ஸ்கை மேஜிக் பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்யலக்ஷ்மி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் பாக்யலக்ஷ்மி ஆகியோர் தயாரிக்க, அரவிந்தன் சிவஞானம் . நர்வினி டெரி , லீலாவதி, பிரேம், தீபச் செல்வன், தனஞ்செயன், பாலா, மதுமிதா, சிறுமி டென்சிகா நடிப்பில் ,
கதை திரைக்கதை எழுதி ரஞ்சித் ஜோசப் இயக்கி, Eelam play என்ற ஓ.டி.டி தளத்தில் (https://eelamplay.com/ta ) வெளியாகி இருக்கும் ஈழத் தமிழ்த் திரைப்படம் சினம் கொள்
அயோக்கிய அராஜக சிங்களத்துக்கு ஆதரவாக , பன்னாட்டு சதியால் உரிமையுள்ள ஈழத் தமிழினம் அநியாயமாக வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு வாழும் தமிழர்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை கலக்கமும் கண்ணீருமாக சொல்லி இருக்கும் அற்புதமான படம் இது .
ஈழப் படுகொலைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட போராளி ஒருவன்( அரவிந்தன் சிவஞானம்) சிறையில் கொடிய தண்டனைகளை எல்லாம் அனுபவித்து விட்டு வெளியே வருகிறான் . கல்யாணம் ஆகி கர்ப்பிணி ஆன நிலையில் தான் விட்டு விட்டுப் போன தன் மனைவியைத் (நர்வினி டெரி ) தேடுகிறான .
மனைவியைத் தேடும் அந்தப் பயணத்தில் அவனுக்கு வேறொரு கடமை இருப்பதும் புரிகிறது . அதை அவன் எப்படி செய்தான்? மனைவியை சந்திக்க முடிந்ததா ? என்பதே இந்தப் படம் .
ஈழ அழிவை சொல்லும் சரியான படங்கள் வரவில்லையே என்ற ஏக்கத்துக்கு அரு மருந்தாக வந்திருக்கிறது இந்தப் படம்..
மனைவியைத் தேடும் முன்னாள் போராளியின் கதை என்ற பயணத்தில் பல்வேறு அடுக்குகளாக இந்தப் படம் சொல்லும் விஷயங்கள் பாராட்ட வைக்கின்றன
போர்க் காலத்தில் மாபெரும் பெண் போராளியாக விளங்கிய யாழினி (லீலாவதி) போன்றவர்கள் இப்போது வாழும் கையறு வாழ்க்கை….
போருக்கு முன்பே வெளிநாடு ஓடிப் போய் சம்பாதித்து கோடீஸ்வரன் ஆன சில தமிழர்கள் இப்போது திரும்பி வந்து பணத்தை வைத்து சிங்களவனை நயந்து கொண்டு சக தமிழர்களையே கேவலமாக நடத்தும் கொடுமை…
எல்லாம் முடிந்த நிலையில் வாழ வழி இன்றியோ சரியான தலைமை இன்மையாலோ, அங்குள்ள அடுத்த தலைமுறை தமிழ் இளைஞர்களில் ஒரு பிரிவினர் சமூக விரோத செயல்களை செய்யும் நிலை….
இவற்றை எல்லாம் சொன்ன வகையில் மிகச் சிறப்பான திரைக்கதை அமைத்திருப்பதோடு, அருமையான இயக்கத்துடன் கூடிய படமாக்கலால் சிறப்பான படைப்பைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜோசப்
போராளியின் மனைவி பற்றிய செய்திகளை இழை இழையாக அறிய வைக்கும் திரைக்கதை நேர்த்தி, ஒரு கவிதை.
கம்பீரமாக சமராடிய காலம் போய் இப்போது உயிரோடு இருக்கும் பெண் புலிகளின் அவல வாழ்வு, கடந்த காலக் கம்பீரங்களை எண்ணி அவர்கள் கண்ணீர் வடிக்கும் விதம், அப்படி ஒரு பெண் புலியின் முடிவு, சாகும் போதும் அவரது கனவு, அடுத்த தலைமுறையிடம் அவர் பேசும் விசயங்கள் .. மனம் கனத்துப் போகிறது .
