LEARN AND TEACH புரொடக்ஷன்ஸ் சார்பில் தேவானந்த் , சாய் வெங்கடேஸ்வரன் , நீலம் புரடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பா.இரஞ்சித் ஆகியோர் தயாரிக்க, தினேஷ் , கலையரசன், ரித்விகா, வின்சு சாம், ஷபீர் கல்லக்கல், பால சரவணன் , அருள் தாஸ் நடிப்பில் அதியன் ஆதிரை இயக்கி இருக்கும் படம்.
இந்தியாவின் ராணுவப் பிரிவான ஐ எஸ் ஜி எஸ் படைப்பிரிவு பாகிஸ்தான் போரில் முக்கிய பங்கு வகித்தது என்றாலும் ஒரு நிலையில்
நாட்டின் கனிம வளங்களைக் கொள்ளை அடிக்கும் கார்ப்பரேட் கம்பெனி ஆட்கள் மற்றும் அரசியல்வாதிகளை கொன்று ஒழிக்கும் தீவிரவாதிகளை அழித்தொழிப்பு செய்வதையே , தனது வேலையாகக் கொண்ட அமைப்பாக ஆக்கப் பட்டது.
அந்தப் படைப்பிரிவில் இருக்கும் தமிழ்நாட்டுப் பழங்குடி நபர் முருகன் (கலையரசன்) மற்றும் அவனது நண்பன் (பால சரவணன்)
படையில் – உடன் பயிற்சியில் – பதவியில்- இருக்கும் அதிகாரிகள் எல்லாம், ‘இவர்கள் தமிழர்கள்’ என்பதால் புறக்கணித்து கிண்டல் கேலி செய்து, அதி தீவிரப் பயிற்சிகள் கொடுத்து அடித்து நொறுக்கி, பெரும் கெடுதல்களை செய்கின்றனர் .இவர்களை எல்லாம் மீறி பயிற்சி எடுத்து வேலை உறுதியாகுமா என்ற சந்தேக நிலையில் முருகன்.
தமிழ்நாடு பையூர் வனப் பகுதியில் வாழும் பழங்குடி குடும்பத்தின் இளைய மகன் அவன். அம்மா .அப்பா , அண்ணன் (தினேஷ்) அண்ணி (ரித்விகா) இதுவே அவனது குடும்பம்.
முருகன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் (வின்சு சாம்) .ஆனால் அவளது அம்மா , ‘பனிரெண்டாவது வரை மட்டும் படித்த உருப்படியான வேலை இல்லாத ‘ முருகனுக்கு பெண் கொடுக்க மறுக்கிறாள்.
எனவே வேலை உறுதி ஆகாத பையூரில் வனக் காவலர் பணியில் சேர்ந்து வேலை உறுதியானதும் காதலியின் அம்மா மறுக்க மாட்டாள் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறான். .
பழங்குடி மக்களை மனிதனாகக் கூட மதிக்காத வனத்துறை. பெரு முதாலாளிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு வனத்துறை துணை போக , மண் நீதி பேசும் முருகனின் அண்ணனுக்கும் வனத்துறை மற்றும் கடத்தல்காரர்களுக்கும் தர்ம நியாய உரிமைப் போர் .
ஒரு நிலையில் அண்ணன் மேல் உள்ள கோபத்தில் முருகன் எட்டு ஆண்டுகளாகப் பார்த்த – உறுதி ஆகாத பணிக்கான அரசு ஆவணங்களை அழித்து , முருகனை வேலையற்றவன் ஆக்குகிறது . வனத்துறை.
நிலத்தை விற்று கண்ணீரோடு பணம் கட்டி, ராஞ்சி வந்து ஜாம்ஷெட்பூரில் உள்ள பயிற்சி மையத்தில் இப்போது இங்கு சேர்ந்தால் சேர்ந்தால் முருகனுக்கு இங்கேயும் சிக்கல் . இங்கேயும் வேலை நிரந்தரமாகாமல் போய்விடுமோ என்ற சூழல்
முருகன் மீது வடக்கத்திய வெறுப்பு காட்டும் முக்கிய நபர் (ஷபீர்), முருகனின் செயல்களால் நட்பாகிறான் .
