ஏ ஜி எஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் , அர்ச்சனா அகோரம் ஆகியோர் தயாரிக்க,
விஜய், பிரஷாந்த் , பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா, லைலா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி அமரன், அம்மா சிவா, மற்றும் ஒரு பாட்டுக்கு திரிஷா, ஒரு காட்சிக்கு சிவகார்த்திகேயன், நடிப்பில்
வெங்கட் பிரபுவின் கதைக்கு , வெங்கட் பிரபு , எழிலரசு குணசேகரன், கே சந்துரு , மணிவண்ணன், பால சுப்பிரமணியன், ஆகியோர் திரைக்கதை எழுத
விஜி , எழிலரசு குணசேகரன், கே சந்துரு , வெங்கட் பிரபு ஆகியோர் வசனம் எழுத
யுவன் சங்கர் ராஜா இசையில் , சித்தார்த்த நுனியின் ஒளிப்பதிவில் வெங்கட் ராஜன் எடிட்டிங்கில் வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் படம்.
SATS எனப்படும் தீவிரவாத ஒழிப்பு சிறப்புப் படையில் (Special Anti-Terrorism Squad) பணியாற்றுபவர்கள் காந்தி ( விஜய்) சுனில் ( பிரசாந்த்) கல்யாண் (பிரபுதேவா) அஜய் (அஜ்மல்) ஆகியோர் . இவர்களின் பாஸ் நசீர் (ஜெயராம்)
முன்பு இவர்களுக்கு பாஸ் ஆக இருந்து பின்னர் தீவிரவாத குழுக்களுடன் இணைந்து விட்ட ராஜீவ் மேனன் ! (மோகன்) கென்யாவில் ரயிலில் கடத்தி வரும் யுரேனியத்தை விஜயகாந்த் கெட்டப்பில் போகும் காந்தியும் மற்ற நண்பர்களும் சேர்ந்து சண்டை இட்டு மீட்க, அதில் ராஜீவ் மேனன் ! கொல்லப்பட்டதாக நம்புகின்றனர் .
காந்தியின் மனைவி அனுராதா (சினேகா) கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர்களின் மூத்த மகனான சிறுவன் கடத்தப்படுகிறான் .ஒரு விபத்தில் கருகிய பாடி அவனுடையது என்று நம்பப் பட , காந்தி குடும்பம் உடைகிறது .
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிமித்தம் ரஷ்யா போகும் காந்தி அங்கே தன்னை பிரதி எடுத்த தோற்றத்தில் உள்ள இளைஞன் ஒருவனைப் பார்க்கிறான் . மகன் என்பதை உணர்கிறான் . அவனுக்கும் வந்திருப்பது அப்பா என்பது புரிகிறது .
அழைத்துக் கொண்டு சென்னை வருகிறான் . குடும்பம் இணைகிறது .
ஆனால் அதன் பிறகு காந்திக்கு எதுவுமே நல்லதாக நடக்கவில்லை .
நண்பர்களான சக வீரர்கள் கொல்லப்பட, திட்டங்கள் தோல்வி அடைகின்றன .
ஒரு நிலையில் இதற்கு எல்லாம் காரணம் தனது மகன் என்று காந்திக்கு புரிகிறது .
கென்ய ரயில் சண்டையில் தன் மகன் மகள் மனைவியை இழந்து தான் மட்டுமே தப்பித்த ராஜீவ் மேனன! பதிலுக்கு காந்தியின் மகனைக் கடத்தி பாசம் காட்டி வளர்த்து காந்தியையே கொல்ல அனுப்பி இருப்பது தெரிகிறது .
நடந்தது என்ன என்பதே படம் .
ராஜதுரை , குடியிருந்த கோயில் , என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்.. .. (விஜய்யின் எந்த படத்தில் பழைய படங்கள் இல்லை?)
அட்டகாசமான அந்த ஓப்பனிங் ஆக்ஷன் காட்சி ,
யுவன் சங்கர் ராஜா பின்னி எடுத்திருக்கும் அந்த முதல் பாட்டு (மட்டும்) மற்றும் பின்னணி இசை
மகனைத் தொலைத்தது முதல் பல ஆண்டுகளுக்குப் பிறகு மகனும் கண்டுபிடித்துக் காலில் விழுந்து அழும் வரையிலான அப்பா விஜய்யின் நெகிழ்ச்சியூட்டும் அருமையான நடிப்பு.. (REALLY VIJAY IS A GREAT PERFORMER ALSO)
இளைய விஜய்யின் வில்லத்தனமான நடிப்பு , ஸ்டைல் , மாஸ்
செயற்கை நுண்ணறிவில் வரும் விஜயகாந்த் நெகிழ வைக்கிறார் .
பிரஷாந்த் கம்பீரமாக இருக்கிறார் .
படமாக்கல் , தயாரிப்புத் தரம்
தான் அடித்த சிக்சர் பந்தை தானே அண்ணாந்து பார்க்கும் தோனியின் பார்வையில், அதே பந்து போல விஜய் பைக்கில் பறப்பதை காட்டிய மாஸ் அண்ட் கிளாஸ் வெங்கட் பிரபுவின் டைரக்ஷன்
சிவா கார்த்திகேயன் , திரிஷா, சினேகா, லைலா பங்களிப்பு
இவை எல்லாம் படத்தின் பிளஸ் .
இவ்வளவு பேர் இருப்பதையும் மீறி படத்தின் நீளம் அதிகமாக உணரப்படுவது ,
“எதுக்கு வரச் சொன்ன ?”
