ராக்கி @ விமர்சனம்

சி ஆர் மனோஜ் குமார் தயாரிப்பில் இயக்குனர் பாரதிராஜா,  வசந்த் ரவி , ரவீணா,  ரோகினி , சிறுமி அனிஷா மற்றும் பலர் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் படம் ராக்கி 

(ஏற்கனவே பிரபல இந்தித் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான கே சி பொக்காடியா தயாரித்து இயக்க, ஸ்ரீகாந்த், எஷான்யா,, நாசர், நடிப்பில் தமிழ் , தெலுங்கு , இந்தி மொழிகளில் ராக்கி என்ற படம் ஏப்ரல் 2019 இல் வந்திருக்கிறது , ) 

தமிழ் நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்தல் செய்யும் தொழிலில் ல் கொடிகட்டிப் பறக்கும் மணிமாறனின் (பாரதிராஜா)  மகன் உதய்க்கும்( ரிஷிகாந்த்) அதே தொழிலை கொஞ்சம் மனிதாபிமானத்தோடு , மணி மாறன் போலவே செய்ய முயலும் — ஈழத்தில் இருந்து வந்து தமிழ் நாட்டில் செட்டில் ஆன –  ராக்கிக்கும் ( நாயகன் வசந்த் ரவி) முட்டிக் கொள்கிறது.
 
அதன் விளைவாக ராக்கி ஜெயிலுக்குச் சென்று பல வருடம் கழித்துத் திரும்ப ,   அம்மா (ரோகினி) இல்லை. தங்கை காணவில்லை . 
 
எல்லா பின் விளைவுகளுக்கும்  யார் காரணம் என்று அறிந்து ராக்கி  எதிர்வினையாற்ற, தங்கையின் மகளான சிறுமியை ராக்கி காப்பாற்ற  வேண்டி வருகிறது  அப்புறம் என்ன நடந்தது என்பதுதான் இந்த ராக்கி 
 
– என்று சொன்னால் வெகுஜன ரசிக மனோபாவத்தில் படம் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு சித்திரம் வருமே, அது சற்றும்  இல்லாமல் வேறு ஒரு அனுபவத்தை தருகிறது என்பதுதான் இந்தப் படத்தின் முதல் பலம் . மாபெரும் பலம் 
 
வழக்கமான கதைப்போக்கு, வழக்கமான கதை  சொல்லல் , வழக்கமான் பின்புலம் , வழக்கமான ஷாட்கள், வழக்கமான ஃபிரேம்கள் , வழக்கமான குளோசப்கள், வழக்கமான படத் தொகுப்பு, வழக்கமான ஒளிப்பதிவு , வழக்கமான பின்னணி இசை என்று எதுவும் இல்லாமல் எல்லாவகையிலும் ஒரு பமாறுபட்ட அனுபவத்தைத் தருகிறது ராக்கி . 
 
ஒரு சிறந்த உலகப் பட விழாவில் ஒரு சிறப்பான படத்தைப் பார்க்கிற உணர்வைத் தருகிறது இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் படமாக்கலும் இயக்கமும் . 
 
அதிகபட்ச விஸ்தீரணம் கொண்ட பிரேம்கள், அதிக பட்ச வானத்தைக் காட்டும் ஷாட்கள், விதவிதமான கேமரா நகர்வுகள் கொண்ட மிக மிக நீளமான ஷாட்கள், அதிக தடவை ரிப்பீட் ஆகும் ஷாட்கள், ஆழமான சிம்பாலிசம், உள்ளார்ந்த குறியீடு என்று படம் முழுக்க  மேக்கிங்கில் ஒரு புதிய அனுபவம் இந்த ராக்கி . 
 
பின்புல உருவாக்கம் , இருள் ஒளிப் பயன்பாடு, திரைக்கதை அமைப்பு என்று எல்லாவகையிலும்  அசத்துகிறது படம் . 
 
வசந்த் ரவி நடிப்பாலும் உழைப்பாலும்  வியக்க வைக்கிறார். அற்புதம் .
 
பாரதிராஜா இதுவரை வெளிப்படாத பரிமாணத்தில் அபாரம் .  
 
ரோகினி, ரவீணா , அனிஷா முதற் கொண்டு அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்  இயக்குனர் அப்படி வேலை வாங்கியுள்ளார். 
 
ஸ்ரேயாஸ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, நாகூரானின் படத் தொகுப்பு, ராமு தங்கராஜின் கலை இயக்கம், தர்புக சிவாவின் இசை , ஹரிஹரன் மற்றும் சச்சினின் ஒலி வடிவமைப்பு, ராஜா கிருஷ்ணனின்  ஒலிக் கலவை … இவை நமக்கு தரும் காட்சி மற்றும் கேட்டல் அனுபவம் அபாரமானது.
 .
என்ன பிரச்னை என்றால், கதை திரைகதைப்படி தவிர்க்க முடியாதது என்றாலும் படத்தில் ஓடும் ரத்த ஆறு ( அதற்கான ஏ சர்டிபிகேட் வேறு ரத்தச் சிவப்பில் பயமுறுத்துது) எல்லா தரப்பினரும் பார்க்கும் படமாக அமையாமல்   ரசிகர்களின் எண்ணிகையை  ஓர் எல்லைக்குள் குறுக்கி விடுகிறது . 
 
இவ்வளவு ரத்தம் இல்லாத அல்லது தேவைப்படாத ஒரு  சுவாரஸ்யமான கதை திரைக்கதை  இந்த பாணி மேக்கிங்கில் வந்திருந்தால் படம் ஏகபோகமாக கொண்டாடப்பட்டு இருக்கும் வாய்ப்பு அதிகம்.
 
அதே போல வித்தியாசமான உத்திகளை கடை பிடித்தவர்கள், வழக்கமான ஒரு கதையை விட்டு விட்டு ,  ஒரு வித்தியாசமான கதையைத் தேர்வு செய்து இருந்தால் படம் இன்னும் உயர்ந்திருக்கும் . 
 
எனினும்  அரைச்ச மாவையே அரைக்காமல் , புதிய வித்தியாசமான திரை அனுபவம் விரும்புவோருக்கு ஏற்ற காரசாரமான  ரத்தப் பொரியல் டிஷ் இந்த ராக்கி 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *