பிரின்ஸ் என்று பிரளய பாசத்துடன் தன் ரசிகர்களால் அழைக்கப்படும் ஆந்திர சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிகர் கிருஷ்ணாவின் மகன்.
சென்னையில் பிறந்து வளர்ந்து படித்ராது, ராஜ்குமாருடு என்கிற படம் மூலம் தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமானவர்.
அந்த மகேஷ் பாபு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க , ஆல் இண்டியா பேவரைட் இயக்குனரான நம்ம ஏ.ஆர்.முருகதாஸ் ,
தெலுங்கு தமிழ் என்று இருமொழிகளில் இயக்கி இருக்கும் படம் ஸ்பைடர்
மகேஷ் பாபு கதாநாயகனாக அறிமுகமான ராஜ்குமாருடு என்கிற படத்தில் கீ போர்ட் வாசித்த ஹாரிஸ் ஜெயராஜ்,
18 வருடங்கள் கழித்து மகேஷ் பாபு அறிமுகமாகும் தமிழ்ப்படத்தில் இசையமைப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார் .
வில்லனாக எஸ் ஜெ சூர்யா நடித்துள்ளார் . ஸ்பைடர் தமிழ்ப் பதிப்பின் இசைவெளியீட்டு விழா கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
நாம் இருப்பது சென்னையா ..? ஹைதராபாத்தா..? என்று தோன்றும் அளவிற்கு திரண்டு இருந்த மகேஷ் பாபுவின் ரசிகர்கள் ,
நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர்களை தெலுங்கில் பேசச் சொல்லி வற்புறுத்திக் கொண்டே இருந்தனர் .
ஜெய் ஜெய் மகேஷ் பாபு, சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு என்று அரங்கம் அதிர கோஷம் போட்டுக் கொண்டே இருந்தனர்.
(ஜெய் என்ற பெயரில் அங்கு ஒரு சூப்பர் ஸ்டார் வந்தால் எப்படி கோஷம் போடுவார்கள் ?)
நிகழ்ச்சியில் ரசித்து தெலுங்கிலேயே தெலுங்கிலேயே மாட்லாடினார் எஸ் ஜெ சூர்யா .(மந்திரிக்குள்ள தந்திரம்)
தெலுங்கு , தமிழ் , ஆங்கிலம் மூன்று மொழிகளில் பேசிய விஷால் கடைசியில் ” நம்ம ஆளை இங்க நாங்க நல்லா பாத்துக்குவோம் கவலைப் படாதீங்க ” என்றார் தெலுங்கில் .
கலைப்புலி எஸ் தாணு தமிழ் சினிமாவுக்கு சூப்பர் ஹீரோ கிடைத்து விட்டார் என்றார் . இயக்குனர் விக்ரமனும் அப்படியே
முருகதாஸ் மேடை ஏறிய போது அவரை பேசவிடாமல் ஜெய் ஜெய் கோஷங்கள் தொடர , சற்று டென்ஷனான முருகதாஸ் “அமைதியா இருங்க ” என்று,
அதட்டி அமைதிப்படுத்தி விட்டு ” மகேஷ் பாபுவை வைத்து படம் பண்ண பத்து வருடம் காத்திருந்தேன்… ரசிகர்கள் நீங்கள் எங்களுக்கு முக்கியம் ,
ஆனால் நீங்களும் எங்களது வேலைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்..” என்றார் கம்பீரமாக.
தனது உதவி இயக்குநர்களை மேடையேற்றி அறிமுகப்படுத்தவும் செய்தார்
மகேஷ் பாபு பேசும்போது ” தமிழ்ப்படத்தில் நடித்து இங்கேயும் ஒரு மார்க்கெட் பிடிக்கவேண்டும் என்றெல்லாம் திட்டமிடவில்லை.
சாமி ( கடவுள் ) எனக்குத் தெலுங்கில் ஒரு பெரிய வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இந்த ஜென்மத்திற்கு அதுவே போதும்.
ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னமாதிரி, 10 ஆண்டுகால கனவு, ஸ்பைடர் மூலம் நனவாகியிருக்கிறது.
ஒவ்வொரு காட்சியையும் தமிழிலும் தெலுங்கிலுமாகப் படமாக்கினோம்… அப்படி நடித்தது எனக்கு புதுமையான அனுபவம், நிறையக் கற்றுக் கொண்டேன்.
நான் நடிக்கும் படங்களையே அதிகம் நேசித்து தான் ஒவ்வொரு படத்திலும் என்னை அர்ப்பணிக்கிறேன்.
துப்பாக்கி படத்தில் நான் நடித்திருக்கலாமோ என்று லேசாகத் தோன்றியது.
அந்தப் படத்தில் விஜய் பேசும் ஐ ம் வெயிட்டிங் என்கிற வசனம் மிகவும் பிடிக்கும்.” என்று…… தமிழில் பேசினார் மகேஷ் பாபு .