“பாட்டுப் பாடத்தான் ”
என்று சொல்லி வரும் பாட்டு இவை எல்லாம் பொறுமையை சோதித்து, ஆட்டோமாட்டிக் ஆக கையில் போனை எடுக்க வைக்கிறது.
ஒரு ஊரே சேர்ந்து வசனம் எழுதியும் படத்தில் உருப்படியாக ஒரு வசனம் கூட இல்லை
விசாரணை அறையில் சுடப்பட்டு விழும் பிரசாந்த் தன் உடல் என்ன ஆனது என்பது கூட தெரியாமல் , அவர் வரும்போது நீயா என்று பிரபு தேவா அதிர்வது எல்லாம் நான்சென்ஸ் ஆப் இந்தியா , ஆசியா ,
ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி படத்தில் கூட இப்படிப்பட்ட அபத்தங்கள் இருக்காது .
படம் விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கும் . மற்றவர்கள் பார்வையில் இது ஒரு ஓகே படம்.
உண்மையில் இது ஒரு நான்கு நாள் படம். ஆனால் ரிலீஸ் ஆகும் தியேட்டர்கள் ஓடும் காட்சிகள் காரணமாக இந்த நான்கு நாளில் நாற்பது நாள் வசூல் வந்து விடலாம் . அது தயாரிப்பு மற்றும் விநியோகத் திறன் .
தவிர வாரிசு படமே அந்த ஓட்டம் ஓடியது . கன்டென்ட் ரீதியாக அதற்கு G.O.A.T எவ்வளவோ பெட்டர் ( உண்மையில்நடிகர் விஜய் படத்துக்கு கதை மாதிரி ஒன்று இருந்தால் போதும் . மற்றதை விஜய்யே பார்த்துக் கொள்வார் )
ஆக விஜய் என்ற நடிகருக்கு G.O.A.T படம் ஓகே தான் .
ஆனால் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்து மாநில மாநாட்டுக்கு அனுமதி வாங்கிக் கொண்டிருக்கும் அரசியல்வாதி விஜய் நடிக்க வேண்டிய படம் இந்த G.O.A.T தானா?
அதுதான் இப்போ கேட்கப்பட வேண்டிய கேள்வி
விஸ்வரூபம் படம் வந்தபோது நான் எழுதிய ஒரு கட்டுரை இப்போது நினைவுக்கு வருகிறது
அரசியல்வாதியாக முடிவு செய்து விட்ட நிலையில் கமல்ஹாசன் நடிக்கும் படம் அட்லீஸ்ட் ஒரு உலகம் சுற்றும் வாலிபனாகவாவது இருக்க வேண்டுமே ஒழிய, நிச்சயமாக விஸ்வரூபம் இல்லை என்று . ஆனால் அவர் அதன் பிறகும் உத்தமவில்லன் பாபநாசம் , தூங்காவனம் தான் எடுத்தார்
கட்சி ஆரம்பித்து அரசியல்வாதி ஆகி விட்ட நிலையிலும் அவர் நடித்து விஸ்வரூபம் 2, விக்ரம் இவைதான் வந்தது . கமல் அரசியல்வாதி ஆன பின்னர் அவர் நடித்து வந்த இந்தியன் 2 படமும் குறைப் பிரசவமாகவே முடிந்தது ( கொஞ்ச பேர் அபார்ஷன் என்றே சொல்கிறார்கள் . அது போகட்டும்)
அடுத்து வந்த கல்கியோ , வரப் போகிற தக் லைஃப் படமோ அரசியல்வாதி கமலுக்கு உதவப் போவதில்லை. பிக்பாஸ் மூலம் தன்னுடைய அரசியலை வளர்த்துக் கொள்ளலாம் என்ற அவரது திட்டமும் இனி பலன் தராது
அதாவது, அரசியல்வாதி ஆக முடிவு செய்த பிறகும் அவர் தனது படங்களை அரசியல்வாதி கமல் யார் என்று காட்ட பயன்படுத்திக் கொள்ளவே இல்லை .
அதாவது கமல்ஹாசன் அரசியல்வாதியாக மாற ஆசைப்படுகிறாரே ஒழிய அவர் அரசியல்வாதியாக இல்லை என்பதை நிரூபித்த படங்கள்தான் இவை
இப்போது கமலின் அரசியல் எங்கே வந்து நிற்கிறது என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. திமுகவுக்கு ஆதரவாக ஓடி ஓடி உழைத்து கமல்ஹாசன் முதல்வர் குடும்பத்திடம் பெற்ற நெருக்கத்தை விட அதிக நெருக்கத்தை,
துரைமுருகனைச் சீண்டிய ஒரே பேச்சில் சாதித்து விட்டார் ரஜினி .
2018 இல் கமல் கட்சி ஆரம்பித்தார் என்றால் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினி 2017 டிசம்பரில் சொன்னார் . சாமி சத்தியமாக நான் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று 2020 இல் முடித்துக் கொண்டார் . இரண்டுமே டிசம்பர் திருவிழாக்கள்.
இந்தக் காலத்தில் ரஜினிக்கு வந்த படங்கள் காலா , 2.O, பேட்ட , தர்பார் .
