CITY OF DREAMS @ விமர்சனம்

அமெரிக்கத் தமிழரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசாமி , Mogul Productions,  Original Entertainment, P2 films USA, Rufus Parker, மற்றும்  Infinite Kathas Films,  Mithran Maharajan ஆகியோருடன் சேர்ந்து Mohit Ramchandani   தயாரித்து இயக்க , Ari Lopez , Alfredo Castro ,  Paulina Gaitán,  Diego Calva ,  Renata Vaca , Jason Patric ,  Samm Levine  நடிப்பில் 2024 ஆகஸ்ட் 30 ஆம் தேதி அமெரிக்காவில் வெளியான அமெரிக்கன் மெக்சிகன் திரில்லர் படம் . 
 
படத்தின் தயாரிப்பாளர்கள் தமிழர்கள் என்பதால் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி தமிழ் சினிமாப் பத்திரிகையாளர்களுக்காக இப்போது திரையிடப்பட்டது .  இதே CITY OF DREAMS பெயரில் பல நாடுகளில் பல கதைகள் திரைப்படங்களாக வெப் சீரியஸ்களாக  இருக்கின்றன . 
 
Jesús என்ற பெயர் கொண்ட  (அவர்கள் உச்சரிப்பில் ஜெசியஸ்) – பெரிய கால்பந்தாட்ட வீரனாக வேண்டும் என்ற கனவு கொண்ட , ஒரு ஸ்பானிஷ் சிறுவன் (Ari Lopez) கால் பந்தாட்டத்தில் பயிற்சி தருவதாக ஆசை காட்டப்பட்டு, மலிவான சம்பளத்தில் மாடு போல வேலை வாங்கும் ஒரு உடைகள் தைக்கும் நிறுவனத்துக்காக , லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின்,  உள்ளடங்கிய பகுதியில் உள்ள சுகாதாரமே இல்லாத இடத்துக்கு கடத்தப்படுகிறான் . 
 
ஓய்வொழிச்சல் இல்லாத வேலை .. 
 
பாலியல் வக்கிரம் , கண் மூடித்தனமான அடி உதை , சக்திக்கு மீறிய வேலை , 
 
கம்பெனி ஆட்கள்  யாராவது சிறுவனை மிருகத்தனமாக அடித்து, அவன் உடல் உறுப்புகள் உடைந்து ரத்தம் சிதறி அழும்போது, அதைப் பார்க்கும்போது தான் ஓய்வு எடுக்க முடியும் என்ற நிலை. அப்புறம் குறைவான தூங்கும் நேரத்தில் மட்டுமே. 
 
மேற்சொன்ன எல்லாக் கொடுமைகளும் அவனுக்கும்  நடக்கிறது . வக்கிர மனம் கொண்ட ஆட்களின்  உடல் திரவத்தில் குளிப்பாட்டப்படுகிறான் .
 
அப்படி அங்கே பாதிப்புக்கு ஆளாகும் எலெனா என்ற பெண்ணுக்கும் (Renata Vaca ) அது எல்லாமும் நடக்கிறது. அவன் மீது அவளுக்கும் அவள் மீது அவனுக்கும் நேசமும் வருகிறது .
 
அங்கிருந்து தப்பிப்பது கடினம் என்றாலும் , உயிர் பிழைக்க ஒரே வழி அதுதான் என்று முடிவு செய்யும் அந்த சிறுவன் , கண் மூடித்தனமான மூர்க்கத்துடன் அங்கிருந்து ஓடித் தப்புகிறான் . 
 
கடை ஆள்  அவனைத் துரத்த, சிறுவன் போலீசின் உதவியைப் பெற, மேலதிகாரி போன் செய்து சிறுவனை கடை ஆளுடன் அனுப்பச் சொல்ல, 
 
அமெரிக்காவில் குழந்தைகள் கடத்தலையும் அதன் பின்னால் உள்ள மூர்க்கத்தனத்தையும் அதிரும்படி படம் சொல்கிறது , இந்த  CITY OF DREAMS
 
ஆங்கிலத்திலும் ஸ்பானிஷ் மொழியிலும் கதாபாத்திரங்கள் பேசுகிறார்கள் . 
 
பெரிய கனவு உள்ள ஒரு சிறுவன் கடத்தப்படும் லாவகம், அடிப்படை வசதி கூட இல்லாத தங்கும் அறையில் படுத்திருப்பவர் மேலேயே படுத்து தூங்க வேண்டிய கொடுமை , சிறுவர்கள் தாக்கப்படும்-  பாலியல் வக்கிரத்துக்கு ஆளாக்கப்படும் குரூரத்தை விளக்கும் காட்சிகள் , சிறுவன் உடலில் உள்ள காயங்களை அதிர்ச்சியோடு உணரும்படி செய்யப்பட்டு இருக்கும் மேக்கப், நீண்ட நெடிய சிங்கிள் ஷாட் காட்சிகள் என்று மேக்கிங்கில் அவ்வளவு ராவாக உயிர்ப்பாக விதிர்விதிர்க்கும்படி இருக்கிறது படம். 
 
கொடுமைக்கார ஆட்கள், போலீஸ் அதிலும் பெண் போலீஸ் ஆண் போலீஸ் என்று நடிக நடிகையர் தேர்வு அபாரம். 
 
Alejandro Chávez சின் ஒளிப்பதிவு,   Matthew Diezel  லின் படத் தொகுப்பு,  Lisa Gerrard டின் இசை யாவும், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான இந்தப் படத்தை உண்மைக்கும் யதார்த்தத்துக்கும்  வெகுஜனம் அறியாத குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை உணர்வதற்கும் காரணமாக அமைகின்றன . 
 
வளர்ந்த நாடு எனப்படும் அமெரிக்காவில் குழந்தைத் தொழிலாளர் கொடுமைக்கு எதிராக சட்டங்கள் இல்லை என்பதும் பல
ஆண்டுகளாக பல அமெரிக்க அதிபர்களிடம் முறையிட்டும் ஜோ பைடன் , டிரம்ப் வரை யாரும் அதை செய்யவில்லை என்றும் படம் சொல்லும் உண்மை , அதிர வைக்கிறது . 
 
ஒரு நிறுவனத்திற்கு ஒரு ஏஜென்ட் ஆள் எடுத்துக் கொண்டு வருவதில் முறைகேடுகள், இப்படிக் கொடுமைகள் பாலியல் வக்கிரங்கள் நடந்தால் குறைந்த அதற்கு அந்த நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றாவது அறிவியுங்கள் என்று இன்னமும் அங்கே இன்னும்  அரசிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கிறார்களாம். 
 
அடக் கொடுமையே… 
 
CITY OF DREAMS.. அதிர வைக்கும் அனுபவம். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *