சேத்து மான் @ விமர்சனம்

நீலம் புரடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிக்க மாணிக்கம், மாஸ்டர் அஸ்வின், பிரசன்னா , குமார் , சாவித்திரி, சுருளி, அண்ணாமலை, நாகேந்திரன் நடிப்பில், எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை வசனத்தில், திரைக்கதை எழுதி, தமிழ் இயக்கி இருக்கும் படம் சேத்துமான் (டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் வேறு ; இவர் வேறு).

மேற்குத் தமிழகப் பகுதியில் ஆதிக்க சாதியினரும் அவர்களின் எடுபிடிகளாக அடிமைகளாக தாழ்த்தப்பட்ட மக்களும் வாழும் ஓர் ஊர். சாதி வெறி காரணமாக தன் மகளும் மருமகளும் சாகக் காரணமான அதே ஆண்ட சாதிக்கே சேவகம் செய்யும் பெரியவர் பூச்சியப்பனின் ஒரே நோக்கம் தாய், தந்தையை இழந்த தனது பேரனை படிக்க வைத்து அரசாங்க  உத்தியோகத்துக்கு அனுப்பி, அவன் ‘குண்டு ஊசியைக் கீழே போட்டால் கூட குனிந்த எடுக்க அஞ்சாறு ஆள் உள்ள பதவி’ க்கு அனுப்புவதுதான் . 

ஊரில் இருந்து வெகு தூரத்தில் உள்ள தனது ஓலைக் குடிசையில் இருந்து பேரனை பள்ளிக்குக் கொண்டு போவதே தாத்தாவுக்கு பெரிய வேலையாக இருக்க, அந்தப் பள்ளிக் கூடமும் போதிய மாணவர்கள் இல்லாத காரணத்தால் மூடப்படும் என்ற நிலை உருவாக , அதுவே தாத்தாவுக்கு ஒரு பெரிய வருத்தமாக இருக்கிறது. 

இந்த நிலையில் ஊரில் ஒரே ஆதிக்க சாதி நபர்களுக்கு  உடம்பில் உள்ள மூலச் சூட்டைக் குறைத்து குளிர்ச்சியை ஏற்படுத்த சேத்துமான் கறி சாப்பிட ஆசை வருகிறது . சேத்துமான் என்றால் பன்றி. 

”பீத் தின்கிற பன்னியை திங்கறதும் ஒண்ணுதான் பீயைத் திங்கறதும் ஒண்ணுதான் ” என்பது உட்பட மனைவியின் பல வசவுகளை மீறி ஆதிக்கசாதிப் பண்ணாடி (நிலக் கிழார் என்று பொருள்)  ஒருவர் சேத்து மான் கறி திங்க ஆள் திரட்ட, அதில் அந்த நபரின் பகையாளிப் பங்காளி ஒருவனும் வந்து சேர, 

பன்றியை உரித்து வெட்டி சமைத்துத் தரும் வேலைக்கு பூச்சியப்பனும் அவரது பேரனும் போக , ஆதிக்க சாதிகளின் சில்லுண்டிப் பகை, அவர்களது சந்தோசம், சுயநலச் செயல்கள் கூட தாழ்த்தபட்ட மக்களின்  வாழ்வை எப்படிக் குலைத்துப் போடுகிறது என்பதே சோத்துமான். 

எளிமையான, நடுநிலையான , உயிர்ப்புள்ள அற்புதமான படம் . 

அமைதியாக அசையாமல் பின்னால் போய் சட்டென்று பட்டாம் பூச்சியைப் பிடித்து விடும் கெட்டிக்காரச் சிறுவன் போல நிலம், மொழி, இயல்பு, பின்புலம் எல்லாவாற்றையும் அள்ளிப் பிடித்து படத்தை இயக்கி இருக்கும் தமிழ் நம்பிக்கை நட்சத்திரம். வாழ்த்துப் பூங்கொத்து . 