இவற்றில் காலா மட்டுமே அரசியல் படம். தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக ரஜினி நடித்தது பாராட்டுக்குரிய விசயம் என்றாலும் , ஒரு தனிப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக நடிப்பது ஒட்டு மொத்த சமூக மக்களையும் கவர உதவாது . (ஒரு பொது மனிதனாக நின்று தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் குரல் கொடுக்கும் பிம்பம் வேறு . தாழ்த்தப்பட்ட நபராக நடித்து தன் சமூகத்துக்காக உதவும் பிம்பம் வேறு . முன்னதே அரசியலுக்கு உதவும் . பின்னது அடையாளம் தரும் . ஆனால் பின்னதுக்கு ஆட்சி தரும் நிலையில் அரசியலோ வெகுஜன மக்கள் மனநிலையோ இல்லை )
2.O, பேட்ட இவையும் அரசியல்வாதி ரஜினிக்கு உதவும் படங்கள் இல்லை . அதும் பேட்ட இந்த மண்ணின் மக்களுக்கு எதிரான அரசியலை சந்தடி சாக்கில் பேசிய படம் . தர்பார் ஒரு துன்பியல் சம்பவம்
ஆக ரஜினியும் அரசியல்வாதியாக ஆசைப்பட்டாரே ஒழிய தனது படங்களை தனக்கான அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ள அவருக்கு தெரியவில்லை. (நல்லவன் என்ற இமேஜ் ரசிகர் மன்றம் வளர மட்டுமே உதவும். தனது கொள்கை , லட்சியம் பற்றி சினிமா மூலம் பேசுவதே அரசியலுக்கு உதவும் ) ஆக ரஜினியும் அதை செய்யவில்லை.
சரத்குமார் , கார்த்திக், மற்றும் பலரைப் பற்றி எல்லாம் எழுதத் தேவை இல்லை. அவற்றை எல்லாம் எழுதி இந்தக் கட்டுரையை ரொம்பப் பெரிதாக்க விரும்பவில்லை, ( இப்பவே எவ்வளவு பெரிதாக வரும் என்பது தெரியவில்லை)
எனவே இவர்களை விட அதிக வெற்றி பெற்ற விஜயகாந்துக்குப் போய் விடுவோம்
கட்சி ஆரம்பித்த பிறகு அவர் நடித்த படங்கள் சுதேசி, பேரரசு, தர்மபுரி, சபரி, அரசாங்கம் , மரியாதை, எங்கள் ஆசான், விருதகிரி, சகாப்தம் . பல படங்களின் பெயர்களே சொல்லும் அவை அரசியல் படங்கள் என்று . இவற்றில் அரசியல் இல்லாத படங்களில் கூட எதாவது ஒரு வகையில் அரசியல் இருக்கும்படி பார்த்துக் கொண்டார் .
அதாவது அரசியலுக்கு வருவதற்கு முன்பு தீவிரவாத ஒழிப்புக் கதைகளில் நடித்த அவர் கட்சி ஆரம்பித்த பிறகு அடுத்த கட்டத்துக்குப் போனார் . அதாவது எம் ஜி ஆர் பாணிக்கு .
ஆனால் விஜய் கட்சி அறிவித்த பிறகும் இப்போது G.O.A.T என்ற தீவிரவாத ஒழிப்புக் கதையை எடுக்கும் இடத்துக்குத்தான் வந்திருக்கிறார். இதுவே அரசியல்வாதி விஜய்க்கு ஒரு பின்னடைவுதான்.
சரி எம் ஜி ஆர் பாணிக்குப் போன விஜயகாந்துக்கு என்ன ஆச்சு?
மேலே சொன்ன விஜயகாந்த் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் படங்கள் அல்ல . அவரது கடைசி பெரும் வெற்றிப் படம் எங்கள் அண்ணா என்கிறது பாக்ஸ் ஆபீஸ் . அதற்கு அப்புறம்தான் அவர் கட்சியே ஆரம்பிக்கிறார்
அதாவது விஜயகாந்துக்கு, கட்சி ஆரம்பித்த பிறகு என்ன மாதிரி படம் எடுக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்து இருக்கிறது . ஆனால் அதை எப்படி ரசிகர்களைக் கவரும்படி எடுக்க வேண்டும் என்பதுதான் தெரியவில்லை . அல்லது அவருக்கு ஏற்ற டீம் அல்லது சூழல் அமையவில்லை. அல்லது யாரோ விடவில்லை.
அதனால் அவர் கட்சி ஆரம்பித்த பிறகு , வெகு ஜன ரசிகர்கள் மத்தியில் அவர் படங்கள் பாக்ஸ் ஆபீசில் சறுக்கினாலும் , அவரைப் பின்பற்ற விரும்புவோருக்கு அவரைப் பின்பற்றலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்த படங்கள் மேல சொன்ன– பாக்ஸ் ஆபீசில் பெரிதாக ஓடாத– தனது அரசியல் எப்படி இருக்கும் என்று மக்களுக்கு சொன்ன அந்தப் படங்கள்தான்
அதாவது அந்தப் படங்கள் அவரைத் தேடி வருவோருக்கு கொள்கைப் பிரச்சாரம் செய்தன . படம் பார்த்து விட்டு படம் நல்லா இல்லை என்று சொன்னவர்கள் கூட அவர் சொல்றது நல்லா இருக்கு என்றார்கள். எனவே அவரது படங்கள் பாதிக்கப்பட்டாலும் அவரது அரசியல் பாதிக்கப்படவில்லை (தவிர ஒரு நடிகர் ஒரு கட்சி என்று ஆரம்பித்த பிறகு அவரது அரசியலுக்கு எதிரான அரசியலை பின்பற்றும் ரசிகர்கள் விலகிப் போவார்கள். பட வசூல் பாதிக்கப்படும் . எம்ஜி ஆருக்கே இது நடந்தது )
அந்தப் பிரச்சாரத்தின் விளைவுதான் அவருக்கு அரசியலில் எடுத்த எடுப்பில் அப்படி ஒரு வெற்றி கிடைத்தது . பின்னால் அவரால் அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால் அதற்கான காரணங்கள் வேறு .
