சோனி லிவ் நிறுவனம், தங்களது அடுத்த தமிழ் படைப்பாக ‘ தமிழ் ராக்கர்ஸ்’ எனும் இணையத் தொடரை வழங்குகிறது. ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 போன்ற வெற்றி பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், தமிழ் ராக்கர்ஸ் ஆகஸ்ட் 19 முதல் சோனி லிவ் இல் ஒளிப்பரப்பாக உள்ளது.
நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்ட இந்த தொடர், நேயர்களை ருத்ரா எனும் ஒரு காவல் அதிகாரியின் பயணம் மூலமாக விவரிக்கிறது. இந்த கதாபாத்திரத்தில் புகழ் பெற்ற நடிகர் அருண் விஜய் நடிக்கிறார். திரைப்படங்களை இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடும் இணைய தளத் திருடர்கள் மீது போர் தொடுப்பவன்.
ஒரு மிக பெரிய தயாரிப்பில் உருவாகும் ஒரு திரைப்படத்தை மக்கள் பெரிதாக எதிர்பார்க்கும் ஒரு படத்தை இணைய தளத் திருடர்களிடம் இருந்து எவ்வாறு காப்பாற்றுகிறான் என்பதே கதைத்தளம் .
AVM தயாரிப்பு நிறுவனம் தனது OTT உலகின் நுழைவு வாயிலாக இந்த தொடரினை தயாரிக்கிறது. மனோஜ் குமார் கலைவாணன் மற்றும் ராஜேஷ் மஞ்சுநாத்தின் எழுத்தில் உருவான இந்த தொடர், அருண் விஜய், அழகம் பெருமாள், எம் எஸ் பாஸ்கர், ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன், வினோதினி வைத்தியநாதன் மற்றும் தருண் குமார் ஆகியோரை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய AVM நிறுவன இளைய தலைமுறைத் தயாரிப்பாளர் அருணா குகன், “தமிழ் ராக்கர்ஸ் ஒரு நல்ல ஆழமான கதைக் களத்தை கொண்டது. நாங்கள் மிக தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம், கலை துறையினர் படும் இன்னல்களை பல்வேறு கோணங்களில் இருந்து ஆழமாக காட்டியுள்ளோம் . சோனி லிவ் நிறுவனத்தினை தனது ஒளிபரப்பு பங்குதாரராக கொண்டது எங்களுக்கு பலம் கூட்டியுள்ளது. தொலைநோக்குச் சிந்தை உள்ள இயக்குனர் அறிவழகன் மற்றும் நடிகர் அருண் விஜய் எங்களுடன் இணைந்தது மேலும் மேலும் கூடுதல் பலம். அதோடு மக்களுக்கு ஒரு உணர்வுப் பூர்வமான ஒரு பந்தத்தை உருவாகும் எனும் நம்பிக்கையினை ஏற்படுத்தி உள்ளது.”என்றார்.
இயக்குனர் அறிவழகன், ” பைரசி, ஹால் காபி, டோரன்ட் டவுன்லோட் போன்ற வார்த்தைகள் என்னதான் கேள்விப்பட்டதாக இருந்தாலும், அதனால் கலை உலகில் ஏற்படும் வலிகள் மற்றும் வேதனைகள் உலகிற்கு தெரியாது. தமிழ் ராக்கர்ஸ் என்ற ஒரு சுவாரஸ்யமான திரில்லர் மூலம் அருண் விஜய் நடிக்கும் ருத்ரா எனும் கதா பாத்திரம் மூலம் மக்களை பைரசி உலகத்தின் சவால்களுக்கு அழைத்து செல்கிறோம்” என்றார்.
அருண் விஜய் தனது பேச்சில், ” ஒரு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. சமுதாயத்திற்கு தேவைப்படும் தொடராக இதனை பார்க்கிறேன். படைப்புத் திருட்டு என்பது காலம் காலமாக கலை உலகில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த தொடர் திரை உலகில் பைரசி எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதை வெளிக்காட்டும். எனது கதாபாத்திரமான ருத்ரா என்பவன் எப்படி இதனை முடிவிற்கு கொண்டு வருகின்றான் என்பதே கதை. எனவே நான் மிகவும் ஆவலுடன் இந்த தொடரை சோனி லிவ் இல் காண்பதற்கு காத்திருக்கிறேன். திரைத்துறையில் அனுபவம் வாய்ந்த படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.”என்றார்.