ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரிக்க, சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா காஷ்யப், கதானந்தி நடிப்பில் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம்.
தலைக்கூத்தல் என்பது…
விபத்து , நோய், மற்றும் முதுமையால் இனி காப்பாற்ற முடியாது என்ற நிலைக்குப் போனவர்கள் துன்பப் படுவதாலும் அவர்களைப் பராமரிப்பவர்கள் பலன் இல்லாத நிலையில் நேரம் மற்றும் பணம் ஒதுக்கி சிரமப்படுவதாலும், விளக்கெண்ணை தேய்ப்பு , குளிர் நீர்க் குளியல் , இளநீர் குடியல் இவைகளைக் கொண்டு சம்மந்தப்பட்டவரை மரணிக்கச் செய்யும் வகையில் தென் தமிழ்நாட்டில் இருந்த — இப்போதும் லேசு பாசாக இருக்கிற ஒரு பழக்கம் .
தலைக்கூத்தல் பற்றி வரும் நான்காவது படம் இது . முதல் படம் மருது . இன்னொரு படம் பேர் ஞாபகம் வரவில்லை. தலைக்கூத்தல் பற்றிய புரிதலே இல்லாமல் இங்கே இருப்பவர்கள் எல்லோரும் காட்டுமிராண்டிக் கூட்டம் என்பது போல வன்மமாக எடுக்கப்பட்ட ஒரே காரணத்தால் தேசிய விருது கொடுக்கப்பட்ட பாரம் என்ற படத்தை வெற்றி மாறன் வாங்கி பெருமையோடு ரிலீஸ் செய்தார் . ஆனால் அப்படி எல்லாம் இல்லாமல் ஓரளவுக்கேனும் நல்ல புரிதலோடு எடுக்கப்பட்டு இருக்கும் படம் இது. .
சிறு வயது மேல் சராசரிக்கும் மேல் அன்பு காட்டி தன்னை வளர்த்த தந்தையை அப்படி ஒரு நிலையில் பராமரித்து வருகிறார் பழனி ( சமுத்திரக்கனி) . அவரது மனைவி (வசுந்தரா) , மாமனார் , மைத்துனர் , சாமியாடி எல்லோரும் சிரமம் , செலவு, வேலை பளு, வருமானக் குறைபாடு , பணியிடத்தில் மனைவிக்கு பாலியல் தொல்லை இவற்றைக் கருத்தில் கொண்டு பழனியின் தந்தைக்கு தலைக்கு ஊத்தி விட அனுமதி தரும்படி பழனியை நெருக்க, பழனி மறுக்க, நடப்பது என்ன என்பதே படம்.
பழனியின் தந்தையின் இளவயது தோற்றமாக , சலவைத் தொழிலாளி மகள் ( கதானந்தி) மீது காதல் வயப்பட்டு சாதி வெறியால் அவரை இழக்கும் பாத்திரத்தில் கதிர் .
சிறப்பான இயக்க உத்திகள் கொண்டு படத்தை அற்புதமாக இயக்கி இருக்கிறார் ஜெயப்பிரகாஷ் ராதா கிருஷ்ணன். காதலி பழம் தின்று விட்டுக் கொடுத்த கொடுத்த எச்சில் இலந்தங் கொட்டைகள் மழையென பெய்வது , குளக்கரையில் சலவைத் தொழிலாளி காதலி காதலை ஏற்ற நொடியில் கதிர் சரேலென தண்ணீருக்குள் பாய்வது , தனக்கு தலைக்கு ஊத்தப் போவது தெரிந்த உடன் அப்பாவின் கனவில் ஒரு குளிர் நீர்க் குளத்தில் ஏகப்பட்ட இளநீர்க் காய்கள் மிதக்க, தலைக்கு மேல் குடம் குடமாய் தண்ணீர் ஊற்றப் படுவது போன்ற உருவகம் … இப்படி வியக்கவும் ரசிக்கவும் கொண்டாடவும் பல காட்சிகள் .
கடைசிக் காட்சிகள் எல்லாம் நெகிழ்வும் ரசனையும் கலந்த காவியக் கலவை.
சுந்தர மூர்த்தியின் ஜிகினா காட்டாத யதார்த்த ஒளிப்பதிவு படத்தை மனதுக்கு நெருக்கமாக்கி கதை நிகழும் களத்துக்குள் நம்மையும் இறக்கி விடுகிறது.
தலைக்கு ஊத்தச் சொல்லும் தரப்பு முழுவதையும் சினிமாத்தனமாக வில்லக் கூட்டமாகக் காட்டாமல் அவரவர் தரப்பு நியாயத்தை பேசுவது படத்தின் சிறப்பு . எனினும் ஒரு உசிரை நாமளா கொல்லக் கூடாது என்று பழனி போராடுவது இன்னும் அருமை .
ஆனால் மகளின் நன்மையை விட அப்பாவின் உயிரே பெரிது என்று சொல்லும் பழனி ஒரு நிலையில் தலைக்கூத்தலுக்கு சம்மதிக்கும்போது, படம் பப்படம் ஆகி விடுகிறது . கடைசி வரை அவன் ஏற்கவில்லை என்று திரைக்கதை போயிருந்தால் படம் அற்புதம் செய்து இருக்கும் . (பாரம் படம் எடுத்தவர்களின் பாதிப்பு கொஞ்சம் இவர்களுக்குள்ளும் இருக்கிறதோ என்ற எண்ணம் வருகிறது)
அதே போல பழனியின் – குழந்தை இல்லாத மாற்றுத் திறனாளி – நண்பன் , ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக் கொண்டான் என்று சொல்லாமல் அதற்காக பொண்டாட்டியை விட்டு விட்டுக் காணமல் போனான் என்பது சொல்லக் கூடாத அபத்தம்.
அதை எல்லாம் செய்ய அநியாயமாகத் தவறி இருக்கிறார்கள் .
படத்தின் மெதுவான நகரல் வணிக ரீதியான வெகுஜன ரசிகனை சோதிக்கலாம் .
இதை எல்லாம் சரி செய்து பழனியை கேரக்டர் அசாசினேஷனுக்கு ஆளாக்காமல் இருந்திருந்தால் தலைக்கூத்தல் , குடமுழுக்கு என்ற அளவுக்கு கொண்டாடப்பட்டு இருக்கும் .