எனினும் அரசியல்வாதி – கட்சித் தலைவர் என்று ஆன பிறகு தனது படங்களை அதற்கான சரியான முறையில் பயன்படுத்திய இரண்டாவது நடிகர் அவர்தான்
சொல்லப் போனால் அவருக்கு முன்பு சிவாஜியைக் கூட சொல்லலாம் . தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சி ஆரம்பித்து அவர் நடத்திய அந்த ஒரு ஆண்டு காலத்தில் அவர் நடித்த படத்தின் பெயர் கூட ‘என் தமிழ் என் மக்கள்’ .என்பதுதான்
அவருக்கும் விஜயகாந்த் போலவே எதை சொல்ல வேண்டும் என்று தெரிந்தாலும் எப்படி சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. . தவிர சிவாஜியின் தனிக் கட்சி ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்தது .
அடுத்து சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் அதற்கு தங்கள் படங்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் உலக இலக்கணம் வகுத்த எம் ஜி ஆருக்கு வருவோம் .
அவர் 1952 ஆம் ஆண்டு திமுகவில் சேர்கிறார் . 1954 முதலே அவருக்கான அரசியல் படங்களைத் திட்டமிடுகிறார் (மலைக்கள்ளன்) . சில நடக்கிறது . சில தடுமாறுகிறது சில முடியவில்லை .
எனவே அவரே ஒரு படத்தை தயாரித்து இயக்கி நடிக்கிறார் . நாடோடி மன்னன். அப்படி ஒரு கமர்ஷியல் வெற்றி தொழில் நுட்பச் சிறப்பு , சமூக நீதி பேசும் அரசியல் படம் .
அதுவரை அவர் திமுகவைப் பிடித்துக் கொண்டு இருந்தார் . நாடோடி மன்னன் படத்துக்குப் பிறகு திமுக அவரைப் பிடித்துக் கொண்டது
கட்சியின் பொருளாளர் ஆனார் . அந்தக் கட்சியை ஆட்சிக் கட்டிலில் ஏற்றியவர்களில் தானும் ஒருவர் ஆனார் . ஒட்டு மொத்த இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சியை முதன் முதலாக ஆட்சிக் கட்டிலில் ஏற்றிய சாதனையின் பங்காளர்களில் ஒருவர் ஆனார் .
இந்த அளவுக்கு எல்லாம் இப்போது அரசியலுக்கு வரும் எந்த நடிகர்களிடமும் எதிர்பார்க்க முடியாது . ஏனென்றால் திறமை, சமூக அறிவு, உழைப்பு, ஆற்றல் , காலம் அனைத்தும் ஒத்துழைத்தால் மட்டுமே சாத்தியப்படும் விஷயம் அது .
ஆனால் தனிக்கட்சி ஆரம்பித்த பிறகு எம் ஜி ஆர் தனது படங்களை தனது அரசியலுக்கு எப்படிப் பயன்படுத்திக் கொண்டார் , என்ன செய்தார் என்பதற்கு ஒப்பன் ரெக்கார்டு இருக்கிறது. எம் ஜி ஆர் செத்து நாற்பத்தி ஏழு ஆண்டுகள் ஆன நிலையில் அதைக் கூட செய்யத் தெரியாத செய்ய முடியாத செய்யப் புரியாத ஒருவரின் அரசியல் எப்படி வெற்றிகரமாக இருக்கும் ?
அப்படி என்ன செய்தார் எம் ஜி ஆர் ?
1972 அக்டோபர் 17 ஆம் தேதி கட்சி ஆரம்பிக்கிறார் எம் ஜி ஆர் . 20 ஆம் தேதி வெளியான படம் இதய வீணை . அது முன்னரே எடுத்து முடித்து ரிலீசுக்குத் தயாராக இருந்த படம். அது குடும்பக் கதை
அடுத்த படம்தான், கட்சி ஆரம்பித்து ஏழே மாதங்களில் வந்த உலகம் சுற்றும் வாலிபன் .
கதை , திரைக்கதை, வசனம், இயக்கம், அன்றைய அளவில் அதிநவீனம் , டெக்னிகல் எக்சலன்ஸ் , எம் ஜி ஆரின் மாஸ் மற்றும் கிளாசிகல் டைரக்ஷன் , அதன் மாபெரும் வெற்றி .. தனிக்கட்சி ஆரம்பித்த எம் ஜி ஆரை மாபெரும் அரசியல் தலைவராக நிலை நிறுத்திய படம் அது . அவரது தேர்தல் வெற்றிகளுக்கு அடித்தளம் போட்ட படம் அது .
கவனிக்க வேண்டும் .. மலைக்கள்ளன் முதல் உலகம் சுற்றும் வாலிபன் வரை அவர் போட்டது அடித்தளம்தான் .
அதன் பிறகு அவர் நடித்து வந்த படங்களின் பெயர்களைப் பாருங்கள்.. உரிமைக்குரல், நினைத்ததை முடிப்பவன் , நாளை நமதே, இதயக் கனி, நீதிக்குத் தலைவணங்கு, உழைக்கும் கரங்கள் , ஊருக்கு உழைப்பவன், இன்று போல் என்றும் வாழ்க , மீனவ நண்பன் ….
