குருநாத் சலசானி தயாரிப்பில் தான்யா, சுபாஷ் சந்திர போஸ், பிரபாகரன் , நாகி நீடு நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி கு.கணேசன் இயக்கி இருக்கும் படம் 18- 05- 2009.
மண்ணின் விடுதலைக்காக நியாயமாக ஈழத்தில் போராடிய விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழர்களை ,
சிங்கள காட்டுமிராண்டிகளின் பேரினவாதம் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக அழித்து வந்ததன் உச்சமாக,
மே 17 அன்று ஒரே நாளில் நாற்பதாயிரம் அப்பாவி தமிழர்களை சுட்டுக் கொன்றது இலங்கையின் காட்டு மிராண்டி சிங்கள ராணுவம் .
அதே நேரம் …
புலிகளின் ராணுவத்தில் சேர முயன்று , இதய நோய் இருப்பதால், அக்கறை காரணமாக விடுதலைப் புலி அமைப்பால் நிராகரிக்கப்பட்டு,
புலிகளின் ஊடகப் பிரிவில் சேர்ந்து செய்து வாசித்து பாடல்கள் எழுதி , கலைப் பணியாற்றி ,
விடுதலைப் புலி ஒருவரை திருமணம் செய்து கொண்டு , ஒரு குழந்தைக்கு தாயாகி,
இலங்கை ராணுவம் மனிதாபிமானம் இன்று கொத்துக் கொத்தாக பாஸ்பரஸ் போன்ற பயன்படுத்தக் கூடாத,
கொடிய குண்டுகளைப் போட்டு மக்களைக் கொன்று ,மருந்துகளை , மண்ணெண்ணையை , மின்சாரத்தை தடை செய்த நிலையில்,
குழந்தைக்கு பால் பவுடர் வாங்க முடியாமல் கஷ்டப்பட்டு , குழந்தையை சாகக் கொடுத்து ,
விடுதலைப் புலியாக இருந்த கணவன் இறக்க, சிங்கள ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு ,
“தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருகிறோம்” என்று சிங்கள ராணுவம் ஆசை காட்டியபோதும் சக புலிகளைக் காட்டிக் கொடுக்க மறுத்து ,
மே 17 மாலை முதல் மே 18- காலை வரை அடுத்ததடுத்து பலப்பல சிங்கள ராணுவ வீரர்களால் வன்புணர்வு செய்யப்பட்டு சாப்பாடு தண்ணீர் கூட தரப்படாமல்
அணுஅணுவாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட செல்வி என்ற தமிழ்ச் செல்வியின் ரத்தக் கண்ணீர்க் கதையே இந்தப் படம் .
செல்வியாக தான்யா !
விடுதலைப் புலிகள் ஆயுதம் எடுத்ததன் நியாயம் , சிங்களர்கள் தமிழர்களின் கல்வி மறுத்து செய்த கொடுமைகள், பாலியல் பலாத்காரங்கள், குழந்தைகளைக் கொன்றது …..
புலிகள் அமைப்பு தமிழ் மக்களுக்கு பாதுகாப்பாக இருந்த விதம் ….
கொடிய விலங்குள்ள காடுகளில் பயன்படுத்தக் கூட தடை செய்த பாஸ்பரஸ் மற்றும் கந்தகக் குண்டுகளை தமிழ் மக்கள் வாழும் பகுதியில்,
சிங்கள ராணுவம் போட்டு மனித உடம்புகளை அலற விட்டு , கதற விட்டு சில்லு சில்லாக சிதற வைத்தது ….
பகை நாடுகள் என்று சொல்லிக் கொண்டு வருடக் கணக்கில் பல்லாயிரம் கோடிகளை போருக்காக செலவழிக்கும் இந்தியா ,
அதே பகை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீன ராணுவங்களோடு கள்ள உறவு வைத்து போய் தமிழர்களை கொன்றது…
புலிகளுக்கு ஆயுதம் ஏந்தி வந்த கப்பல்கள் அழிக்கப் பட்டதன் பின்னால் இருக்கும் நம்மூர் சாதிகள்,
இந்திய ராணுவ ஆலோசகராக இருந்த எம் கே நாராயணன் கொடுத்த ஆலோசனைப்படி சரணடையும் தமிழ் மக்களுக்கு பொது மன்னிப்பு தருகிறோம் என்று நம்ப வைத்து,
அப்படி நம்பி சரண் அடைந்த தமிழர்களை ஒவ்வொருவராய் சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்ற கொடுமை ..
‘புலிகள் ஆயுதத்தை கீழே போட்டால்தான் அப்பாவி மக்களைக் கொள்வதை நிறுத்துவோம்’ என்று இலங்கை ராணுவம் கூறியதையும்,
அதற்கு இந்தியா கொடுத்த அழுத்தத்தையும் நம்பி புலிகள் ஆயுதத்தை கீழே போட அதன் பின்னரே அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் நிர்மூலம் செய்தது என்ற உண்மை ..
நியாயமாக போர் புரிந்தால் 300 ஆண்டுகள் ஆனாலும் விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது என்று ஒரு சிங்கள ராணுவ அதிகாரியே சொன்ன நிஜம் …..
இலங்கை ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம் …
இவற்றை சொல்கிறது படம் .
குண்டு வீசப்படும் காட்சிகள் கண்களைக் குளமாக்குகின்றன . இடை இடையே நிஜத்தில் நடந்த போர்க்களக் கதறல்கள் காட்டப்படும்போது ,
சில்லு சில்லாக சிதறிப் போகிறோம் .
செல்வியாக தான்யா நன்றாக நடித்துள்ளார் . புலிகளாக வரும் இளைஞர்கள் அருமை!
போர்க்களத்தின் போது , ஒரு ஈழப் பெண் மணி ” உலகத்துல ஒரு நாடு கூடவா நம்மளைக் காப்பாத்த வராது ? வரும் .
அப்படியே வராட்டியும் தமிழ்நாட்டு சொந்தங்கள் நம்மை அழிய விட்டுட மாட்டாங்கம்மா ” என்று ஒரு பெண் கூறுவதைக் கேட்கும்போது,
கூனிக் குறுகிப் போகிறது மனசு .
அந்த ரஜினி வசனம்… இன்றும் நமக்கான எச்சரிக்கை
இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற படங்களுக்கு எல்லாம் திரையீடு அனுமதி தந்து கிட்டத்தட்ட மாமா வேலை பார்க்கும் நம்ம செக்ஸார் ( எழுத்துப் பிழை அல்ல !)….
இன்னும கூட புலிகள் , விடுதலைப் புலி, பிரபாகரன். LTTE போன்ற வார்த்தைகளை அனுமதிக்க மறுப்பதையும் , LTTE கொடியை மறைப்பதையும் ,
சிங்கள , ஸ்ரீலங்கா போன்ற வார்த்தைகளைக் கூட கொங்கள என்றும் ஆரிலங்கா என்றும் மாற்றி இருக்கும் கொடுமையை என்ன சொல்லி திட்ட ?
இந்த பொழப்புக்கு ….. !
மொத்தத்தில் 18- 05- 2009 ….
சிங்கள காட்டுமிராண்டித்தனத்தின் இந்திய வஞ்சகத்தின் தமிழக உணர்வு மழுங்களின் கண்ணீர் கலந்த ரத்த சாட்சி !