கீதா ஆர்ட்ஸ் சார்பில் பண்ணி வாசு தயாரிக்க, நாக சைதன்யா , சாய் பல்லவி , கருணாகரன், ஆடுகளம் நரேன். பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை , கல்ப லதா,நடிப்பில் சந்தூ மொண்டேட்டி இயக்கி இருக்கும் தெலுங்குப் படத்தை தமிழில் மொழி மாற்றி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ரிலீஸ் செய்து இருக்கிறது.
தண்டேல் என்ற சொல்லுக்கு குஜராத்தி மொழியில் மரக்கலத் தலைவன் அல்லது மீனவர் குழுவின் தலைவன் என்று பொருள்.
ஆந்திரா ஸ்ரீகாகுளம் பகுதியில் வாழும் மீனவன் ராஜூ (நாக சைதன்யா) . அவனது காதலி அதே மீனவர் சமூகத்தைச் சேர்ந்த சத்யா ( சாய் பல்லவி) ஒன்பது மாதம் கடலிலேயே இருக்கும் ராஜு மூன்று மாதம்தான் கரையில் இருப்பான். அந்த மூன்று மாதங்களும் சத்யாவுக்கு சந்தோஷமோ சந்தோஷம். மீண்டும் கிளம்பும்போது சத்யா புன்னகையோடு வழி அனுப்பினால் ராசி என்பது ராஜுவின் நம்பிக்கை
கடலில் அலையடிப்பது உட்பட பல்வேறு காரணங்களால் அடிக்கடி மீனவர்கள் மரணம் அடையும் நிலையில் இனி நீ கடலுக்குப் போக வேண்டாம் என்கிறாள் சத்யா.
தண்டேலாக இருக்கும் ராஜு மற்ற மீனவக் குடும்பங்களுக்காக மறுபடியும் ஒன்பது மாதக் கடல் பயணத்துக்கு கிளம்ப, சத்யா தடுக்க, ராஜு மீறிக் கிளம்ப , அவனுக்கு புன்னகை வழியனுப்பு செய்யாமல் இருந்து விடுகிறாள் சத்யா.
என் உணர்வை மதிக்காத அவனது காதலும் வேண்டாம் என்று முடிவு செய்து வேறு ஒரு மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள்.
ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் ராஜு குஜராத் போய் கடலுக்குள் மீன் பிடிகும்போது , புயலில் தவறிக் கடலில் விழுந்த ஒரு பாகிஸ்தான் மீனவனைக் காப்பாற்றும் முயற்சியில் கடல் எல்லையைக் கடந்து பாகிஸ்தான் கடலுக்குள் நுழைந்து விட அவனையும் அவனது மீனவர் குழுவையும் கைது செய்யும் பாகிஸ்தான் படை அவர்களை சிறையில் அடைக்கிறது .
அங்கிருக்கும் ஓர் இஸ்லாமியத் தீவிரவாதி இந்தியர்கள் எனபதால் இவர்களையும் இவர்கள் முன் இந்திய தேசத்தையும் அவமதிக்கிறார்கள் .
சத்யாவும் ஊரும் இவர்களது விடுதலைக்கு முயல என்ன ஆனது ? இவர்கள் காதல் என்ன ஆனது என்பதே தண்டேல்
தெலுங்குப் படத்தைத் தமிழில் மொழி மாற்றம் செய்யும்போது எல்லாம் முடிந்தவரை பெயரை அப்படியே தெலுங்கிலேயே இருக்கச செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் தெலுங்கு சினிமாவினர் தண்டேல் என்ற குஜராத்திப் பெயரை தெலுங்குப் படத்துக்கு வைத்ததோடு அதே பெயரில் தமிழுக்கும் கொண்டு வந்துள்ளார்கள். அரசியல் … அரசியல்… !
படத்தில் முதலில் கவர்வது சாய் பல்லவி . படம் முழுக்க சும்மா ஆடித் தீர்த்திருக்கிறார் நடிப்பு , அழகு ,, நடனம் மூன்றிலும் . பிரேமில் அவர் இருந்தால் பார்வை வேறு எங்கும் போக மறுக்கிறது. நாக சைதன்யாவும் நடிப்பில் ஓகே .
அந்தக் கேரக்டரின் கடைசிக் காட்சி என்ன என்பது முதல் காட்சியிலேயே தெரிந்து விடும்படியான ஒரு ஆதிகாலக் கதாபாத்திரத்தில் கருணாகரன் வந்து பேசிப் போகிறார் .