இந்தப் படங்களில் எல்லாமே வெற்றிப் படங்கள் அல்ல. காரணம் கட்சி ரீதியாக ரசிகர்கள் பிரிந்தது , கொள்கைப் பிரச்சாரத்தால் படத்தின் சுவாரஸ்யம் குறைவு என்று பல காரணங்கள் …
ஆனால் எம் ஜி ஆரைப் பின்பற்ற நினைப்போருக்கு இந்த ஒவ்வொரு படமும்… அதன் பெயர் முதற்கொண்டு எம் ஜி ஆர் என்ற அரசியல்வாதியை , சி எம் கேண்டிடேட்டை நம்பலாம் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய படங்கள் .
ஓட்டுப் போடும் போது, ” நாம் நடிகர் எம் ஜி ஆருக்கு ஓட்டுப் போடவில்லை . அரசியல்வாதி எம் ஜி ஆருக்கு ஓட்டுப் போடுகிறோம்” என்ற உணர்வைக் கொடுத்த படங்கள்
அதனாலதான் உலக அளவில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த முதல் சினிமா நடிகர் என்ற பெயர் அவருக்கு கிடைத்தது .
இப்போது அரசியல்வாதி விஜய் விவகாரத்துக்கு வருவோம் .
அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த விஜய் தனது அடுத்த படத்தை எப்படிப்பட்ட ஒன்றாகத் திட்டமிட்டு இருக்க வேண்டும்?
2023 அக்டோபர் முதல் வாரத்தில் G.O.A.T படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது . 2024 பிப்ரவரி 2 அன்று விஜய் கட்சியின் பெயரை அறிவிக்கிறார் . 2024 ஜூன் இறுதியில் G.O.A.T படப்பிடிப்பு முடிகிறது . அதாவது கட்சி துவங்கி ஐந்து மாதம் வரை G.O.A.T படத்தின் நேரடி படப்பிடிப்பே நடைபெறுகிறது .
கட்சி துவங்கியது எதிர்பாராமல் சடாரென்று நடந்த விஷயம் என்றே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம்
கட்சி ஆரம்பித்து ஐந்து மாதங்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் இந்த படத்தை நடிகர் விஜய்யின் படம் என்ற நிலையில் இருந்து அரசியல்வாதி விஜய்யின் படமாக மாற்ற என்ன முயற்சி எடுக்கப்பட்டது ?
ஜஸ்ட் ரெண்டே காட்சி …
ஆரம்பத்தில், ‘என் பெயரை சொல்லி தப்பானவர்கள் யாரும் சிபாரிசுக்கு வந்தால் அதே நான் செய்ய மாட்டேன்’ என்று சொல்ல பிரேம்ஜி மூலம் ஒரு காட்சி .
கடைசியில் அஜித் ரசிகர்களையும் கவரும்படி ஒரு காட்சி வைத்து , “பாத்துக்குங்கப்பா … அரசியல்வாதி விஜய்க்கு நடிகர் அஜித்தின் ரசிகர்களும் ஆதரவும் வேண்டும் என்று சொல்ல ஒரு காட்சி .
தனது சினிமா இடத்தை நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கையளிப்பது போன்ற ஒரு கொசுறு காட்சி .
அவ்வளவுதான் . இவற்றைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் …
விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு நடித்த தீவிரவாதப் படங்களின் கதையில் இப்போது விஜய் நடித்தால்
அதிலும் விஜயகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்குப் பதிமூன்று வருடம் முன்பு நடித்த ராஜதுரை படத்தின் கதையில் விஜய் இப்போது நடித்தால்..
அது அரசியல்வாதி விஜய்க்கு எப்படிப் பலன் தரும் ?
ஆனால் , உலகம் சுற்றும் வாலிபன் கதையை அதற்கு முன்பு தமிழ் சினிமாவில் யாரும் யோசித்து இருக்கக் கூட வாய்ப்புக் குறைவு .
இப்படியாக G.O.A.T படத்தில் விஜய் செய்ய வேண்டியதைத்தான் செய்யவில்லை . சரி போகட்டும் என்று நினைத்தால் அரசியல் தலைவராக ஆகி இருக்கும் நடிகர் அவர் படத்தில் செய்யக் கூடாததை எல்லாம் செய்து வைத்து இருக்கிறார் அதுதான் பேரதிர்ச்சி .
படத்தில் வரும் இளைய விஜய் , கடத்துகிறார் , தடுப்போரை அடிக்கிறார் , தீவிரவாத தடுப்புப் பிரிவில் உள்ள அதிகாரிகளை கொல்கிறார். சரி போகட்டும் என்றால்
தன்னை காதலித்த பெண்ணை படத்தின் ஒரு கதாநாயகியை தன்னோடு ஒரு பாட்டுக்கு ஆடியவரை கண்ணாடி பாட்டிலை உடைத்து கழுத்தைக் கரகரவென அறுத்து ரத்தம் பீய்ச்சி அடிக்க வைக்கிறார் . (இதுல அவர் அறுத்ததால சாகலன்னு யோக்கியமா ஒரு சமாளிப்பு வேற . நல்லவேளை கழுத்துப் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை பண்ணாருன்னு சொல்லாம விட்டாய்ங்க ) தங்கையை அடித்து நொறுக்குகிறார்
”ஹலோ அவரு வில்லன்ங்க .. கொடூர வில்லன் … ‘என்று கடந்து போகிற விஷயம் இல்லை இது .
