எட்சட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் என்பவர் தயாரிக்க, ராமராஜன், ராதாரவி, எம் எஸ் பாஸ்கர், போஸ் வெங்கட், மைம் கோபி, கே எஸ் ரவிக்குமார், மற்றும் பலர் நடிப்பில் ராஹேஷ் என்பவர் இயக்கி இருக்கும் படம்.
சில இளைஞர்கள் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க முயல்கிறார்கள் . அந்த சூழலில் இரண்டு கிராமத்து நபர்கள் ( ராமராஜன் , எம் எஸ் பாஸ்கர்) நகரில் உள்ள ஒரு நண்பரின் (ராதாரவி) வீட்டுக்கு வருகிறார்கள். அந்தக் குடியிருப்பிலேயே ஒரு வங்கியில் மேனேஜராகவும் அசிஸ்டன்ட் மேனேஜராகவும் இருக்கும் நபர்கள் , மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் குடியிருக்கிறார்கள் .
நண்பர்களில் ஒருவர் (ராமராஜன்) , இளைஞர்கள் கொள்ளையடிக்கும் அதே வங்கிக்கு பெரிய பெட்டியோடும் முறைப்போடும் போக, , மற்ற நண்பர்களில் ஒருவர், (ராதாரவி) பழக்கத்தின் அடிப்படையில் உதவி மேனேஜரின் வீட்டிற்குப் போய் அவரது கர்ப்பிணி மனைவியிடம் பேசிக் கொண்டு இருக்கிறார்.
இன்னொருவர் பக்கத்து வீட்டுக்கு வந்திருப்பது போல வங்கி மேனேஜரின் ( போஸ் வெங்கட்) வீட்டுக்குப் போய் பேசிக் கொண்டு இருக்கிறார் .
பணம் கொள்ளையடிக்கத் திட்டமிடும் இளைஞர்கள் வங்கிக்குள் போக, உள்ளே நுழையும் கிராமத்து நபர் ( ராமராஜன்) டெபாசிட் பண்ணுவது போல உள்ளே போய் பெட்டியைத் திறக்க ஆர் டி எக்ஸ் பாம்.
யாரவது அசைந்தால் வங்கி வெடித்துச் சிதறும் என்கிறார். கிராமராஜன் . வங்கி மேனேஜர் மற்றும் உதவி மேனேஜரின் குடும்பத்தாரை தமது நண்பர்கள் மூலம் துப்பாக்கி முனையில் நிறுத்தி சில கோரிக்கைகள் வைக்கிறார்
காரணம் ?
கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து பணியாற்றும் அவரது மகளும் மருமகனும், ஒரு சொந்த வீடு வாங்க ஆசைப்பட்டு, பில்டரின் (மைம் கோபி) ஆலோசனையோடு வங்கி ஒன்றில் லோன் கேட்க ,
நூறு சதவீதம் லோன் தருவதாக சொன்ன வங்கி, பின்னர் எழுபது சதவீதம்தான் தருவோம் , முப்பது சதவீதம் பர்சனல் லோன்தான் கிடைக்கும் என்று சொல்ல, இளம் ஜோடி அப்படியே செய்ய , வீடு வாங்கிய சில மாதங்களில் வீட்டின் கூரை இடிந்து குழந்தை காயமாக,
கோபப்பட்ட பெண் போய் பில்டரிடம் நியாயம் கேட்க, பில்டர் கேவலமாகப் பேச, பில்டரை அவள் செருப்பால் அடிக்க , அவன் அவளை படுக்கையில் வீழ்த்த முடிவு செய்து, வங்கி மூலமும் லோன் கலெக்ஷன் ஏஜண்டுகள் மூலமும் டார்ச்சர்கள் செய்ய , நடந்தது என்ன? இப்போது வங்கிக்குள் ஆர் டி எக்ஸ் பாம் உடன் இருக்கும் கிராமராஜனுக்கு நடந்தது என்ன என்பதே படம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகனாக ராமராஜன் . படத்தின் முதல் சிறப்பு அது
ராமராஜன் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசை . அதுவும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு. அது இரண்டாவது சிறப்பு .
பெரிதாக பின்னணி இசையில் சோபிக்கவில்லை என்றாலும், தத்தி வா தத்தி வா தத்தைக் கிளியே பாடல் மூலம் பழைய ராமராஜன் – இளையராஜா காம்பினேஷனின் வாசம் கொடுக்கிறார் இளையராஜா
வீடு வாங்க வங்கிக் கடன் வாங்குவதில் உள்ள பிரச்னைகளை சொல்ல நினைத்து இருக்கிறார்கள் . அந்த நினைப்பு ஒகே . ஆனால் அதை ஒழுங்காக சொல்ல வேண்டாமா?