காவியம் படைத்த போராளிகள் வறுமையில் உழன்றாலும் மரணத்தில் அவர்களை அனாதைப் பிணம் போல அனுப்ப போராளிகள் விடுவதில்லை என்பதை உணர்த்தும் காட்சிகள் நெகிழ்வு
இவற்றை எல்லாம் விட , ‘ நடந்தது ஒரு பக்கம்.. இனி நடக்கப் போவதை யோசிக்க வேண்டும்’ என்று தொலை நோக்குப் பார்வையில் இன்றைய ஈழ இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அவசியம் பற்றிப் பேசும் வகையில் இந்தப் படம் சிகரம் தொட்டு ,
இதுவரை ஈழப் போராட்டம் பற்றி வந்திருக்கும் மற்ற படங்களை விட இதுவே சிறப்பான படம் என்ற நிலைக்கு உயர்கிறது .
இன்னொரு முக்கியமான விஷயம் இத்தனை விசயங்களைச் சொல்லும்போதும் இதை ஒரு பிரச்சாரப்படமாக எடுக்காமல் கலைத் தன்மையோடும் வணிக சினிமாவுக்குரிய நேர்த்தியோடும் எடுத்துள்ளது பாராட்டுக்குரிய அம்சம்.
போர் முடிந்து ஓர் இனமே அநியாயமாக சிதைக்கப்பட்டு எல்லாம் அமைதிக்குப் போய் அன்று போரில் ஈடுபட்டவர்கள் சாதாரண வாழ்க்கைக்குப் போய் விட்டாலும் கூட அவர்களை இன்னும் சிங்களக் காடையர்கள் கண்டு பிடித்து எப்படியாவது கொன்று விடும் விஷயத்தை பூடகமாக படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜோசப்,
போராளி அமுதனாக நடித்திருக்கும் அரவிந்தன் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் . தேடல் நிறைந்த கண்கள் கொண்ட நடிப்பு.
நர்வின் டெரி கதாபாத்திரமாக மாறி இருக்கிறார் . பெண் புலி யாழினியாக நடித்துள்ள லீலாவதி கண்ணுக்குள் நிற்கிறார் . மரணக் காட்சியில் மனதுக்குள் உறைகிறார் .
சில உண்மைப் போராளிகளே படத்தில் நடித்துள்ளனர்
பழனி குமாரின் அகண்ட ஏரியல் ட்ரோன் ஷாட்கள், அழிக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆளரவமற்ற அமைதியின் அலறலான அழுகுரலை சிறப்பாகப் பதிவு செய்கின்றன
காட்சிகள் மாறும் இடங்களில் அருணாச்சலம் சிவலிங்கத்தின் படத் தொகுப்பு அற்புதம் புரிகிறது.
நிசங்கா ராஜகராவின் கலை இயக்கம் இடிபாடுகளையும் சிதைவுகளையும் அதன் வழியாக அழிந்த ஈழத்தையும் உணர வைக்கிறது
என் ஆர் ரகு நந்தனின் இசை சிறப்பு. பெண் புலி சாகும் நொடியில் போர் இசைத் துணுக்கை பின்னணியாகப் போட முயன்று இருக்கிறார் . போதுமான நீளம் இல்லாத காரணத்தால் அது அழுத்தமாக இல்லை . அங்கே ராணுவ மரியாதையை உணர்த்தும்படி துப்பாக்கி குண்டு முழக்க ஒலியை போட்டு இருக்கலாம்.
படத்தில் கடமைக்குப் பணியாற்றி இருப்பவர் வசனமும் பாடல்களும் எழுதி இருக்கும் தீபச்செல்வன்தான் . இப்படிப்பட்ட ஒரு கதை திரைக்கதையில் வசனம் என்பது எவ்வளவு முக்கியமான ஆயுதம்! ஆனால் திரைக்கதையின் விவரணை என்ற வகையில் வசனமாக வரும் விஷயங்கள் தவிர, உருப்படியாக ஒரு வசனம் இல்லை . பாடல்களிலும் பெரிதாக ஈர்ப்பான வரிகள் இல்லை .
எனினும்
ஈழம், நேற்று , இன்று நாளை என்று முக்காலத்தையும் யோசித்து முத்தான படம் ஒன்றை தந்துள்ளார் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் .
ஈழ வரலாறு இந்தப் படத்தை எக்காலத்துக்கும் நினைவில் வைத்துக் கொள்ளும்
https://eelamplay.com/ta