இந்த நிலையில் படையில் உள்ள பயிற்சியாளர்களை நக்சலைட்டுகள் என்று சித்தரித்து அவர்களை மூன்று மாதம் கொடும் அடி உதைக்கு ஆளாக்கி, மூன்று மாதம் கழித்து, அவர்கள் திருந்தியதால் அவர்களை மேற்படி படைப் பிரிவில் சேர்த்து வேலை உறுதி செய்யும் திட்டம் தீவிரவாதிகள் மறு வாழ்வு திட்டம் ஒன்றை அரசும் படையணி மற்றும் ஆளும் அரசியல்வாதிகளும் கொண்டு வருகின்றனர் . ஆனால் அதில் போனால் முருகனுக்கு வேலை உறுதியாகும் சூழல் . முருகன் சம்மதிக்கிறான் .
ஆனால் தீவிரவாதி என்று இராணுவமே சொல்வதால் , இந்த வீரர்களும் அவர்தம் குடும்பத்தாரும் தங்கள் ஊரில் மாநிலத்தில் போலீசின் பெரும் கொடுமைகளுக்கு ஆளாவார்கள் . அது முருகனின் குடும்பத்துக்கும் நடக்கிறது
வேலை உறுதியானால் எல்லாம் சரியாப் போகும் என்று முருகன் நினைக்க , நிலைமை மாறுகிறது .
பயிற்சியில் தேர்ந்தெடுக்கப் படும் ஆட்களை தீவிரவாதி என்ற அடையாளத்துடனே சுட்டுக் கொன்று அதை தீவிரவாதிகள் வேட்டையாகக் காட்ட, வடக்கத்தி படைப்பிரிவு திட்டமிடுகிறது .
அந்த முகாமே ஒரு முறையான கேம்ப் இல்லை. தவறான காரணங்களுக்காக நடத்தப்படும் ஓர் அரசு அங்கீகாரமற்ற முகாம் என்பது தெரிய வருகிறது (சென்சாரில் இருந்து தப்பி வரணுமே)
முதலில் தேர்வாகும் வடக்கத்தி நண்பனும் மற்ற சிலரும் அப்படி கொல்லப்பட, அடுத்து முருகன் மற்றும் சிலர் தேர்ந்தெடுக்கப்படும் நாளில், படையின் என்கவுண்டர் திட்டம் முருகனுக்கு தெரிய வர ,
பையூரில் அநியாயம் செய்யும் வனத்துறை ஆட்கள் மற்றும் பணக்கார்ரக்ளை கொன்றொழிக்கும் முருகனின் அண்ணன் ஒரு போராளியாக ஆக,
நடந்தது என்ன என்பதே படம்
படத்தின் ,மிகப் பெரிய பலம் . மத்தியய பிரதேஷ், ஜார்கண்ட் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரவிப் பரவி அடர்ந்து கிடக்கும் அந்த தண்டகாரண்யம் காடு ( THE DANTAKA FOREST).
மலைமுகடுகள் , அடர் பச்சையும் வெளிர் பச்சையுமான வனப்பரப்புகள், மலை மரப் புதர்க் கூட்டங்கள், இஷ்டத்துக்கு பருத்து வளைந்து வளர்ந்திருக்கும் மலை மரங்கள், கண் மண் தெரியாமல் கனமாய் நகரும் ஆறுகள் ஓடைகள் , சற்றும் பதட்டமில்லாமல் நிதானமாக நடை பழகும் யானைகள் என்று…. அது ஒரு ராட்சஷ அசத்தல்
இன்னொரு பக்கம் பையூர் காட்டை காட்சிப்படுத்திய வகையிலும் கவர்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை .
