வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்க, ஆர் ஜே பாலாஜி, மீனாட்சி சவுத்ரி, சத்யராஜ், லால், தலைவாசல் விஜய், ஜான் விஜய், சின்னி ஜெயந்த், ஆன் ஷீத்தல் நடிப்பில் கோகுல் இயக்கி இருக்கும் படம்.
சிறு வயதில் தனது கிராமத்தில் இருந்த சிங்கப்பூர் சலூன் என்ற சிகை திருத்தும் நிலைய உரிமையாளரின் (லால்) ரசனையும் படைப்புத் திறனும் கொண்ட சிகை திருத்தும் நேர்த்தியில் மயங்கும் ஒரு சிறுவன், வளர்ந்த உடன், சிகை திருத்தும் கலைஞனாக முயல்கிறான் (ஆர் ஜே பாலாஜி) .
அம்மா மற்றும் தாய்மாமன் கோபத்துக்கும் அப்பாற்பட்டு நண்பன் போலப் பழகும் அப்பா ( தலைவாசல் விஜய்) சொன்ன அறிவுரையின் படி, நல்லபடியாகப் பொறியியல் படித்து, வளாக நேர்முகத் தேர்வின் வழியே நல்ல வேலை கிடைத்தும் அதை விட்டு விட்டு சிகை திருத்தும் கலைஞனாகத் தொடர்கிறான்.
இந்தியாவின் தலை சிறந்த முடிதிருத்தும் நிலையக் குழுமம் ஒன்றின் கிளையில் வேலை பெற்று, குழும உரிமையாளரின் (ஜான் விஜய்) அன்புக்குப் பாத்திரமாகி,
ஒரு நிலையில் சொந்தமாகப் பெரிய அளவில் அதி நவீன சிகை திருத்தும் நிலையம் ஒன்றை சிங்கப்பூர் சலூன் என்ற பெயரில் துவங்க முயல்கிறான் .
கல்லூரியில் இவன் காதலித்த பெண், பணக்காரப் பையன் கிடைத்ததும் விட்டு விட்டுப் போய்விட, கல்லூரியில் இவனை ஒரு தலையாய்க் காதலித்த பெண்ணை (மீனாட்சி சேசாத்ரி) மணக்கிறான் . அவளது தந்தையிடம் (சத்யராஜ்) மூணு கோடி ரூபாய் இருந்தும் அவர் கஞ்சனாக இருக்க, அவரது இன்னொரு மகளின் கணவன் ( ரோபோ சங்கர்) மூலம் அவரை குடிக்க வைத்து , காசோலையில் கையெழுத்துப் பெற்று பணம் எடுத்து, அதி நவீன சிகை திருத்தும் நிலையம் ஒன்றை ஆரம்பிக்கிறான்.
முன்பு இவன் வேலை பார்த்த குழும உரிமையாளர், மாமனாரை சந்தித்து சிங்கப்பூர் சலூனை வாங்க ஒப்பந்தம் போட , இன்னொரு பக்கம் சதுப்பு நிலத்தில் கட்டப்பட்ட- அந்த சிங்கப்பூர் சலூன் பக்கத்தில் உள்ள – ஒரு கட்டிடம் மண்ணில் புதைய , மழையால் வீடுகளை இழந்த மக்கள் சிங்கப்பூர் சலூன் வளாகத்தை ஆக்கிரமிக்க,

அதே நேரம் சிங்கப்பூர் சலூன் வளாகமும் மண்ணில் புதையலாம் என்ற நிலையில் அதை முன் கூட்டியே இடிக்க , பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முடிவு செய்ய , நடந்தது என்ன என்பதே படம் .
வித்தியாசமான நல்ல கதை .
சின்ன விசயம் முதல் பெரிய விஷயம் வரை ஆங்காங்கே வெளிப்படும் இயக்குனர் கோகுலின் தமிழ் மொழி, இன கலாச்சார உணர்வு பாராட்டுக்குரியது .போற்றுதலுக்குரியது. வணக்கங்கள் .
முதல் பாதியில் இன்றைய வெகு ஜன மக்களை ஈர்க்கும்படியாக இருக்கும் நகைச்சுவை வசனங்களுக்கும் அப்பாற்பட்டு சில இடங்களில் வசனம் நிஜமாகவே உயர்தரம். அதற்காகவும் கோகுலுக்கு வாழ்த்துகள் .
