மேற்படி மதுரை செல்வம் வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்க….கே.சி ரவி வழங்க,….
சஞ்சீவி என்ற இளைஞர் கதாநாயகனாகவும் பரத் ரவி என்ற இளைஞர் காமெடி நடிகராகவும் அறிமுகமாக , ஓவியா கதாநாயகியாக நடிக்க,
நடுத்தர குடும்பத்து படித்த இளைஞன் ஒருவன் அரசாங்க வேலைக்கோ அல்லது மாச சம்பளத்துக்கு தனியார் வேலைக்கோ போகப் பிடிக்காமல் பெரிய தொழில் அதிபர் ஆவதற்கு போராட,
அவன் அதில் ஜெயித்தானா ? எனில் எப்படி ஜெயித்தான்? எனில் அவனுக்கு உதவியது யார் என்பதை காமெடி, காதல், செண்டிமெண்ட் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜனரஞ்சகமாக சொல்லும் படமாம் சீனி
இந்தப் படத்தில் எம் ஜி ஆர், கவுண்டமணி இருவரும் நடித்து இருப்பது போல சாமர்த்தியமாக இயக்கி இருக்கிறாராம் ராஜதுரை . அது எப்படி என்பது படம் வரும்வரை சஸ்பென்ஸ் என்கிறார்.
டி வி எஸ் கம்பெனிக்கு சொந்தமான சீதா என்ற யானை இந்தப் படத்தில் மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் யானையாக — ஒரு கதாபாத்திரமாக நடித்துள்ளது. இந்த யானையின் பாகனாக வீரபாகு என்ற கதாபாத்திரத்தில் இதுவரை நடிக்காத வேடம் ஒன்றில் நடித்துள்ளார் நடிகர் செந்தில் .
“யானையைப் பயன்படுத்திய விதத்தில் தேவர் பிலிம்ஸ் , ராமநாராயணன் படங்களைப் போல எங்கள் சீனி படமும் குடும்பத்தோடு பார்க்கும் வகையில் கண்ணியமாக இருக்கும்” என்கிறார் தயாரிப்பாளர் மதுரை செல்வம் . (ஓவியாவை பயன்படுத்திய விதத்திலும் அதே கண்ணியம் இருக்கணும், மதுரை செல்வம் !)
பொதுவாக ஒரு படத்துக்கு ஒரு பத்திரிகை தொடர்பாளர்தான் இருப்பார் . ஆனால் பத்திரிகை தொடர்பாளரான மதுரை செல்வம் தயாரிக்கும் படம் என்பதால் இந்தப் படத்தில் மொத்தம் 11 பத்திரிக்கை தொடர்பாளர்கள் சேர்ந்து பணியாற்றி உள்ளனர் .
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் முன்னோட்டத்தையும் இரண்டு பாடல்களையும் திரையிட்டார்கள் .
ஸ்ரீகாந்த் தேவா இசையில் விவேகா, சினேகன் வரிகளில் பாடல்கள், கிராமத்து மண் வாசனை இசை மற்றும் வரிகளோடு பட்டையைக் கிளப்புகிறது . நாகராஜனின் ஒளிப்பதிவும் கிராமத்துப் புழுதி உணர்வை அப்படியே கொண்டு வருகிறது .
படம் சம்மந்தப்பட்ட கலைஞர்கள் தவிர கலைப்புலி எஸ்.தாணு ,விக்ரமன் , ஆர்.கே. செல்வமணி , விவேக், சின்னி ஜெயந்த்,மனோஜ்குமார், ஹரி குமார் என்று பெரிய பட்டாளமே திரள, அரங்கு மட்டுமின்றி மேடையே நிரம்பி வழிந்தது.
நடிகர் விவேக் பேசும்போது நடிகர் செந்திலைப் பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேசினார் ” எத்தனையோ காமெடி நடிகர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் செந்தில் என்றும் நிலைத்து நிற்பார். அவரது காமெடி நடிப்பு மட்டும் அல்லாது தங்கமான குணமும் அதற்கு காரணம் . தமிழ் நாட்டு ரயில்களில் அவரிடம் பண உதவி பெறாத அலுவலர்களே இருக்க முடியாது “என்றார் . மதுரை செல்வம் , நாயகன் சஞ்சீவி, ஸ்ரீகாந்த் தேவா எல்லாரையும் பாராட்டிப் பேசினார் .
சின்னி ஜெயந்த பேசும்போது ” இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது மதுரை செல்வத்துக்கு உடல்நிலை சரியில்லை. எனினும் நடிக்கப் போன எங்கள் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார் . அவ்வளவு வழியிலும் ஓடி ஆடி வேலை செய்தார் ” என்று பாராட்டினார் .
“நான் எத்தனையோ படங்களை இயக்கி இருக்கிறேன் . ஆனால் ராஜதுரை என்னுடன் வேலை செய்தபோது நிம்மதியாக இருந்திருக்கிறேன் . எந்தப் பிரச்னையும் வராமல் அவர் பார்த்துக் கொள்வார் . நல்ல உழைப்பாளி. திறமைசாலி ” என்றர ஆர்.கே.செல்வமணி .
“ராஜதுரை கண்டிப்பாக ஜெயிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை ” என்றார் மனோஜ்குமார்
பேசிய எல்லோரும் மதுரை செல்வத்தின் நட்புக் குணத்தை புகழ்ந்தனர் .
நாயகன் சஞ்சீவியின் கண்கள் ,நடனம் , உற்சாகம் எல்லாவற்றையும் பார்க்கும்போது ஆரம்ப கால தனுஷை பார்த்தது போல இருந்தது என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள்.
பாடல்களுக்காக ஸ்ரீகாந்த் தேவாவும் பாராட்டப்பட்டார் .
இது கண்டிப்பாக பி அண்ட் சி ஏரியாவில் கலக்கப் போகும் படமாக இருக்கும் என்று மனப்பூர்வமாக உண்மையாக பாராட்டினார்கள் .
வாழ்த்துகள் மதுரை செல்வம் !