ஒரு பழங்குடி குடும்பத் தலைவன் மகனைப் பயிற்சிக்கு அனுப்ப, தன் விளை நிலத்தை விற்று கண்ணீரோடு பணம் கொடுக்கும் காட்சி எடுக்கப்பட்ட விதம் அபாரம். உங்களுக்கு எந்த அளவுக்கு அந்தக் காட்சியின் வாழ்வியல் புரியுமோ அந்த அளவுக்கு அந்தக் காட்சி ஆழமாக உங்களுக்குள் இறங்கும்.
முருகனும் அவன் காதலியும் காட்டுக்குள் மனம் மற்றும் உடல் நிர்வாணத்தோடு பேசுவதும் ‘திரும்ப ஊருக்குள் போக வேண்டாம் . போனால் சாதி வரும் சமூகம் வரும் ..’ என்ற ரீதியிலும் பேசும் காட்சி மேட்டிமைத்தனமானது.
முருகன் போன் செய்ய வெளியே போக, அந்தக் காட்சியும் அதன் தொடர்சியான திரைக்கதைப் போக்கும் சிறப்பு .
படையணியின் பயிற்சிக் காட்சிகளை சிறப்பாக எடுத்துள்ளனர் .
படத்தில் காட்டப்படும் காட்சி போன்ற ஒரு விஷயம் வீரப்பன் காட்டிலும் நடந்தது . அப்பாவி மக்களுக்கு வீரப்பன் யூனிபார்ம் போட்டு , அவர்களை சுட்டுக் கொன்று வீரப்பன் ஆட்களைக் கொன்றதாக சீன் போட்டது போலீஸ்.
அது போன்ற ஒரு காட்சியில் லொகேஷன், படமாக்கல் மூலம் வீரப்பன் காட்டுக் கொடுமையையும் இயக்குனர் கனெக்ட் செய்த விதம் பாராட்டுக்குரியது .
கிளைமாக்ஸ் ஏரியாவில் பதட்டம் சிறப்பாக கொண்டு வரப்பட்டுள்ளது
நெருப்பும் சிவப்புமான கம்யூனிசப் பின்னணியில் லெனினிய தீ கம்யூனிஸ்டுகளை உணர வைத்திருக்கிறார் இயக்குனர்
படத்தில் இயக்குனரையும் ஒளிப்பதிவாளரையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. ஷாட்களும் ஒளிப்பதிவும் அப்படி பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. சபாஷ் ஒளிப்பதிவாளர் பிரதீப் காளி ராஜா, இளம் வெயில் இளம் மஞ்சள் வெயில் , ஒளிக்கசிவு எல்லாவற்றையும் உணர வைக்கிறார் ஒளிப்பதிவாளர்
ஜஸ்டின் பிரபாகரனின் பாடல் இசையும் பின்னணி இசையும் அபாரம். பாடல் வரிகள் அருமை .
கலையரசன் மிகுந்த உழைப்பைப் போட்டு நடித்துள்ளார் , தினேஷ தனக்கே உரிய பாணியில் சிறப்பாக நடித்துள்ளார் .வின்சு சாம், ரித்விகா ,ஷபீர் , முத்துக்குமார் , அருள்தாஸ் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.
இதற்கு இணையாக படத்தில் பிரச்னைகளும் உண்டு .
