பக்கத்து வீட்டுக்கு குடிவரும் ஒரு குடும்பத்தின் ஒரே வாரிசும் மாசம் இரண்டு லட்ச ரூபாய் சம்பாதிப்பவளுமான அந்த இளம்பெண்ணுடன் (அமலா பால்) அவனுக்கு பரிச்சயம் ஏற்பட்டு நட்பாகிறது. வீட்டில் அப்பா அம்மாவின் ஆறுகால அர்ச்சனைகள் , தம்பியின் சைலன்ட் அயோக்கியத்தனங்கள் போன்றவை காரணமாக மனம் புழுங்கும் அவன் மீது, அந்த பெண் பொழியும் ஆறுதல் காதலாகிறது.
அப்பாவுக்கும் அவனுக்குமான சண்டையில் அம்மா அவனை அடித்து விட, அதனால் அவன் அம்மாவிடம் கோவித்துக் கொண்டு பேசாமல் இருக்க, உடம்பு சரியில்லாத அம்மாவை பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு அப்பாவும் தம்பியும் வெளியூர் போக , ஒரு நிலையில் அம்மாவிடம் இருந்து வரும் அழைப்புகளை தொடர்ந்து அவன் புறக்கணிக்க, அதனால் பேரிழப்புக்கு ஆளாகிறது குடும்பம் .
நொறுங்கிப் போகும் நாயகன் அதில் இருந்து மீள்கிறான். அம்மா செய்த ஒரு உதவியால் பெரிய நிறுவனத்தில் அவனுக்கு புராஜக்ட் என்ஜினீயர் வேலை கிடைக்கிறது. அங்கே போனால் பண முதலைகள், அரசியல் ஆமைகள், ரவுடிப் பட்டாளம் எல்லாம் இவனை ஜெயிக்க விடாமல் வீழ்த்த முயல அதில் இருந்து அவன் மீண்டும் வென்றானா இல்லையா என்பதுதான் வேலை இல்லா பட்டதாரி .
படத்தின் முதல் பலம் .. வேறு யார் ? தனுஷ்தான் !
தனுஷ் மிகச் சிறந்த நடிகர் என்பது எப்போதோ முடிவான ஒன்று . ஆனால் இந்தப் படத்தில் இன்னும் கொஞ்சம் உயர்ந்து இருக்கிறார் . கோபம் , ஆத்திரம் , சோகம் , இயலாமை , தில், வெறுப்பு , சலிப்பு போன்ற உணர்வுகளில் பின்னிப் பெடல் எடுக்கிறார். நடனத்தில் வழக்கம் போல நட்டுவாங்கம்! முக்கால் வாசி படம் ஓடிய நிலையில் ஒரு காட்சியில் அது வரையிலான தனது வாழ்க்கைச் சம்பவங்களை ஒரே ஷாட்டில் மிக நீண்ட வசனமாக பேசும் இடத்தில் தியேட்டர் சும்மா அல்லுசில்லு ஆகிறது.
அமலா பால் இயல்பாக நடித்து இருக்கிறார் . அம்மாவாக வழக்கம்போல அசத்தி இருக்கிறார் சரண்யா பொன்வண்ணன். பண்பட்ட நடிப்பு!. சுப்பிரமணியபுரம் படத்தில் பார்த்த அதே வயதான கெட்டப்பில் சமுத்திரகனி, தனுஷின் அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். அவரது கேரக்டருக்கு டப்பிங்கில் சேர்த்து இருக்கும் பல அவுட் ஆஃப் ஃபிரேம் வசனங்கள் அருமை
படத்தின் பாடல்கள் எல்லாவற்றையும் எழுதி இருப்பவர் தனுஷ்தான். “போனாய் தனியாக.! வந்தாய் நாமாக !” போன்ற வரிகளில் அசத்தி இருக்கிறார் ‘Poetu’ தனுஷ் . ஓய் திஸ் கொலைவெறி பாணியில் வரும் ஒரு பாட்டில்’ தமிழ் ஈஸ் மை மதர் டங்கு’ என்கிறார் .அனிருத்தின் இசையானது பாடல் பின்னனி இரண்டிலும் ஒகே . ஒரு பாடலில் “அட்ரா அவள.. ஒதடா அவள.. வெட்றா அவள … ” பாட்டு அப்படியே இருக்கிறது.
கட்டுமான இடத்து சண்டைக் காட்சிகளில் வேல்ராஜின் கேமரா கவனம் ஈர்க்கிறது என்றால் அவரது திரைக்கதை இயக்கம் படம் முழுக்கவே கவர்கிறது. ஒரு வெகுஜன பிரச்னையை கதையாக எடுத்துக் கொண்டு இயல்பான காட்சிகள் பின்னப்பட்ட திரைக்கதையை கொடுத்து ஒரு நிலையில் அதில் பக்கவாக சினிமாத்தனங்களையும் கமர்ஷியல் விசயங்களையும் கோர்த்து தெளிவாக ஒரு வணிக சினிமாவை கொடுத்துள்ளார் இயக்குனர் வேல்ராஜ்.
கத்தியை வீச வரும் ரவுடியை தண்ணீர் பைப்பை வைத்து சமாளிப்பது நல்ல உத்தி. கட்டுமானக் கம்பெனி காட்சிகள் பலருக்கும் தெரியாத விசயங்களை வெளியே சொல்லி மிரட்டுகிறது. . பேஸ்புக் சமாச்சாரங்கள்… அந்த பகுதி கதைக் களம்… இவை எல்லாம் நிஜமான வேலை இல்லாப் பட்டதாரிகளை கவரும்.
ஆழ்வார்பேட்டை என்பதற்கு பதில் ஆள்வார் பேட்டை என்று போட்டு டைட்டிலிலும் தமிழ்க் கொலை செய்வதை தவிர்த்து இருக்கலாம் .
(V)வேலை (I)இல்லாப் (P)பட்டதாரி …. (V.I.P ) வி.ஐ.பிதான்
மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————–—-