ஒரு படத்தில் கேரக்டர் என்பதற்காக மறைந்த சிவாஜியும் , இனிமேல் கமலும் இந்த வரிசையில் விக்ரமும் தனுஷும் சூர்யாவும் ஏன் அஜீத்தும் என்ன வேண்டுமானால் செய்யலாம் . அதெல்லாம் அந்த கேரக்டருக்குப் போய் விடும் . கேரக்டரின் செயலாகப் பார்க்கப்படும்
ஆனால் ஒரு நடிகன் அரசியலுக்கு வந்து கட்சி ஆரம்பித்து அதன் பிறகு வரும் படங்களில் அவன் எந்த கேரக்டரில் என்ன செய்தாலும் அது அந்த நடிகர் கம் அரசியல் தலைவர் செய்வதாகவே பார்க்கப்படும் . அங்கே கேரக்டர் மறைந்து நடிகன் முகம்தான் முன்னாள் நிற்கும்
எனவே G.O.A.T படத்தில் கதாநாயகியின் கழுத்தை அறுப்பது வில்லன் அல்ல … விஜய். விஜய், விஜய்.. இது மட்டுமல்ல .. பாம் வைக்கிறேன் என்று மிரட்டுவது .. எல்லாரும் சாவாங்க என்று பேசுவது … தங்கையை அடித்து நொறுக்குவது எல்லாம் இந்தப் படத்தில் கேரக்டராகப் பார்க்கப் படாது . விஜய் செய்வதாகவே பார்க்கப்படும் . இதில் அந்த கேரக்டரின் பெயர் வேறு விஜய்யின் மகனின் பெயரான சஞ்சய் . என்னப்பா இதெல்லாம்?
”அப்போ, கட்சி ஆரம்பித்து அரசியல்வாதி ஆன பாவத்துக்கு ஒரு கதாநாயக நடிகர் வில்லனாக நடிக்கக் கூடாதா /” என்று கேட்கலாம் . நடிக்கலாம் . அதற்கு ஒரு பாரா மீட்டர் இருக்கு .
அந்தக் கேரக்டர் ஒரு கம்ப்ளீட் வில்லனாக இல்லாமல் ஆன்டி ஹீரோவுக்கு கொஞ்சம் அதிகமாக இருக்கலாம் . ஒரு நிலையில் திருந்துபவனாக – திருந்தி ஹீரோ கேரக்டருக்கு உதவுபவனாக – அந்த முயற்சியில் சாகிறவனாககே கூட இருக்கலாம் .
கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே கூட எம் ஜி ஆரும் சிவாஜியும் அவ்வளவு ஏன் அரசியலுக்கு வரும் ஆசையே இல்லாத ஹீரோக்களும் கூட அப்படித்தான் நடிப்பார்கள் நடித்தார்கள்
அதுவும் வில்லனாக வரும் எம் ஜி ஆர், மற்ற சில படங்களின் ஹீரோவை விடவும் சிறந்த மனிதராக இருப்பார் .
உதாரணமாக நினைத்ததை முடிப்பவன் படத்தில் வரும் வில்லன் எம் ஜி ஆர் முன்பு ஒருவர் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்க, அந்த வில்லன் எம் ஜ ஆர் சிகரெட் பிடிக்க முயலும் நபரை ஓங்கி அறைந்து , ”இந்த ரஞ்சித் முன்னாடி யாரும் சிகரெட் பிடிக்கக் கூடாது. அண்டர்ஸ்டேன்ட்?” என்பார் .
தவிர ஒரு படத்தில் வில்லன் கேரக்டரிலும் ஹீரோவையே டபுள் ஆக்ட் ஆக நடிக்க வைக்கலாம் என்றால் …
திரைக்கதையின் முடிவில் அந்த இரு வேட வில்லன் ஹீரோ திருந்துகிறானா இல்லை திருந்தாமலேயே கதை முடிகிறதா என்று பார்ப்பார்கள் . திருந்துகிறான் என்றால் அந்த ஹீரோ நடிகரே அந்த வில்லன் கேரக்டரில் நடிப்பார். திருந்த மாட்டான் எனில் அதற்கு வேறு நடிகரைப் போட்டு விடுவார்கள். காரணம் ஒரு ஹீரோ வில்லனாக நடிக்கும்போது அங்கே கேரக்டரை விட நடிகன்தான் முக்கியம் என்று ஆகும் என்பது தெளிவானவர்களுக்குத் தெரியும்
திருந்துகிறான் என்றால் அது நீரும் நெருப்பும், குடியிருந்த கோவில் , நினைத்ததை முடிப்பவன் என்று எம் ஜி ஆர் வகையறாவில் அதாவது அரசியலுக்கு வந்த நடிகருக்கு ஏற்ற வகையறாவில் வரும்
திருந்தவில்லை என்றால் அது தங்கப்பதக்கம் , வால்டர் வெற்றிவேல் என்று தீவிர அரசியலை விட நடிப்புக்கு முக்கியத்துவம் தருகிற வகையறாவில் போய்விடும் .
ஆனால் G.O.A.T படத்தில் விஜய் செய்திருப்பது ரெண்டுங்கெட்டான் வேலை செய்திருக்கக் கூடாத வேலை சொல்லப் போனால் ஆபத்தான வேலை. அரசியல் கட்சி ஆரம்பித்து இருக்கும் கதாநாயக நடிகர் செய்திருக்கவே கூடாத வேலை அது . நடிக்கக் கூடாத கேரக்டர் மற்றும் காட்சிகள் அவை
அதுவும் தங்கையை கொலைவெறியோடு தாக்கும் காட்சி எல்லாம் அநியாயம் .
