இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்து இயக்குநராகி , விரும்புகிறேன் , பைவ் ஸ்டார், திருட்டுப் பயலே, கந்தசாமி, இப்போது திருட்டுப் பயலே- 2 ஆகிய படங்களையும் தில் ஹை க்ரே உட்பட இரண்டு இந்திப் படங்களையும் இயக்கி இருக்கும் சுசி கணேசனும் , இந்திப் படங்களை தயாரித்த அவரது மனைவி மஞ்சரியும் தமிழில் அடுத்து மூன்று படங்களை இயக்கவும் தயாரிக்கவும் இருக்கிறார்கள் .
எண்பதுகளில் மதுரையில் நடந்த ஒரு சம்பவத்தில் புனைவுகள் சேர்த்து வஞ்சம் தீர்த்தாயடா என்ற ஒரு படம் ( “இந்தியில் இதே கதையை உத்திரப் பிரதேசம் அல்லது ஹரியானா பின்னணியில் தயாரிக்கிறோம்”- மஞ்சரி)…
புல்லட் 19 என்றொரு பெரிய பட்ஜெட் படம்…
முக்கியமாக, வீர மங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றுப் படம்
இவையே அந்த மூன்று படங்கள். ( நடந்து முடிந்த டெல்லி சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொள்ள, வேலு நாச்சியின் உருவமும் இருந்த தமிழக அலங்கார ஊர்திதான் நிராகரிக்கப்பட்டது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் அவர்களை உலகுக்கு யாரென்று தெரியாது மற்றும் தீவிரவாதிகள் என்பதுதான். அந்த நச்சு நாக்குகளுக்கு விழும் சவுக்கடியாக இந்தப் படம் இருக்க வேண்டும் கணேசன் – மஞ்சரி !)
படத்தின் இணை இயக்குனராக படங்களை இயக்கி அனுபவம் பெற்ற நாகேந்திரனும் அவரோடு திறமையாளர் வேல்முருகனும் இருக்கிறார்கள் .
இதோடு முடியவில்லை …
வஞ்சம் தீர்த்தாயடா படத்தில் இரண்டு முக்கிய நாயகக் கதாபாத்திரங்கள் . அதில் ஒன்றில் பிரபல நடிகர் நடிக்கப் போகிறார். இன்னொன்றில் ?
அங்கேதான் அட்டகாசமான திட்டத்தோடு வருகிறார்கள் மஞ்சரியும் கணேசனும் .
சிறந்த நடனக்காரரைத் தேர்ந்தெடுக்கவும் , சிறந்த பாடகர்களை தேர்ந்தெடுக்கவும் சிறந்த ஸ்டேன்ட் அப் காமெடியன்களைத் தேர்ந்தேடுக்கவும் ஊருக்கு ஊர் மொழிக்கு மொழி டிவி சேனல்கள் இருக்கின்றன.
ஆனால் நடிகர்களை – ஹீரோக்களைத் தேர்ந்தெடுக்க?
ஸ்டோரி பேங் என்பதே இங்கு இன்னும் தேவைப் படும் விஷயம்.
அதே போல ஒரு ஹீரோ பேங்க் இருந்தால் எப்படி இருக்கும் ? அதைத்தான் செய்கிறது இந்த இயக்குனர் -தயாரிப்பாளர் தம்பதி .
வருங்கால சூப்பர் ஸ்டார் 2022 ” என்ற பெயரில் ஒரு போட்டியாளர்கள் நிகழ்ச்சியை ஒரு பிரபல தொலைக்காட்சியில் நடத்த இருக்கிறார்கள் .. பிரபல இயக்குனர்(கள்?) நடுவராக இருப்பார்(கள்?).
