அட்றா அட்றா நாக்கமுக்க பாடல் மூலம் (தமிழ்) நாடறிந்த இசையமைப்பாளராக புகழ் பெற்ற விஜய் ஆண்டனி, ‘நான்’ என்ற படத்தை தயாரித்து இசை அமைத்து நடிக்கும் செய்தி வந்த போது அது ஒரு சிறு செய்தியாகவே பார்க்கப்பட்டது..
ஆனால் நான் படத்தில் இசையமைப்பாளராக மட்டும் அல்லாது தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து சபாஷ் போட வைத்தார் விஜய் ஆண்டனி .
அடுத்து இப்போது ஸ்டுடியோ 9 புரடக்ஷன்ஸ், ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களோடு சேர்ந்து தனது விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரித்து இசையமைத்து என்.வி. நிர்மல் குமார் என்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் நடித்து இருக்கும் சலீம் படத்தின் மூலம்,
ஒரே நேரத்தில் சமூக அக்கறை கொண்ட படம் என்ற பெயரையும் வணிக ரீதியிலான வெற்றிப்படம் என்ற பாராட்டையும் சேர்ந்தே பெற்றிருக்கிறார் விஜய் ஆண்டனி.
வாழ்த்துகள் சலீம் என்கிற விஜய் என்கிற ஆண்டனி !
அனாதை இல்லத்தில் வளர்ந்து ஒரு இந்து மதப் பெரியவரின் வழிகாட்டுதலால் படித்து, ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் சலீம் (விஜய் ஆண்டனி) மிகவும் அமைதியானவன்.
நல்லவன் . பொறுமையானவன் . நியாயமான சண்டைக்கு கூட போகாதவன்.
குடியிருக்கும் அபார்ட்மெண்டில் ஒரு அடாவடிக் குடித்தனக்காரர் குறுக்கே காரை நிறுத்தி விட்டு எடுக்க சொன்னால் எடுக்காமல் பலமுறை அழிச்சாட்டியம் செய்தாலும்,
அதற்காகக் கூட சண்டை போடாமல் ஆட்டோ பிடித்து மருத்துவமனை போகிற அளவுக்கு அநியாயத்துக்கு பெருந்தன்மையானவன் .
சலீமுக்கும் நிஷா என்ற WWF பிரியைக்கும் (அக்ஷா பர்தசனி ) திருமணம் நிச்சயம் ஆகிறது .
இயல்பில் சற்று அடாவடிப் பெண்ணான நிஷாவுக்கும் சலீமுக்கும் ஒத்துப் போகவில்லை. சலீமின் நேர்மை , பெருந்தன்மை , பிரச்னையை தீர்க்க தானே தேவையின்றி மன்னிப்பு கேட்கும் பெருந்தன்மை , சுயநலம் பார்க்காமல் டாக்டர் தொழிலில் காட்டும் சேவை மனப்பான்மை இவை யாவும் நிஷாவின் குணத்துக்கு ஒத்து வராமல் போக, இருவருக்கும் முட்டிக் கொள்கிறது . சலீமை அளவுக்கு மீறி அவமானப் படுத்தி காயப்படுத்துகிறாள் நிஷா
அதே நேரம் சலீம் பணியாற்றும் பணம் பிடுங்கி தனியார் மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டரும் மற்ற சுயநல டாக்டர்களும், சலீமின் சேவை மனப்பான்மை காரணமாக அவன் பொது மக்களுக்கு உண்மையாக இருந்து, மருத்துவமனைக்கு அநியாய வருமானம் வரத் துணை போகாத காரணத்தால், அவனை எள்ளி நகையாடுகின்றனர்.
எல்லோரும் சேர்ந்து அவனை கேவலப்படுத்துகின்றனர்.
மத்திய அமைச்சர் சிவ புண்ணியத்தின் பொறுக்கித்தனமான மகன் அவனது நண்பர்களோடு சேர்ந்து, ஒரு ஏழைப் பெண்ணை கற்பழித்து சித்திரவதை செய்து காயப்படுத்தி குற்றுயிராக்கி விட்டுப் போக ,
அவளைக் காப்பாற்றும் சலீம், தான் பணியாற்றும் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை செய்கிறான்.
அவளுக்கு ஆகும் செலவை சலீம்தான் கொடுக்க வேண்டும் என்கிறது அவன் பணியாற்றும் பணம் பிடுங்கி மருத்துவமனை. அதையும் ஏற்கிறான் சலீம் .
