ஏ ஆர் என்டர்டைன்மென்ட்ஸ் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் அசோக் செல்வன், நாசர், கே எஸ் ரவிக்குமார், இளவரசு, ரியா, மணிகண்டன், அபி ஹசன், பானு பிரியா நடிப்பில் விஷால் வெங்கட் இயக்கி இருக்கும் படம் ‘ சில நேரங்களில் சில மனிதர்கள்’ ஜெயகாந்தன் எழுதிய ஒரு நாவலின் தலைப்பு. லட்சுமி ஸ்ரீகாந்த் நடிக்க 1976 இல் அது படமாகவும் வந்திருக்கிறது
மனைவியை இழந்த நிலையில் பாசத்தோடு வளர்க்கும் அப்பாவை ( நாசர்) அதிகாரம் செய்தே டீல் செய்யும் மகன் (அசோக் செல்வன்).அவனுக்கு ஒரு காதலி (ரியா)
சொல்லப் படும் வேலையை முழுதாக முடிக்காமல் விடும் பழக்கம் உள்ள இளைஞன் (மணிகண்டன்)
குடும்பப் படங்கள் இயக்கி வெற்றிகள் குவித்த அப்பாவை( கே எஸ் ரவிக்குமார்) மட்டம் தட்டும் ஃபாரின் ரிட்டர்ன் அறிமுக கதாநாயகன் (அபி ஹசன்),
மனைவிக்கு (ரித்விகா)எடுத்துக் கொடுக்கும் நகை உட்பட எல்லா விசயங்களையும் வறட்டுக் கவுரவத்துக்காகவே செய்யும் ஒரு இளம் கணவன் (பிரவீன் ராஜா)
இவர்களின் செயல்பாடுகளும் அதன் விளைவுகளும் அதில் பாதிக்கப்படும் ஒரு சரியான நபரும் , அதன் பின் ஏற்படும் குற்ற உணர்ச்சிகளும் மன மாற்றங்களும் அதன் பொருட்டு துளிர்க்கும் மனிதாபிமனமுமே இந்தப் படம்.
பாசத்தால் மகனிடமே குழந்தையாக இருக்கும் அப்பா கேரக்டரில் நாசரின் நடிப்பும் அந்த சென்னை வட்டார பேச்சு மொழியும் அபாரம். சத்தம் சற்று அதிகம் என்றாலும் கோபக்கார மகனாக ஒகே ஆகிறார் அசோக் செல்வன். காதலியாக நடிக்கும் ரியா வித்தியாசமான உருவம், தோற்ற அமைப்பு , இவற்றால் யதார்த்தமான ஒரு வேலைக்குச் செல்லும் பெண்ணை பிரதிபலிக்கிறார்
மணிகண்டன் வழக்கம் போல சிறப்பாக நடித்துள்ளார் . நட்பின் பாச மிகு நடிப்பில் இளவரசு, , பந்தா ஹீரோவாக அபி ஹசன், , குடிகாரக் கதாநாயகியாக அஞ்சு குரியன், இயக்குனராக இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், வறட்டுப் பணக்கார இளைஞனாக பிரவீன் ராஜா, அதை வெறுக்கும் மனைவியாக ரித்விகா, அமைதியாக இயல்பு உள்ள அம்மாவாக பானுபிரியா எல்லோருமே சிறப்பு .
யாரோ ஒருவரின் தவறான செயலில் அதைத் தொடரும் மற்றவர்களின் தவறுகளில் தவறு இல்லாத மனிதன் பாதிக்கப்படுவதை சொன்ன விதம் அருமை . அந்த இழப்பின் காட்சி எதிர்பாராத திருப்பம்.
இது போன்ற படங்களுக்கு பொருள் பொதிந்த வசனங்கள் முக்கியம் . ஆனால் யதார்த்தம் என்ற பெயரில் இயல்பான வார்த்தைகளால் கட்டமைத்திருக்கிறார் , வசனம் எழுதி உள்ள நடிகர் மணிகண்டன்,
கடைசி பகுதி நெகிழ்வான கனம்.
எனினும் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் படம் ஒகே என்ற இப்போதைய நிலையைக் கடந்து ஓகோ என்று ஆகி இருக்கும் .
சில நேரங்களில் சில (கவனம் ஈர்க்கும் ) படங்கள் !