ஆதிலட்சுமி பிலிம்ஸ் சார்பில் செல்வம் மற்றும் ராஜா இருவரும் தயாரிக்க, மு.களஞ்சியத்திடம் துணை இயக்குனராக பணி புரிந்த வேலுதாஸ் ஞானசம்மந்தம் (ஒரே ஆள்தான் பாஸ்!) இயக்கும் படம் ‘ஆக்கம்’.
ஒருவன் எங்கு பிறக்கிறான் என்பதை வைத்து அவனது வாழ்க்கை நிர்ணயிக்கப்படுவது இல்லை. அவன் எந்த சூழலில் எப்படிப்பட்ட மனிதர்கள் மத்தியில் எப்படி வளர்கிறான் என்பதை வைத்தே அவனது வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறது என்று சொல்ல வரும் படமாம் இது. (நல்லா சொல்லுங்க )
சதீஸ் ராவண் என்பவர் கதாநாயகனாக அறிமுகம் ஆக, சில படங்களில் நடித்த அனுபவம் பெற்ற வைதேகி கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், ஓர் இடைவேளைக்குப் பிறகு நடிகர் ரஞ்சித் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். டான்ஸ் மாஸ்டர் தருண்குமாரும் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடிக்கிறார்.
சென்னையில் வாழ்ந்து முடித்த ஒரு மனிதன் மற்றும் அவனுக்கு நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாரிப்பாளர் செல்வம் உருவாக்கிய கதையை இயக்குகிறாராம் இயக்குனர் வேலுதாஸ் ஞானசம்மந்தம் . ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். ஜி.ஏ.சிவசந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கனெவே களஞ்சியம் இயக்கத்தில் உருவான ‘கருங்காலி’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார்.
“மெட்ராஸ் படத்தில் ஒரு பகுதி சென்னையின் கதையை பார்த்து இருப்பீர்கள் . ஆனால் எங்கள் படம் ஒட்டு மொத்த வட சென்னையை பிரதிபலிக்கும். முழுக்க முழுக்க வடசென்னையில் நடக்கும் கதை என்பதால் ராயபுரம், புளியாந்தோப்பு, வியாசர்பாடி, எண்ணூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம் . வட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் இரண்டாயிரம் பேரை படத்தில் நடிக்க வைத்து இருக்கிறோம்.ஹீரோவுக்கு ஒரு அறிமுக பாடல் வச்சுருக்கோம். ஆனால் அது முருகக் கடவுளை பற்றிய பாட்டு.
படத்தில் கதாநாயகி இருக்கிறார் . ஆனால் காதல் இல்லை . ஏன்னா நம்ம ஹீரோ பணம் இருந்தா யாருகிட்ட வேண்ணாலும் பழகுவான் , இல்லன்னா தூக்கிப் போட்டுட்டு வந்துடுவான் . அவனுக்கு எப்படி காதல் வரும் ?” என்கிறார் இயக்குனர் . நியாயமான கேள்வி .
இதோ… தலைப்பில் உள்ள சமாச்சாரத்துக்கு வந்தாச்சு .
இந்தப் படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் இதுவரை நடிக்காத ஒரு கேரக்டரில் நடித்து இருக்கிறாராம் . பிரபல ரவுடியாக ஜெயிலுக்குள் இருந்து கொண்டு பல ரவுடிகளை உருவாக்கும் வெகு சீரியசான ரவுடியாக நடித்து இருக்கிறாராம். அவருக்கு படத்தில் காமெடியே கிடையாதாம்.
அப்போ… அந்த கேரக்டரில் பவர் ஸ்டார்….ச்சும்மா வாழ்ந்திருப்பாரே !