அந்த பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் நிஷாவை சந்திக்காமல் போனதால், ‘சலீமை திருமணம் செய்து கொள்ள பிடிக்கவில்லை’ என்று காரணம் கூறி திருமணத்தை நிறுத்துகிறாள் நிஷா .
நோயாளிகளை ஏமாற்றி பணம் பிடுங்கும் டாக்டர்களுக்கு கோடிகளை அள்ளிக் கொடுக்கும் மருத்துவமனை உரிமையாளரான பெரிய டாக்டர், பார்ட்டி என்ற பெயரில் போதை சபையில் வைத்து சலீமை கேவலப்படுத்துகிறார் .
சலீம் காப்பாற்றிய பெண்ணை அவளை கொலை செய்ய முயன்றவர்களிடமே ஒப்படைத்து அவள் கொல்லப்பட துணை போகிறது காவல்துறை.
ஒரே நாளில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்….தான் நல்லவனாக நேர்மையானவனாக இருக்கும் ஒரே ‘குற்ற’த்துக்காக தனி வாழ்வு , தொழில் வாழ்வு, சமூக வாழ்வு மூன்றுமே தன்னை கறிவேப்பிலையாக தூக்கி எறிவதோடு, செல்லாக்காசு என்று தள்ளிவிடும் நிலையில், சலீமின் பொறுமை எனும் அணை உடைகிறது .
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள் . இங்கே சலீம் என்ற சாது மிரண்டதும் சென்னை நகரமே அலறுகிறது . எப்படி? எதனால் ? சலீம் என்னவானான்? அல்லது என்னவாக ஆனான் என்பதே … இந்த சலீம்.
தனியார் மருத்துவமனைகளின் பணம் பிடுங்கும் ஈவிரக்கமற்ற தன்மையை அழுத்தமாகத் தைக்கிற மாதிரி சொல்லி இருப்பதில், இந்தப் படத்தின் மேல் ஒரு தனி மரியாதையே ஏற்படுகிறது.
தனது கதாபாத்திரத்தை உணர்ந்து உயிர்த்து அழகாக செய்து இருக்கிறார் விஜய் ஆண்டனி . ரசிகர்களோடு ஒரு அன்னியோன்யத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நடிப்பு! ஒரு நிலைக்கு மேல் பொங்கி எழுவதும் நியாயமாக இயல்பாக பொருத்தமாக இருக்கிறது.
ஈர்க்கிற பாடல் இசை , அரேபிய இசை பாணியிலான பின்னணி இசை இரண்டிலும் அசத்தி இருக்கிறார் ‘இசையமைப்பாளர்’விஜய் ஆண்டனி . படத்தின் துவக்கத்தில் வரும் அந்த இஸ்லாமிய உருதுப் பாடல் மார்க்க அன்பர்களின் ரிங் டோனாக வெகுநாள் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்ற சம்போ சிவா சம்போ பாடலை ரீமிக்ஸ் செய்து படத்துக்கு டெம்போ ஏற்றிக் கொள்கிறார். மஸ்காரா பொண்ணு என்ற கிளப் சாங், தன்னம்பிக்கை உருவேற்றும் லட்சியப் பாடல் என்று எல்லாவற்றிலும் சக்சஸ் டச் !
மப்பும் மந்தாரமுமாக கொப்பும் குலையுமாக கொழுக் மொழுக் என்று இருக்கிறார் நாயகி அக்ஷா பர்தசனி. சலீமை அவமானப்படுத்தும் காட்சிகளில் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானாலும், இடைவேளைக்குப் பிறகு சிரிக்க வைத்து விட்டு, படத்தில் இருந்து விடைபெறுகிறார்.
சலீமை பிடிக்க வந்து கடைசியில் அவனுக்கு உதவுபவராக மாறும் காவல் துறை அதிகாரி பாத்திரத்தில் சந்திரமவுலி ஏகப் பொருத்தம் . ஒரு நிலையில் சலீமுக்கு ரகசியம் சொல்லும் காட்சியில் நடிப்புக்காக சபாஷ் போட வைக்கிறார் .
மத்திய அமைச்சராக வரும் ஆர்.என்,ஆர் மனோகர், மருத்துவமனை சக மருத்துவராக வரும் லொள்ளு சபா சுவாமிநாதன், மந்திரி உதவியாளராக நடித்திருக்கும் வாலி அனைவரும் தங்கள் பங்கை நேர்த்தியாக செய்து இருக்கிறார்கள்.