பெருமாள் முருகனின் கதையும் வசனமும் நம்மையும் கதாபாத்திரங்களில் ஒருவராக மாற்றுகிறது 

மண் சார்ந்த முகங்கள் அவர்களது குரல்கள் அந்தத் தொனிகள் நாம் பார்ப்பது சினிமா அல்ல நிஜ வாழ்க்கை என்ற உணர்வை ஏற்படுத்துகிறது .

பூச்சியப்பனின் பேரனைப் பார்த்துக் கொள்ளும் பெண்ணின் ”பூச்சியப்பா ஆ  ஆ ஆ … ”என்ற மூக்கால் பேசும் குரலும் , நீட்டல் தொனியும் காற்றைக் கிழித்து வரும் அந்த கணீர்த் தன்மையும் இன்னும் காதுக்குள் !

தாத்தாவும் பேரனும் நடந்து போக சட்டென்று தாத்தா ஓட, ‘ ஏ… ஏ… ஏ.. ஏய்ய்ய்யய்ய்… ”என்று குறும்பாக கத்தியபடி பேரன் ஓடும் அந்த மண் சார்ந்த தொனியை  மீண்டும் தமிழ் சினிமாவில் கேட்பது நிஜமாகவே கொடுப்பினை . 
படத்தின் மிகப்பெரிய பலம் அதன் கருத்தாண்மை . தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை படம் சொன்னாலும் எந்த மாய்மாலமோ நீலிக் கண்ணீரோ இல்லாமல் சொல்லும் விதம் அனைவரின் மனசாட்சியையும் தட்டி எழுப்பும் . 

அதெப்படி பன்றிக் கறி தின்பதை கேவலமாகப் பேசுவது என்ற தரப்பின் பக்கம் எல்லாம் நிக்காமல் , அதை ஒரு ஆதிக்க சாதிப் பெண் அவள்  எண்ணப்படி தூய்மை என்ற அடிப்படையில் அதை எப்படிப் பார்க்கிறாள் என்பதையும் படம் பேசுகிறது . 

பன்றிக்கு மனிதன் என்ன செய்கிறானோ அதுவே மனிதனுக்கும் நடக்கிறது என்ற நுண் கருத்தியலும் அபாரம்.

கையில் சொந்தத்  தொழில் இருந்தா எவனுக்கும் பயப்படத் தேவை இல்லை என்று சொல்லிக் கொண்டு கெத்தாக வாழும் பன்றி வளர்ப்பவரின் கதாபாத்திரம் அருமை. அதே பிசினச பேசும்போது அவர் பண்ணாடியிடம் பம்முவது வியாபார தந்திரம் பூச்சியப்பனாக வரும் மாணிக்கம், பேரனாக வரும் மாஸ்டர் அஸ்வின் , சேத்து மான் கறிக்கு ஆள் சேத்து சேத்து ஏற்பாடு செய்யும் பண்ணாடியாக நடித்து இருக்கும் பிரசன்னா, அவரது மனைவியாக வரும் சாவித்திரி,  பூச்சியப்பா ஆ  ஆ ஆ .. என்று நீட்டி அழைக்கும் பெண்மணி , பன்றி வளர்ப்பவராக வரும் குமார் ஆகியோர் அற்புதமாக நடித்துள்ளனர். 

பிரதீப் காளி ராஜாவின் ஒளிப்பதிவு, பிந்து மாலினியின் இசை , சி எஸ் பிரேம்குமாரின் படத் தொகுப்பு யாவும் சிறப்பு.

அதீதமாக நீளும் சில காட்சிகள் , பெரும்பாலும் யூகிக்க முடிந்த விஷயங்கள் ஆகயவை குறையாகப் பட்டாலும்,  சேத்து மான் கதையும் அது சொல்லப்பட்ட பக்குவமும் அட்டகாசமானது . 

சேத்து மான் ….. கலை மான் !

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *