முத்தியாரா பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஆணிமுத்து தயாரிக்க, விதார்த் , மனிஷா யாதவ் , சூரி ஆகியோர் நடிக்க, எஸ்.பி.ராஜ்குமாரின் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இயக்கத்தில் வந்திருக்கும் படம் பட்டைய கெளப்பணும் பாண்டியா . படம் பட்டைய கெளப்புதா ? இல்லை சட்டியை உடைக்குதா ? பார்க்கலாம் .
அக்காள் தங்கை இருவரில் அக்காவுக்கு காதல் கடிதம் கொடுக்க அவளது தங்கையை பயன்படுத்திக் கொண்டு, கடிதம் கொடுப்பதற்கு லஞ்சமாக தினமும் அரை கிலோ சுவீட் பாக்கெட்டையும் ஒரு சுவீட் கடைக்காரர் (இளவரசு) கொடுக்க, ஸ்வீட்டின் சுவைக்கு மயங்கிய தங்கை (கோவைசரளா ) சுவீட்டை தானே தின்று கொண்டு இருந்து விட்டு அக்காவிடம் கடிதங்களை கொடுக்காமல் விட்டுவிட,, விஷயம் தெரியாமல் நெருங்கிய சுவீட் கடைக்காரரை அக்கா செருப்பால் அடிக்க, அதன் பின்னர் அவர் தங்கையையே திருமணம் செய்து கொள்ள,
இப்படிப்பட்ட தம்பதிக்கு பிள்ளைகளாகப் பிறந்து பழனி பஸ் ஸ்டாண்டில் இருந்து சுற்றுப் புற கிராமங்களுக்கு செல்லும் ஒரு தனியாரின் (இமான் அண்ணாச்சி) மினி பேருந்தில் டிரைவராக இருப்பவன் வேல்பாண்டி (விதார்த் ). கண்டக்டராக இருப்பவன் அவனது தம்பி முத்துப் பாண்டி (சூரி )
அந்த பஸ்ஸில் தினமும் பயணம் செய்யும் தனியார் மருத்துவமனை செவிலியான கண்மணி (மனிஷா யாதவ்) மீது வேல்பாண்டிக்கு காதல் . ஆனால் அவள் அவனை புறக்கணிப்பதோடு ரொம்ப அவமானப்படுத்துகிறாள்.
காரணத்தை தேடி வேல் பாண்டி போகும்போதுதான் அப்பா இல்லாத கண்மணிக்கு ஒரு கண் தெரியாத அக்கா, வயதான அம்மா, கஷ்டப்பட்டு வாங்கிய வீட்டு விவகாரத்தில் தகராறு என்று சிக்கல்கள் இருப்பதும் அதனால் அவள் மனதை அலைபாய விடாமல் இறுக்கமாக வாழ்வதும் வேல்பாண்டிக்கு தெரிய வருகிறது .
மனம் நொறுங்கிய நிலையில், அவளை விட்டு அவன் விலகும்போது, கண்மணிக்கு வேல்பாண்டி மேல் காதல் வருகிறது . கண்மணியின் கண்பார்வையற்ற அக்காவுக்கு ஒரு திருமணம் செய்து வைத்து விட்டு பிறகு கண்மணியை மணக்க முடிவு செய்யும் வேல்பாண்டி சக ஓட்டுனரான சரவணனை (விஜய் ஆனந்த்) கண்மணியின் அக்காவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறான்.
அதனால் வேல்பாண்டி மூன்று லட்ச ரூபாய் கடனாளி ஆக வேண்டி வருகிறது. ஒரு ரவுடியை சரவணன் அடிக்கப் போக, அந்த ரவுடி மரணம் அடைய, போலீஸ் தேடி வர , அதனாலும் கண்மணியின் அக்கா திருமணம் நின்று போகுமோ என்ற நிலை .
வேல் பாண்டி அதையெல்லாம் மீறி சரவணனுக்கும் கண்மணியின் அக்காவுக்கும் திருமணம் செய்து வைத்து காதலி குடும்பத்துப் பிரச்னைகளை தீர்த்து, தனது காதல் கல்யாண ரூட்டை கிளியர் செய்து கொண்டானா இல்லையா என்பதே பட்டையை கிளப்பணும் பாண்டியா .
படத்தின் முதல் காட்சியிலேயே, மினி பஸ்ஸில் கண்டக்டர் சூரி டிக்கட் கொடுக்கையில் அடுத்தடுத்து நான்கு காமெடி சிக்சர்களை அடிக்கிறார் எழுதி இயக்கி இருக்கும் எஸ்.பி.ராஜ்குமார் . அந்த ஜோர் படம் முழுக்க தொடர்வது சபாஷ்
ஒரு பக்கம் விதார்த் , சூரி, முத்துக் காளை காமெடி …இன்னொரு பக்கம், விதார்த் சூரி மற்றும் கண்மணியின் தோழியாக வரும் நர்ஸ் காமெடி… மற்றொரு பக்கம் டாக்டராக வரும் டி.பி.கஜேந்திரன் கம்பவுண்டராக வரும் லொள்ளு சபா மனோகர் காமெடி … வீட்டுக்குள் நுழைந்தால் இளவரசு கோவை சரளா , விதார்த் , சூரி காமெடி …
— என்று பல்வேறு காம்பினேஷன்களில் எளிமையான, கிராமியத் தன்மையிலான , வசனங்களால் அமைந்த , பாமர நகைச்சுவை பாணியிலான , நாடகத்தனமான காமெடிகள் வந்து அடிக்கடி வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன .
ஆனால் கதை என்று டைரக்டர் சொல்ல வரும் பகுதிதான் அரதப் பழசு . எனினும் அவ்வப்போது வரும் “ வீட்டை விட்டு வேலை செய்ய வெளிய வரும் என்னை மாதிரி ஒவ்வொரு பெண்ணுக்கு பின்னாடியும் சில பிரச்னையான கதைகள் இருக்கும் “ என்பது போன்ற வசனங்கள் பாராட்ட வைக்கின்றன.
ஒரு பெண்ணை காதலிக்கும்போதே அவள் பெயரில் கேஸ் கனெக்ஷன் , இன்சூரன்ஸ் எடுத்து வைப்பது , வங்கியில் ஜாயின்ட் அக்கவுண்டில் பணம் போட்டு வைப்பது போன்ற விஷயங்கள் ரொம்பப் புதுசு இல்லை என்றாலும் பார்க்கும்போது ரசிக்க வைக்கிறது
காமெடி படம் என்பதற்காக கதைப் போக்கில் எதுவுமே சீரியசாகவோ யதார்த்தமாகவோ இல்லாதது அயற்சி. விதார்த்த மூணு லட்சம் பணம் சம்பாதிப்பது , கொலை கேசில் இருந்து எல்லோரும் தப்பிப்பது எல்லாமே செயற்கை.
பாடல்கள் அருள்தேவின் இசை இரண்டும் பரவாயில்லை ரகம். பாடல்ளை படமாக்குதலில் ஜிகினா ஜாஸ்தி .
பட்டையை கிளப்பணும் பாண்டியா … எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் சிரிப்புக்கு கேரண்டி .
Comments are closed.