இது தமிழ்நாட்டில் இருந்து ஜார்க்கண்ட் போன இளைஞனின் பிரச்சனைதான். நடக்கும் சம்பவங்கள் யாவும் நம்முடையது அல்ல. எப்படி தமிழ் நாட்டில் எது நடந்தாலும் அது அவர்களுக்கு செய்தி தானே? எமோஷன் இல்லையே? அதுபோல் தான் வடக்கே என்ன நடந்தாலும் அது நமக்கும் செய்திதான் . எமோஷன் இல்லை. படத்தின் ஓட்டத்தில் அது எதிரொலிக்கும்
என்னதான் திரைக்கதையில் சரிக்கு சரியாக தமிழ் நாட்டில் நடக்கும் காட்சிகளும் காட்டப்பட்டாலும் கூட வீரப்பன் காடு போன்ற ஓரிரு காட்சிகள் தவிர , மற்ற காட்சிகளில் மனதுக்குள் ஓர் நெருக்கம் ஏற்படவில்லை. ”அவன் கதையை போயி இந்தியில சொல்லு . எனக்கு எதுக்கு ?” என்று தமிழ் ரசிகன் கேட்பான்.
நல்லா இருக்கு என்பதற்காக காட்சிகள் அளவுக்கு மீறி நீள்கின்றன. உதாரணம் ராணுவப் பயிற்சிக் காட்சிகள்.
அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் பெரும்பாலும் எதிர்பார்க்க முடிவதாகவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமலும் நகர்கின்றன .
திரைக்கதை ஆங்காங்கே தேங்கி நிற்க , மாண்டேஜ் காட்சிகளால் படம் நிறைக்கப்படுகிறது . எதற்கு எடுத்தாலும் பில்டப் , ஸ்லோமோஷன் என்று போகிறது
நாயகன் தனக்கு கல்யாணம் நடப்பதாக கனவு காணும்போதே கிளைமாக்ஸ் புரிந்து விடுகிறது . இது புதிய பாதை படத்தில் பார்த்திபன் பயன்படுத்திய பழைய பாதை உத்தி . திரைக்கதை எடிட்டிங் சிரத்தையாக இல்லை.
கிளைமாக்சும் நச்சென்று இல்லை.
ஒரு காட்சியில் இளையராஜா பாட்டு கேட்கும் நாயகன் , தனது தமிழ் நண்பனிடமே (பால சரவணன்) ” இது எங்க இளையராஜா பாட்டு….. ” என்கிறான் . கதைப்படி அவன் பழங்குடி. பால சரவணன் யார் என்று தெரியாது, ஒரு தமிழன் அவ்வளவே,
ஆக, நம்ம இளையராஜா பாட்டு என்பதே சரி . இளையராஜா எல்லா தமிழருக்கும் பொது இல்லையா? சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் ” எங்க இளையராஜா..” என்பது போன்ற சிந்தனை ஒரு மனநோயில்லையா? ஒரு படைப்பு நேர்மை வேண்டாமா?
பொதுவாகவே திரைக்கதையில் ஒரு போராட்டம் சிக்கல் காட்டப்படுகிறது என்றால் அதன் விளைவு- முடிவு, நம்பிக்கை ஊட்டும் விதமாக இருக்க வேண்டும் . அப்போதுதான் ரசிகன் செலவழித்த நேரம் பொதுவில் அர்த்தப்படும்
”இல்லை இல்லை என் கதை அது இல்லை, வேறு ” என்று சொல்லும் உரிமை படைப்பாளிக்கு உண்டு . என்றால் அதற்கேற்ற திரைக்கதை அமைக்கப்பட வேண்டும் . மலையூர் மம்பட்டியான் படக் கிளைமாக்ஸ் போல பிரச்சனை எதிர்பாராத வகையில் வந்து அதிர வைக்க வேண்டும். அந்த வாய் பிளப்பில்தான் அந்த கிளைமாக்சின் வெற்றி இருக்கிறது
படத்தின் கிளைமாக்ஸ் வரும்போது இந்தக் கதைக்குதானா இவ்வளவு பில்டப் . இது எங்களுக்கு புரிஞ்சு ஒரு மணி நேரம் ஆச்சே என்ற அயற்சியே மிஞ்சுகிறது .
எனினும் தண்டகாரண்யம் … ‘தண்ட’ காரண்யம் என்று சொல்லும்படி எல்லாம் இல்லை.
