
யோக் ஜெபி , சனம் , ரோஹித் , ரியாஸ் அன்சாரி ஆகியோர் நடிக்க சுமந்த் ராதா கிருஷ்ணன் என்பவர் இயக்கி இருக்கும் படம் சதுரம் 2.
இந்த சதுரம் நேர்த்தியானதா ? இல்லை நேர்த்திக் கடனானதா ? பார்ப்போம்
ஒரு சதுர வடிவ அறைக்குள் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் இருவர் கண் விழிக்கிறார்கள்
ஒருவன்… தவறு செய்யும் பெரிய மனிதர்களின் நிழலான காரியங்களை படம் புகைப்படம் எடுத்து தவறான மனிதர்களுக்கு கொடுத்து காசு சம்பாதிக்கும் இளைஞன் .
இன்னொருவர்…. ஜூனியரின் இல்லீகல் கோரிக்கைக்கு துணை போகாத — ஆனால் மனைவிக்கு தெரியாமல் சக பெண் ஊழியரோடு குடும்பம் நடத்துகிற பிரபல டாக்டர் .
சதுர அறைக்குள் பிணைக்கப்பட்ட இருவரின் சட்டைப் பையிலும் ஒரு கேசட் இருக்கிறது கூடவே ஒரு குட்டி டேப் ரிக்கார்டர் . அதில் “நீங்கள் குற்றவாளிகள் . உங்களுக்கு மரணம்தான் பரிசு .
ஆனால் அதே நேரம் எதிரில் இருக்கும் நபரைக் கொன்றால் உங்களை விடுவிப்பேன் . அல்லது இங்கே நான் வைத்து இருக்கிற சில குறிப்புகளை வைத்து தப்பிக்க முடிந்தால் தப்பித்துக் கொள்ளுங்கள் .
ஆனால் அதற்குள் உங்களுக்கு மரண பயம் வந்து இருக்கும் . அதன் பிறகு திருந்தி வாழுங்கள் என்ற செய்தி இருக்கிறது .
தவிர அந்த அறையில் கொடூரமாக கொல்லப்பட்ட ஒரு மனிதனின் உடலும் இருக்கிறது .
அவர்கள் தப்பிக்க முயலும் அதே நேரம், நாட்டுக்காக பெரும் சேவை செய்த அதிகாரி ஒருவரின் கதையும் விரிகிறது .
அவரின் காதல் மனைவிக்கு இரட்டைக் குழந்தை உருவாகி அவர்கள் சந்தோஷமாக இருக்கும் நேரம், அந்த அதிகாரிக்கு மூளையில் கட்டி வந்து விரைவில் மரணம் என்ற நிலைக்கு போய் விட்டது சொல்லப் படுகிறது .
சதுர அறையில் சிக்கிய இருவரும் கொன்று கொண்டார்களா? தப்பித்தார்களா ?
மூளை கட்டி அதிகாரிக்கு இதில் என்ன பங்கு ? என்பதே இந்த சதுரம் 2.
ஒரு சிறிய அறையில் பெரும்பகுதி கதை நிகழ்வதும் குறிப்புகள் மூலம் கதையை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லப்படுவதும் பாரட்டுக்குரிய விஷயம்தான். .
அதே போல் கிளைமாக்ஸ் டுவிஸ்டும் , நாங்க எல்லாம் நல்லா வாழ முடியாத உலகில் நீங்க ஏன் வாழணும் என்ற கேள்வியும் சிறப்பு .
ஆனால் saw என்ற ஆங்கிலப் படத்தைக் காப்பி அடித்தவர்கள் அதை வெகு ஜனமக்களைக் கவரும் வகையில் சொல்லத் தவறி விட்டார்கள் .
நாங்க எல்லாம் நல்லா வாழ முடியாத உலகில் நீங்க ஏன் வாழணும் என்ற கேள்வியை இன்னும் சிறப்பான சம்பவங்கள் மற்றும் படமாக்கல் மூலம் சொல்லத் தவறியதால் …
சதுரம் .. ரொம்பவே நசுங்கிக் கிடக்கிறது