நடிகர் சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் வழங்க டிவைன் புரடக்ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் வெளினேனி தயாரிப்பில் சக்தி பிலிம் பேக்டரியின் சிக்னேச்சர் வெளியீடாக , சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், நிவேதிதா சதீஷ் நடிப்பில் , பூவரசம் பீப்பி படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் எழுதி இயக்கி வெளிவந்து இருக்கும் படம் சில்லுக்கருப்பட்டி .
அது ஏன் சில்லுக் கருப்பட்டி? சில்லுக்கருப்பட்டி ஓலைப் பெட்டியில் சின்னச் சின்னதாக பல பனைக் கருபட்டிதுண்டுகள் சிறப்பான சுவையாக இருக்கும் .
மிக உயர் பொருளாதாரக் குடும்பத்தைச் சேர்ந்த வீடு ஒன்றில் இருந்து தினம் வரும் குப்பைகளை – குப்பைமலை மேட்டில் இருந்து சேமிக்கும் ஒரு சிறுவனுக்கும் (ராகுல்) , அந்த பணக்கார வீட்டுச் சிறுமிக்கும் ( சாரா அர்ஜுன்) ஏற்படும் நட்பு.. அவள் தவற விட்ட வைர மோதிரத்தை அவன் குப்பை மேட்டில் இருந்து கொண்டு வந்து கொடுக்கும் நிகழ்வு எனப் போகும் ஒரு கதை …
மேட்ரிமோனியல் மூலம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் , தனக்கு கேன்சர் வந்த காரணத்தால் நின்று போக, பிழைப்போமா இல்லையா என்ற குழப்பத்தில் இருக்கும் ஐ டி கம்பெனி இளைஞனுக்கு ( மணிகண்டன்) ஓலா டாக்சியில் ஷேரிங் பயணியாக வந்த பெண்ணோடு (நிவேதிதா) ஏற்படும் ஈர்ப்பும் அதன் விளைவும் என்று ஒரு கதை ..
காதலித்தவன் வேறு பெண்ணை மணந்து கொண்டு போன காரணத்தால் திருமணமே செய்து கொள்ளாத ஒரு மூதாட்டிக்கும்(லீலா தாம்சன்) , மனைவியை இழந்த ஒரு முதியவருக்கும் (ஸ்ரீராம்) ஏற்படும் காதல் …
வசதி வாய்ப்புக்கு எந்த குறையும் இல்லாத போதும் தன்னை கணவன் கவனித்து காது கொடுத்து ரசிக்கவில்லையே என்று மருகும் ஒரு மனைவிக்கும் (சுனைனா) , ‘எல்லா வசதியும் பண்ணி கொடுத்துட்டு குடும்பத்துக்குத்தானே உழைக்கிறேன் அப்புறம் என்ன ?’ என்று எண்ணும் கணவனுக்கும் (சமுத்திரக்கனி) ஏற்படும் பிரச்னையை அலெக்சா டாக்கிங் மெஷின் ஒன்று தீர்க்க முயலும் கதை …
என்ற நான்கு கதைகளே இந்தப் படம் .
படமாக்கலில் அசத்துகிறார் இயக்குனர் ஹலீதா ஷமீம் . நல்ல இயக்கம் . கதபாத்திங்களில் வாழ் நிலை, சூழ் நிலை, மன நிலை , பக்குவம் இவற்றுக்கு பொருத்தமான அட்டகாசமான வசனங்கள் . சபாஷ்
டர்ட்டில் வாக் விசயத்தை வெளிச்சப்படுத்தியிருப்பதற்கு பாராட்டுக்கள் .
அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், , யாமினி யக்ன மூர்த்தி என்று கதைக்கு ஒன்றாக நான்கு ஒளிப்பதிவாளர்கள் . சிறப்பாக செய்துள்ளார்கள் .
பிரதீப் குமாரின் இசை சும்மா வாசித்துத் தள்ளிக் கொண்டே இருக்கிறார் . குறிப்பாக சமுத்திரக் கனி – சுனைனா கதையில் மாண்டேஜ் காட்சிகளில் ரொம்ப நேரம் ஒரே நோட் ஓடிக் கொண்டே இருக்கிறது .
நடிப்பில் மணி கண்டன், சமுத்திரக்கனி, சுனைனா , லீலா தாமஸ் , ராகுல் நிவேதா சதீஷ் , சாரா சிறப்பு .
இப்போதே வீட்டில் முதியவர்களுக்கும் பெற்றவர்களுக்கும் மரியாதை இல்லை .. முக்கியத்துவம் இல்லை .. பிரச்னைகளை தீர்க்கவும் பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்காமல் பொம்மை வைத்துக் கொள்ளுங்கள் என்றால் நிலைமை இன்னும் மோசமாக அல்லவா போகும் ?
சொல்லப் படாத கதைகளை சொல்லி இருப்பது சிறப்பு