஆனாலும் அந்தக் காட்சிகளில் லொக்கேஷன் , பைக் பறக்கும் ஷாட்கள், சவுண்டு எபெக்ட்ஸ் ஆகியவை பிரம்மாதம்.
ஆரம்பத்தில் நாயகன் நாயகி இருவருக்கும் காதல் புரிதல் இல்லாமல் இருந்து ப்ரித்வி ஏமாற , ஒரு நிலையில் சம்யுக்தாவுக்கும் காதல் வந்த சமயத்தில் அவள் கடத்தப்ப்படும்படி திரைக்கதை பயணித்து இருந்தால், அவளைத் தேடும் படலம் இன்னும் எமோஷனலாக அமைந்து இருக்கும்.
கதாநாயகிக்கு கதாநாயகன் மீது காதல் கிளைமாக்சில்தான் வருகிறது என்ற திரைக்கதை அமைப்பில் பெரிதாக பலன் ஏற்படவில்லை .
அலுமினியக் குதிரை !