பாடல் காட்சிகளை சிறப்பாக எடுத்து இருக்கிறார்கள் . மஸ்காரா பாடலில் ஆடும் பெண், ‘இன்னும் கொஞ்ச நேரம் ஆடமாட்டாரா…?’ என்று எதிர்பார்க்க வைக்கிறார்.
கதாபாத்திரங்கள் சீரியசாக செயல்பட, படம் பார்க்கும் ரசிகர்களுக்கு காமெடியாக அமையும் வகையிலான காட்சிகள் இரண்டாம் பாகத்தில் வயிறு குலுங்க வைக்கிறது.
“சலீம்னா நீ எந்த குரூப் தீவிரவாதிடா? லஷ்கர் ஈ தொய்பாவா ? அல்குவைதாவா ? சிமியா ?” என்று காவல்துறை அதிகாரி கேட்க “இந்த சலீம்கற பேருதான் உங்களுக்கு பிரச்னையா ? அப்படீன்னா என்னை நீங்க விஜய்னோ இல்ல ஆண்டனின்னோ கூப்பிடுங்க ” என்று விஜய் ஆண்டனி பேசும் காட்சியில், தியேட்டரில் கைதட்டலும் விசிலும் பறக்கிறது. தவிர படத்தின் மொத்த வசனத்திலும் ஒரு அடக்கமான நேர்த்தி!
ஊரே தன்னை தீவிரவாதி என்று சொல்லிக் கொண்டு இருக்கையில் தன் வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்து அநாதை இல்லத்துக்கு தரவேண்டும் என்றும்….
வீட்டில் உள்ள புறாக்களை பட்டினி போட்டு விடாமல் வளர்க்க விரும்பும் யாருக்காவது கொடுத்து விடவேண்டும் என்றும்…
சலீம் நண்பன் சாமியிடம் (சாமிநாதன்) சொல்லும் காட்சி, கண்ணீர் வர வைக்கிறது
“நீங்க டாக்டரா?” என்று நிஷா கேட்கும்போது சலீம் “ஆமாம் “என்று சொல்லும் ஷாட்டை பின்னர் அவனது போட்டோவைப் பார்த்து “இவர்தான் எனக்கு பார்த்த மாப்பிள்ளையா?” என்று நிஷா கேட்கும் இடத்தில் பயன்படுத்துவது …..
“வெளியே போலாமா ?” என்று சலீம் கேட்கும்போது நிஷா “வேண்டாம் சாமி” என்று கையெடுத்துக் கும்பிட்டு சொல்லும் ஷாட்டை, பின்னர் அவள் கல்யாணத்தை நிறுத்த சொல்லிவிட்டதை எண்ணி சலீம் வருந்தும் போது மீண்டும் பயன்படுத்துவது….
இது போன்ற இடங்களில் ராஜேஷ்குமார் , வீரா செந்தில், செல்வா ஆகியோரின் ‘ஈஸ்தட்டிக் எடிட்டிங் ‘ அடடா .. அல்வாத்துண்டு !
இப்படி ரசனையான படத் தொகுப்பை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு கண்ணுகளா !
ஃபிரேம்கள் , ஒளிப் பயன்பாடு , வண்ணக் குழைவு , துல்லியம் , சூழலை உணரவைத்தல் , டிஜிடல் இமேஜிங் என்று எல்லா விதத்திலும் கண்களைக் கட்டிப் பிடித்துக் கானம் பாடிக் காதலிக்கும் கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு கிடைத்த பெரும் கொடை !
யதார்த்தமான வாழ்வியல் பிரச்னைகளை சொல்லி பயணிக்கும் திரைக்கதையின் இரண்டாம் பகுதியில் ஆக்ஷன் காட்சிகளில் லாஜிக் கொஞ்சம் லக லக ஆனாலும் ….
திரைக்கதையின் பயணிப்பு, காட்சி விவரணை, ஷாட்கள் அமைத்தல், உணர்வுகளை உருவாக்குதல் , படமாக்கல், ஆகியவற்றில் வீடுகட்டி விளையாடி இருக்கிறார் அறிமுக இயக்குனர் நிர்மல்குமார். இரண்டாம் பகுதியில் பெரும்பாலும் வழக்கமான காட்சிகள்தான் என்றாலும் சொன்ன விதத்தில் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொண்டிருப்பது சாமர்த்தியமான இயக்கத்தின் அடையாளம் .
சலீம் .. சலாம்!
மகுடம் சூடும் கலைஞர்கள்
——————————
விஜய் ஆண்டனி, நிர்மல் குமார், கணேஷ் சந்திரா, சந்திரமவுலி ,ராஜேஷ்குமார் , வீரா செந்தில், செல்வா