அதில் எல்லா வகையிலும் திறமையை வெளிப்படுத்தி தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் வஞ்சம் தீர்த்தாயடா படத்தில் , பிரபல கதாநாயகன் நடிக்க இருக்கும் கதாபாத்திரத்துக்கு இணையான இன்னொரு கதாபாத்திரத்தில் நடிப்பார் ( இப்போதே வஞ்சம் தீர்த்தாயடா படத்திக்காக டிசைனர் ஜிப்சன் உருவாக்கிய போஸ்டர் டிசைன் சும்மா பட்டையை கிளப்பி இருக்கிறது, தெரியும்ல? )
சரி… திறமையும் ஆர்வமும் உடைய நாளைய நாயகர்கள் இதில் கலந்து கொள்ள எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கென உருவாக்கப்பட்டு இருக்கும் www.4vmaxtv.com இணையதளம் அல்லது 4VMAXTV யூ டியூப் சேனலுக்குள் நுழையுங்கள் . அங்கே உங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் காணொளி ஒன்றை இரண்டு நிமிடத்துக்கு மேல் போகாத அளவில் பதிவிடுங்கள் . உங்களைப் பற்றிய விவரங்களை தெரிவியுங்கள் . காத்திருங்கள் . நீங்கள் பொருத்தமானவர் எனில் உங்களை அவர்களே அழைப்பார்கள் 86696 48669 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கும் அனுப்பலாம் .
இருபது முதல் நாற்பது வயதுவரை உள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம் .
பரந்து விரிந்த இந்த பணியை தொலைக்காட்சி, காணொளி மற்றும் சமூக ஊடக தளத்தில் திறமையும் அனுபவமும் கொண்ட ஆனந்த் ரத்தினம் செய்கிறார். உண்மையில் நீங்கள் தகுதியனவர் எனில் அவரே உங்களைத் தூக்கிக் கொண்டு போய் விடுவார்.
பிறகு இரண்டாவது சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சென்னையில் தங்க வைக்கப்பட்டு நடிப்புப் பயிற்சியும் உடல் பயிற்சியும் அளிக்கப்படுவார்கள். மூன்றாம் சுற்றுக்கு பனிரெண்டு போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு , பனிரெண்டு வாரங்கள் நடக்கும் ‘வருங்கால சூப்பர் ஸ்டார் 2022 ‘ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் .
இதனை ஒளிபரப்பும் தொலைக்காட்சி , நேரம் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும் .
இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஒரு படத்துக்காக இப்படி ஒரு டேலன்ட் ஹன்ட் ஷோ நடத்தி ஹீரோவைத் தேர்ந்தெடுப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை .
தமிழில் மட்டுமல்ல இந்தி தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படி ஒரு ஷோவை நடத்த உள்ளனர் சுசி கணேசனும் மஞ்சரியும்.
சரிங்க .. இது நாயகனுக்கான தேர்வுதானே? பெண்களுக்கு இல்லையா?
உண்டு பெண்களும் கலந்து கொள்ளலாம் . சொல்ல முடியாது . நீங்கள் கதாநாயகியாகவோ அல்லது முக்கியமான பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவோ வாய்ப்பு உண்டு .
நல்லது .. இது கதாநாயகனுக்காக தேர்வுதானா? மற்ற கதாபாத்திரங்களுக்கு இல்லையா?
தேர்ந்தெடுக்கப் படுவோர் , ஒவ்வொரு சுற்றிலும் கவனம் கவர்வோர் மற்ற கதாபாத்திரங்களில் நடிக்க சம்மதம் என்றால் தாரளமாக நடிக்கலாம் .
அன்றைக்கே சினேகாவை விரும்புகிறேன் படத்துக்காக குமுதம் பத்திரிகை மூலமும், ஃ பைவ் ஸ்டார் படத்துக்காக பிரசன்னாவை தொலைக்காட்சி விளம்பரம் மூலமும் தேர்ந்தெடுத்த சுசி கணேசனுக்கு இது இன்றைய தொழில் நுட்ப வசதியில் இதுவும் சாத்தியமே .
விஷயம் என்னவோ அவர் இயக்கிய விரும்புகிறேன் படத்தில் இடம் பெற்ற இளவட்டக்கல் போன்ற கனமான விசயம்தான் .
ஆனால் படத்தில் பிரசாந்த் தூக்கியதை விட சிறப்பாக சுசி கணேசன் தூக்கி சுழற்றி உருட்டி விடுவார்.
எனவே திறமையாளர்கள் தயங்காமல் தொடர்பு கொள்ளலாம் . வாழ்த்துகள்