ஸ்டார் மூவிஸ் சார்பில் நடிகர் தியாகராஜன் திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க அவரது மகன் நடிகர் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்க அருண் ராஜ் வர்மா என்ற புது இயக்குனர் அறிமுகமாகும் படம் சாஹசம் .
மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் பெற்ற ஆஸ்திரேலிய அழகி அமன்டா கதாநாயகியாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் பிரபல இந்திப்பட ஐட்டம் சாங் நடிகை நர்கீஸ் ஃபக்ரியும் இருக்கிறார்
பாடல்களை மலேசியா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் படமாக்கியுள்ளனர்.
எஸ் எஸ் தமன் இசையில் உருவாகும் இந்தப் படத்துக்காக சயாங் என்ற மலாய் மொழி வார்த்தை (அன்பே என்று பொருள் ) இடம்பெற்ற பாடல் ஒன்றின் சிங்கிள் டிராக் வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்த நிலையில், படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது
ஜெர்மன் மற்றும் தாய்லாந்து நாட்டின் துணைத் தூதர்கள் மற்றும் பிரஷாந்தின் பள்ளித் தோழரான ஆற்காடு இளவரசர் ஆசஃப் அலி ஆகியோர் கலந்து கொண்ட இந்த விழாவில் படத்தின் ஐந்து பாடல்களும் திரையிடப்பட்டன.
பாடல்கள் அனைத்தும் இனிமையாகவும் வணிகச் சிறப்போடும் இருந்தன . கபிலன் எழுதிய ‘பிடிக்கும்’ என்ற ஓர் பாடலில் வரிகள் நன்றாக இருந்தன . சயாங் பாடல் நடன அசைவுகளில் அசத்தியது.
ஜப்பானில் படம் பிடிக்கப்பட்ட ‘ஆங்ரி பேர்ட்’ பாடலில் மெட்டும் இசைக்கருவிப் பயன்பாடும் வெகு அருமை . கேட்ட பிறகும் வெகு நேரம் உள்ளுக்குள் ஒலிக்கும் பாடல் இது . இந்தப் படத்தில் ஒரு புதிய தமனைப் பார்க்க முடிகிறது .
நிகழ்ச்சியில் பேசிய பலரும் பிரஷாந்த் இன்னும் இளமையாகவே இருப்பதையும் அவர் வர வேண்டிய உயரத்துக்கு இன்னும் வரவில்லை என்பதையும் இடையில் ஒரு பெரிய இடைவெளி விட்டுவிட்டார் என்றும் குறிப்பிட்டுப் பேசினார்கள் .
இயக்குனர் மாதேஷ் பேசும்போது ” ஜீன்ஸ் படத்துக்கு ஹீரோ யார் என்ற கேள்வி வந்த போது விஜய், அஜித் , பிரஷாந்த் மூவரும் பரிசீலனையில் இருந்தனர் . கடைசியில் பிரஷாந்தை எங்கள் இயக்குனர் ஷங்கர் முடிவு செய்தனர். பிரஷாந்த் அழகாக இருப்பவர் . நடனம் சண்டை இரண்டிலும் வல்லவர் , அவர் முழுமையான ஹீரோ .
இந்தியில் பெரிதாக பேசப்படும் ஸ்பெஷல் 26 படத்தை அடுத்து பிரஷாந்தை வைத்து தியாகராஜன் சார் தயாரிக்கப் போவதாக அறிந்தேன் . அதை இயக்கித் தர நான் ஆவலாக இருக்கிறேன் “என்றார் .
பதில் பேசிய தியாகராஜன் “நீங்களே இயக்குங்கள் ” என்று மேடையில் அறிவித்தார் .
பாடலாசிரியர் நா. முத்துக் குமார் பேசும்போது ” நான் எழுதி ஹிட் ஆன முதல் பாடல் பிரஷாந்த் நடித்த ஹலோ படத்தில் இடம்பெற்ற ‘சலாம் குலாமு’ என்ற பாடல்தான் . ஆனால் படத்தில் எனது பெயர் வரவில்லை .
பின்னர் பிரசாந்துக்கு நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறேன், இந்தப் படம் உட்பட ” என்றார் .
பிரஷாந்த் தனது பேச்சில் ” நான் பதினேழு வயதில் நடிக்க வந்துவிட்டேன் . இடையில் நான் கேப் விட்டுவிட்டதாக பலரும் சொன்னார்கள் . இல்லவே இல்லை. மம்பட்டியான் , பொன்னர் சங்கர் படங்கள் தயாரிப்பில் அதிக நாட்கள் ஆனது . ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டும் பண்ணியே பழகிவிட்டேன் . இனி அடுத்தடுத்து விரைவாக படங்கள் வரும்” என்றார்