கடல் புற லொகேஷன்கள் , கடலின் ஆரவாரம், என்று கதை நிகழும் சூழல் மயக்குகிறது .
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை , ஷம்தத் சைனுதீனின் ஒளிப்பதிவு இரண்டும் படத்தை பல உயரங்களுக்கு தூக்கி நிறுத்துகிறது. பாடல் இசை பின்னணி இசை இரண்டிலும் அசத்தி இருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.
மிக லூசான மெதுவாக நகரும் முதல் பாதி .
இரண்டாம் பகுதியில் தேச பக்தி வியாபாரம் தூக்கலாக இருந்தாலும் அதையும் மீறி படத்தில் ரசிக்க சில காட்சிகள் உண்டு.
‘இதுக்கு மேல் எதுவும் இல்லை…’ என்ற நிலையில் ‘ இதோ ஒண்ணு இருக்கு….’ என்று ஒரு காட்சியைக் கொண்டு வருவது ஒரு திரைக்கதையின் சிறப்பம்சம் .
லகான் படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் அடித்த சிக்சரை வெள்ளைக்காரர் பிடித்து விட்டார் என்று சொலி ஷாக் கொடுத்து, அதன் பின்னர் கேட்ச் பிடித்தவரின் கால் பவுண்டரி லைனுக்கு வெளியே இருப்பதைக் காட்டி அசத்தி இருப்பார்களே, அப்படி .
அந்த பாணியில் ஒரு காட்சி இதிலும் உண்டு . படத்தின் பெஞ்ச் மார்க் காட்சி அது .
மீனவக் குப்பத்திலேயே பிறந்து சகலமும் பார்த்து வளர்ந்த சத்யா, திடீர் என்று கடலுக்குப் போகவே வேண்டாம் என்பது யதார்த்தமாக இல்லை. ”இல்லையில்லை அதுதான் கதை….” என்றால் மீனவர் மரணங்களையும் மீறி அதை நியாயப்படுத்தும் அழுத்தமான காட்சிகள் தேவை. அது இல்லை.
கடலில் சாகப் போன பாகிஸ்தான்காரரை காப்பற்றதானே ராஜுவும் அவர் ஆட்களும் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் தெரியாமல் போய் விட்டார்கள். இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட பின்பு அவர் ஏன் உண்மையைச் சொல்லவில்லை. அவர் என்ன ஆனார்? அப்படி ஒரு முக்கிய விஷயம் பற்றி அதன் பிறகு காட்சிகள் இல்லாமல் அம்போ என்று விட்டது என்ன நியாயம் ?
உண்மைக் கதை என்று வேறு சொல்கிறார்கள் .
ஆந்திராவுக்கு எல்லாம் ஓகே.
ஆனால் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தினமும் இதை விடக் கொடுமையான கஷ்டங்களை, இழப்பை, தண்டனையை, இறப்பை பெறுகிறார்களே ,அதைப் பற்றி எடுக்க யாரும் தயாராக இல்லையே என்ற எண்ணம் வருவது இந்தப் படத்துக்கே மைனஸ்.
அதுவும் சுஷ்மா ஸ்வரராஜும் அவர் இறந்த பிறகு அவரது மகளும் பன்சூரி ஸ்வர ராஜும் இந்த மீனவர்களை காப்பாற்ற பட்ட கஷ்டம் எல்லாம் சொல்லி, ரொம்பவே நெகிழ்கிறது படம்.
ஆனால் ஏராளமான தமிழ் மீனவர்களை இலங்கை அரசு இன்று போல் அன்றும் கொடுமை செய்தபோதும் கொன்று குவித்த போதும் , அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத சுஷ்மா ஸ்வரராஜ் அப்போது எல்லாம் ராஜ பக்சேவிடம் பொட்டி வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்த்ததுதான் நமக்கு ஞாபகம் வந்து தொலைக்கிறது. .
இது தமிழில் மொழி மாற்றம் செய்ய வேண்டிய படமே அல்ல.
அதையும் மீறி இது மொழி மாற்றுப் படம் என்பது எல்லோருக்கும் முழுமையாகத் தெரியும் அளவுக்கு கடமைக்கு தமிழ் வசனமும் பின்னணிக் குரல் சேர்ப்பும் நடந்திருப்பதும் மைனஸ் .
எனினும் தண்டேல்… தண்டம் இல்லை.