இதில் என்ன கொடுமை என்றால் ,
ஹீரோவாக நிலை நின்ற பிறகு விஜய் நெகடிவ் கேரக்டர்களில் நடித்த பிரியமுடன், பிரியமானவளே , கண்ணுக்குள் நிலவு , முதன் முதலாக இரட்டை வேடத்தில் வில்லனாகவும் நடித்த அழகிய தமிழ் மகன் போன்ற படங்களில் கூட இவ்வளவு கொடூரமான காட்சிகள் இல்லை. . அப்போது எல்லாம் பார்த்துப் பார்த்து நடித்து விட்டு, இப்போது அரசியல்வாதி ஆனபிறகு இப்படி நடிப்பது தனது தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும் செயல் அன்றி வேறு என்ன?
”நீங்க சொல்றது எல்லாம் அந்தக் காலம் . வில்லன் கேரக்டர் என்ன பண்ணா என்ன ? ஹீரோ கேரக்டர் எப்படி இருக்கு ? அதைப் பாருங்க” என்று யாராவது சொல்லக் கூடும்
அதிலும்தான் வில்லங்கம் .
ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்த நிலையில் அடுத்த படம் கொடுக்கும் நடிகருக்கு, அந்த படத்தின் காட்சியில் பார்ட்டி ( கட்சி ) கேம்பெய்ன் ( பரப்புரைப் பயணம்) போன்றவை எல்லாம் எவ்வளவு முக்கியமான் வார்த்தைகள் !
புதிதாகத் திறக்கும் மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் பொங்கி எழுந்து போராட்டம் நடத்தும் நிலையில் , ஒரு அரசியல்வாதி நடிகர் பார்ட்டி என்ற வார்த்தையை சரக்குப் பார்ட்டியோடும் கேம்பெய்ன் என்ற வார்த்தையை ஷாம்பெய்னோடும் சம்மந்தப்படுத்தி பேசலாமா? அதுவும் வில்லன் விஜய் இல்லை ஹீரோ விஜய் . அதுவும் லியோ படத்தின் பாட்டில் சாராயம் குறித்த வரிகள் விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் ?
இதே ஹீரோ எம் ஜி ஆர் எப்படி இருப்பார் ?
வேற வழி இல்லை . மீண்டும் உலகம் சுற்றும் வாலிபன் தான்.
புத்தர் கோவிலுக்குள் வில்லன் நம்பியார் எம் ஜி ஆரை அடிப்பார் . பதிலுக்கு எம் ஜி ஆர் அடிகளை எல்லாம் வாங்கியபடி வெளியே வந்து அதன் பிறகு நம்பியாரை அடிப்பார்
சண்டை முடிந்த பிறகு ஒரு புத்த பிட்சு எம் ஜி ஆரிடம் , ” அவனை இப்படி அடித்து துன்புறுத்துவது நியாயமா ?” என்று கேட்பார்
அதற்கு எம் ஜி ஆர் , ” புத்தர் முன்பு அடிக்கவில்லை . வெளியே வந்துதான் அடித்தேன் என்பார்
அதற்கு அந்த புத்த பிட்சு , ” எங்கே என்றால் என்ன ? அடிப்பது நியாயமா?” என்று கேட்பார் . அதற்கு எம் ஜி ஆர் பொறுப்பாக விளக்கம் சொல்வார் .
இத்தனைக்கும் அந்த புத்த பிட்சு கேரக்டர் ஒரே சீனில் மட்டும் வரும் கேரக்டர் . நடித்தவரும் பெரிய முக்கிய நடிகர் இல்லை, . எம் ஜி ஆரைக் கேள்வி கேட்கும் கேரக்டர் என்பதால் அதில் நடிக்க சிவாஜியையோ ஜெமினியையோ கூப்பிடவில்லை
தவிர அந்த படத்துக்கு தயாரிப்பாளர் , ஹீரோ, இயக்குனர் மூன்றுமே எம்ஜிஆர் தான். அவர் நினைத்து இருந்தால் அந்தக் காட்சியை எழுதாமலோ எடுக்காமலோ எடுத்த பின்பு கடைசியாக நீக்கியோ கூட இருக்கலாம் .
ஆனால் அந்தக் காட்சி மூலம் நான் ஆட்சிக்கு வந்தால் நான் செய்வது தவறு என்று தோன்றினால் ஒரு சாதாரண மனிதன் கூட என்னைக் கேள்வி கேட்கலாம் என்ற செய்தியை மக்களுக்குச் சொன்னார் . அதனால்தான் அவர் அரசியலில் ஜெயித்தார் .
அம்பது வருடம் முன்பே அவ்வளவு SMARTNESS தேவை என்றால் இப்போது எவ்வளவு வேண்டும்?
அப்படி இருக்க ஹீரோ விஜய்யே கட்சியையும் பிரச்சாரத்தையும் மதுவோடு ஒப்பிடுவது எப்படி அரசியல் வெற்றிக்கு பலன் தரும் .?
“சரி சார் .. ஆனா இதுதான் கதை . விஜய் இரண்டு வேடத்தில்தான் நடிப்பார் . அதை மாற்ற முடியாது என்றால் கூட தப்பில்லை . அதற்கேற்ற திரைக்கதை செய்து இதை அரசியல்வாதி விஜய்க்கான படமாக மாற்றி இருக்க முடியும் .