படத்தில் அவரது பெயர் போடப்படும் இடத்தில் வரும் வசனம் கூட படைப்பாற்றல் தரத்துக்கு உதாரணம் . அருமை .
அரவிந்த்சுவாமி வரும் காட்சி , அதற்கான எழுத்து, படமாக்கல் யாவும் அற்புதம் . படத்தின் சிகரமான காட்சி அது
மனித நேயத்துக்கும் அப்பாற்பட்டு உயிர் நேயத்தை வலியுறுத்தும் விதமும் சிறப்பு .
சுகுமாரின் ஒளிப்பதிவு, ஜாவீத் ரியாசின் பின்னணி இசை இரண்டும் படத்துக்கு பலம் . அருமை. ஆர் கே செல்வாவின் படத்தொகுப்பும் சிறப்பு
ஜெயச்சந்திரனின் கலை இயக்கம் , குறிப்பாக அந்த சிங்கப்பூர் சலூன் அரங்கம் அமோகம் .
கதைக்கான நேர்த்தி இல்லாத திரைக்கதை . படத்தில் சிகை திருத்தப்படும் அளவுக்கு கூட திரைக்கதை திருத்தப்படவில்லை.
ஒரு மனிதன் தான் விரும்பிய துறையில் முன்னேற என்ன செய்தான் என்பதுதான் கதை . ஆனால் படத்தில் நாயகன் ஒழுங்காக முடி திருத்துவதைத் தவிர எதுவுமே செய்யவில்லை. அதுவாகவோ அபத்தமாகவோ எல்லாம் நடக்கிறது அல்லது அவனே மாமனாரை ஏமாற்றுகிறான்.

முதல் பாதியில் கோணங்கித்தனமான நகைச்சுவை அதிகம் இருந்த காரணத்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பின் திசை திரும்பி இரண்டாம் பகுதியை ஏற்க முடியாத மனநிலை உருவாகிறது . அந்த மனநிலையை உடைக்கும் அளவுக்கு வலிமையாகவும் சிறப்பாகவும் திரைக்கதை இல்லை
இந்தக் கொடுமை போதாது என்று ஓய ஜி மகேந்திரன் வேறு நகைச்சுவை என்ற பெயரில் எரிச்சலூட்டுகிறார் .பொம்மனாட்டிக்கு பொறந்த கம்மனாட்டி என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார். அதாவது ஒங்கொப்பன் மவனே என்ற வார்த்தைக்கு மாற்றுச் சொல்லிவிட்டதாக நினைப்பு . ஆனால் அபத்தம் . பெண்களைக் கேவலப்படுத்துகிற ஆணாதிக்க மன வெளிப்பாடு அது . யாரா இருந்தாலும் பொம்மனாட்டிக்குதான் பிறக்க முடியும் .
ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் குற்றம் குற்றம்தான் . அப்படி இருக்க சிங்கப்பூர் சலூன் இடத்தை ஆக்கிரமித்த மக்களை அப்படியே இருக்க விடும் கதைப் போக்கு தவறானது . படக் குழுவில் யாருக்கு அரசியலில் தொபுக்கடீர் என்று குதிக்கும் ஆசை இருக்கிறது என்று தெரியவில்லை .
கிளிகள் தொடர்பான காட்சிகள் அருமையானவை . ஆனால் முதல் பாகம் உருவாக்கப்பட்ட விதம் அதனால் படத்துக்கு கிடைத்திருக்கும் தன்மை , அந்தக் காட்சிகளை ஒரு வித செயற்கைத்தன்மைக்குள் ஆழ்த்தி விட்டது. சிங்கப்பூர் அரசு பற்றிய விசயமும் நகைச்சுவையாக மாற அதுவே காரணம் .
அதே போல இந்தப் படத்துக்கு நினைவு மீட்சி (ஃபிளாஷ்பேக்) உத்தி தேவையே இல்லை . நேரடி விவரிப்புதான் பொருத்தமாக இருந்திருக்கும் .அது இருந்திருந்தால் இவ்வளவு சேதாரம் நிகழ்ந்து இருக்காது
இது போன்ற காரணங்களால் பாசுமதி அரிசியை வைத்து கஞ்சி காய்ச்சிய கதையாகி விட்டது படம்
மொத்தத்தில் சிங்கப்பூர் சலூன்… சிங்கம்புணரி சலூன்