நீண்ட இடைவேளைக்குப் பிறகு ராமராஜனை ஹீரோவாக போட்டவர்கள் விபத்தால் அவர் உடலில் இருக்கும் பிரச்னைகளையும் மீறி அவருக்கு சற்றேனும் ஃபிட்னஸ்க்கான பயிற்சி கொடுத்து இருக்கலாம் . முடியாது எனில் அவர் இப்போது உள்ள நிலையில் அவருக்கு எந்த கோணங்களில் கேமரா வைக்கக் கூடாது என்று யோசித்து இருக்கலாம் . அவரது உடல் மொழிகளில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இயல்பான மேக்கிங் , நல்ல லைட்டிங், அட்லீஸ்ட் பழைய டெக்னிக்கான லென்சில் நெட் போட்டு எடுப்பது போன்ற தொழில் நுட்பங்கள் மூலம் அவரது முகத்தை கொஞ்சமாவது நன்றாகக் காட்டி இருக்கலாம் . ஆனால் அதற்கெல்லாம் …. சரி விடுவோம்
நூறு பர்சன்ட் லோன் எந்த வங்கியில் தர்றாங்க? இருந்தா சொல்லவும். சில விஷய சமயங்களில் அது நிர்வாகப்படி சாத்தியம் என்றாலும் கூட அதனால் பில்டருக்கு என்ன நஷ்டம்? அதை முப்பது பர்சன்ட் பெர்சனல் லோன் , எழுபது பர்சன்ட் வீட்டு லோன் என்று பிரித்துப் போட்டால் அதில் வங்கிகுதானே லாபம்? பில்டருக்கு என்ன லாபம்? நூறு பர்சன்ட் வீட்டு லோன் கொடுத்தால் பில்டர் ஏன் வங்கி மேல் கோபப்படணும். ஒருவேளை ஒவ்வொரு பர்சனல் லோனுக்கும் வங்கி, பில்டருக்கு கமிஷன் தருதா? ஆனால் படத்தில் பில்டர்தானே , தன்னிடம் வீடு வாங்க வரும் கஸ்டமர்களை அனுப்புவதன் மூலம் வங்கியையே அதிகாரம் செய்கிறார்.? ஒண்ணுமே புரியலே உலகத்திலே .
வாடகைக்கு இருப்போரின் குழந்தை அழுகிறது என்பதற்காகவும், சுவற்றில் ஓர் ஆணி அடிப்பதற்காகவும் வீட்டு ஓனர் கத்துவது தப்புதான்.. ஆனால் இரவில் கேட்டை மூடாமல் வருவது , தண்ணீர் வழிய வழிய மோட்டாரை நிறுத்தாமல் இருப்பது, இதற்கெல்லாம் திட்டுவது நியாயம்தானே? அதற்கும் சேர்த்துக் கோவித்துக் கொண்டு சக்திக்கு மீறி சொந்த வீடு வாங்கப் போவது யார் குற்றம்?

வீட்டுக் கடன் விசயத்தில் வங்கிகள், பில்டர்கள் செய்யும் மோசடிதான் கதை என்றால், தனிப்பட்ட பகை ஏதும் இல்லா விட்டாலும் அவர்கள் ம்க்களிடல் இப்படிதான் மனசாட்சி இன்றி ஏமாற்றி ரத்தம் உறிஞ்சிக் கொள்வார்கள் , சிரித்துக் கொண்டே கழுத்தை அறுப்பார்கள்; இனிக்க இனிக்கப் பேசிக் கொண்டே சாவடிப்பார்கள் என்பதுதானே சொல்ல வேண்டிய கதை ? அதை விட்டு விட்டு இளம் ஜோடிக்கும் பில்டருக்கும் இடையே இரட்டை அர்த்தப் பேச்சு, பதிலுக்கு அந்தப் பெண் அவனை செருப்பால் அடிப்பது , பில்டர் வீடு வாங்கியவரை படுக்கக் கூப்பிடுவது என்று சினிமாத்தனமாக எதையாவது எடுப்பது என்ன மாதிரியான நேர்த்தி?
புதிதாகக் கட்டப்பட்ட ஒரு அபார்ட்மென்டின் கூரை இடிவது எவ்வளவு பெரிய விஷயம்? அதை ஒரு நிலையில் அம்போ என்று விட்டு விட்டது என்ன நியாயம்?
ஜப்தியில் மூழ்கும் வீட்டை வாங்கும் நபர்கள் என்ற விஷயத்தை தொட்டவர்கள் அதையும் ஒரு காமெடியன் மூலம் நீர்த்துப் போகச் செய்தது எல்லாம் வேற லெவல்.
ராமராஜன் கதாபாத்திரத்தின் மகள் கதாபாத்திரம் அவரது சொந்த மகள் இல்லை என்பது இந்தக் கதைக்கு எந்த வகையில் உதவி என்று சொல்வோருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு தரலாம் .
டெக்னிக்கலாக, பைனான்சியலாக , சமூக ரீதியாக மக்களைப் பாதிக்கும் ஒரு விசயத்தை ஒரு படத்தில் சொல்ல வேண்டும் என்றால் , முதலில் அது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் ; அப்புறம் அறிய வேண்டும். அப்புறம் உணர வேண்டும் ; அப்புறம் படைக்க வேண்டும் ; அப்புறம் விசாரித்து தவறுகளைக் களைய வேண்டும் . அப்புறம்தான் எடுக்க வேண்டும்
குறைந்த பட்சம் தெரிந்த ஒரு நபரையாவது உடன் வைத்துக் கொள்ள வேண்டும் . இதில் எதையுமே செய்யவில்லை
ஆனால் , ‘ கதையதான் நான் எழுதினேன் ; திரைக்கதை வசனத்தை அவன் எழுதிட்டான் “என்று வசனம் வேறு
ஏதோ ராமராஜன் இருப்பதால் இந்தப் படத்துக்கு கொஞ்ச பேர் வருகிறார்கள். அப்படி அவருக்கு இன்னும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஆனால் இவர்கள் போர்வாளை வைத்துக் கொண்டு புடலங்காய் நறுக்கி இருக்கிறார்கள்
வங்கியின் மோசடி பற்றிய படம் என்பது மிக தேவையான ஒன்று . கொஞ்சம் சின்சியராக எழுதி இருந்தால் இந்நேரம் தமிழக திரையரங்குகளை தெறிக்க விட்டிருக்கலாம் . ஆனால் இவர்கள் தேரை இழுத்து தெருவில் விட்ட கதையாக ஒரு படம் எடுத்து இருக்கிறார்கள்.