எப்படி ?
காணாமல் போன மகன் விஜய்யை பல வருடங்கள் கழித்து அயல்நாட்டில் பார்க்கிறார் அப்பா விஜய் . அவனுக்கு தமிழே தெரியவில்லை. தமிழ்நாடே தெரியவில்லை. தவிர ஒரு மோசமான கூட்டத்தின் கையாளாக சமூக விரோதியாக இருக்கிறான் . அங்கிருந்து வந்தால் அவன் உயிருக்கே ஆபத்து என்ற நிலைமை
அவனுக்கு அவனை யாரென்று புரியவைத்து…. அவன் தவறுகள் செய்வதை நிறுத்தி… மீட்டுக் கொண்டு வர , அப்பா விஜய் செய்யும் முயற்சிகள் என்ன ? எப்படி அந்த முயற்சியில் வென்று , அவனோடு சேர்ந்து அவனுக்கான ஆபத்துகளை முறியடித்து அவனை மீட்டுக் கொண்டு வந்து மனைவி முன் நிறுத்தினார் ? இதோடு அரசியலுக்கு சம்மந்தப்பட்ட ஒரு தமிழ் நாட்டு சமூக விஷயம் என்று இந்தப் படம் முடிந்து இருந்தால் …
இதே G.O.A.T படம் அரசியல்வாதி விஜய்க்கு உதவும் படமாக மாறி இருக்கும்
(அப்போதும் அந்த மகன் விஜய் தனது காதலியின் கழுத்தை அறுப்பது தங்கையின் குறுக்கை உடைப்பது போன்ற காட்சிகளையும் ஹீரோ விஜய்யே சொல்லும்’ பார்ட்டி- பார்ட்டி,’ ‘கேம்பெய்ன்- ஷாம்பெய்ன்’ கூத்துகளை நீக்கி இருந்தால் …
இந்த G.O.A.T படம் என்ற படத்தின் கதையின் காப்பி என்று எல்லோரும் சொல்கிறார்களோ அந்த ராஜதுரை படத்தில் கூட வில்லன் விஜயகாந்த் கடைசியில் உண்மை உணர்ந்து அப்பா விஜயகாந்துக்கு \ உதவி செய்து, வில்லனை வீழ்த்துவதாகத்தான் படம் முடியும்
ஏன் அதே கிளைமாக்ஸ்தான் வைக்கணுமா? வித்தியாசமா யோசிக்கக் கூடாதா என்றால் , அது வில்லங்கமாக ஆகி விடக் கூடாது . அப்போ இந்த கதையே அரசியல்வாதி விஜய்க்கு ஏற்ற கதையோ படமோ அல்ல . தட்ஸ் ஆல்
எல்லார் சரி .. இதெல்லாம் அந்தக் கால ஸ்ட்ராட்டஜிகள். இப்போ தேவை இல்லை என்று எல்லாம் சொல்ல முடியாது .
இப்பவும் அடிமைப் பெண் தான் பாகுபலியா ஓடுது .
கர்ணனின் நவீன விசுவாசம்தான் கருடன் படமாக கல்லா கட்டுது .
படகோட்டியின் இன்னொரு வெர்ஷன் தான் வாழையாக நெகிழ வைக்கிறது .
கருவியும் கலரும் மாறலாம் . உணர்வும் அறிவும் மாறவில்லை
இப்போது கூட பாருங்கள் .
நிச்சயமாக வாரிசை விட G.O.A.T மோசமான படம் இல்லை . ஆனால் ஒப்பீட்டு அளவில் அதிக தியேட்டர்கள், மற்றும் செயல் திட்டம் இருந்தும் லியோ , வாரிசு போன்ற படங்களின் முதல் நாள் வசூலை G.O.A.T மிஞ்சவில்லை . ஏன் ?
கட்சி ஆரம்பித்த பிறகு கருத்தியல் ரீதியாக விஜய்யை விட்டு விலக வேண்டியவர்கள் விலக ஆரம்பித்து விட்டார்கள் . அதாவது எல்லோரும் அவரை அரசியல்வாதியாகப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் விஜய்யும் அவருக்கு வேண்டியவர்களும் அவரை ஒரு முழுமையான அரசியல்வாதியாக பார்க்க வேண்டிய விதத்தில் பார்க்கிறார்களா ? என்றால் இல்லை என்பதற்கான பதில்தான் இந்த G.O.A.T படம்
காரணம் என்றால் அரசியல்வாதி விஜய்க்கு சரியான ஆலோசனை சொல்லும் தகுதி, அனுபவம், ஆற்றல், மற்றும் திறனோடு விஜய்யைச் சுற்றி ஒருவர் கூட இல்லை . சும்மா அவரை சமாதானப்படுத்தி அல்லது திருப்திப்படுத்தி சமாளிக்கும் ஆட்களே இருக்கிறார்கள் .
அவரை உரிமை மற்றும் அக்கறையோடு கேள்வி கேட்க , தவறுகளை எடுத்துச் சொல்ல — முன்கூட்டியே நிகழாமல் பார்த்துக் கொள்ள அங்கே யாரும் இல்லை
இது ரொம்ப ஆபத்தான நிலைமை
உண்மைகள் இவ்வளவு பெரிதாக நீளமாக இருக்கிறது .
இப்போது சொல்லுங்கள்
G.O.A.T படம் நடிகர் விஜய்க்கு ஓகே என்றே வைத்துக் கொள்வோம் அரசியல்வாதி விஜய்க்கு ஓகேவா?